சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 20 September 2024

சந்தன பொட்டுக்காரர்

எங்க ஊர்ல பொதுவா பட்டப்பெயர் வைப்பதில் கில்லாடிங்க என்று அப்பா நிறைய சொல்லுவார்.வேடிக்கையாகவே நிறைய பட்டப்பெயர்  உண்டு.இதெல்லாம் அவர் காலத்து கதைகள்.

ஒருவர்க்கு பக்தா என்று பட்டப்பெயர்.எங்க ஊரில் வேலுசெட்டியார் என்று ஒரு அய்யா இருந்தார் .அவர் ஒரு குளத்தை வெட்டி சுற்று சுவரெல்லாம் எடுத்து ,படித்துறை அமைத்து ஒரு பிள்ளையார் கோவிலும் கட்டியிருந்தார்.அதை ஒட்டி ஒரு நந்தவனமும்,கூடவே ஒரு திண்ணை பள்ளிக்கூடமும் கட்டியிருந்தார்.மாணவர்கள் அதிகாலையிலேயே விழித்தெழுந்து வந்து குளித்து விட்டு பள்ளிக்கூடம் செல்வார்கள்.

அதில் ஒருவர் குளித்து விட்டு நந்தவனத்தில் பூப்பறித்து பிள்ளையாருக்கு போட்டு,வலம் வந்து பிள்ளையாரை வணங்கி பாட்டு பாடுவார்.பாடிமுடித்தவுடன் பிள்ளையார் பக்கத்திலே போய் நின்று உரத்த குரலில் "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம் வேண்டிய வரத்தை கேள்" என்பார் .

 உடனே அவர் பாடிய இடத்துக்கே போய் நின்று "வாத்தியார் தொல்லை தாங்க முடியலே அடியும் வாங்க முடியலே எப்படியாவது காப்பாத்து" என்பாராம்.

மீண்டும் பிள்ளையார் அருகில் சென்று நின்றுகொண்டு "பக்தா நீ வேண்டிய வரம் தந்தோம்" என்பாராம் .ஒளிந்திருந்து பார்த்த சக நண்பர்கள் அவருக்கு பக்தா என்ற பட்டப்பெயர் வைத்தனர்.

இன்னும் ஒருவர் சரியாக பேச்சு ,உச்சரிப்பு வராது.சைக்கிள் ஓட்டி பழகஆசை.சைக்கிள் கடைக்காரர் சின்ன பையனை நம்பி சைக்கிள் கொடுக்க பயம்.உனக்கெல்லாம் சைக்கிள் ஓட்ட தர முடியாது .கம்பி ஒடிஞ்சா காசு ரொம்ப செலவாகும் என்றார்.இவரும் வீட்டுக்கு போய் அம்மா சைத்தல் பலதனும் தம்பி தொடிஞ்சா தாசு தெப்பாங்க என்றாராம்.வேறொன்றுமில்லை சைக்கிள் பழகணும்,கம்பி ஒடிஞ்சா காசு கேப்பாங்க என்பதை தான் அவரது மழலை மொழியிலே அவ்வாறு சொல்லியிருக்கிறார் .பிற்காலத்தில் நன்றாக பேச்சு வந்தாலும் சைத்தல் பலதனும் என்ற பட்டப்பெயர் ரொம்ப நாளிருந்தது.  

எங்க தட்சிணாமூர்த்தி மாமா நாடக பிரியர்.அந்தக்காலத்திலேயே சொந்தமாக கதை வசனமெல்லாம் எழுதி "புயலுக்கு முன் அமைதி "என்ற நாடகத்தை இயக்கியிருக்கிறார்.எங்க சொந்தக்காரங்களே அதிகம் நடித்திருக்கின்றனர்.எங்க மாமா ஒருத்தர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.அவருக்கு கதாநாயகன் என்ற பட்டப்பெயர் நிலைத்திருந்தது.எங்க மாணிக்கம் சித்தப்பா முனிவராக வேஷம் போட்டிருக்கிறார்.மாமுனிகள் என்றாலே கைத்தட்டு நிறைய கிடைத்திருக்கிறது.அவரது சொந்த பெயரை சொன்னால் கூட தெரியாது.மாமுனி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். 

இன்னொரு பெரியப்பா அவரது பெயரே எனக்கு தெரியாது.ட்ரூமன் என்று தான் சொல்லுவார்கள்.பிரிட்டிஷ் பிரதமர் ட்ருமெனை போலவே இருப்பதால் அவருக்கு அந்த பெயர்.ஒரு அய்யா எதெடுத்தாலும் கோர்ட்டுக்கு போய் விடுவார்.அவருக்கு கோர்ட்டுப்புலி என்ற பெயர்.இன்னொரு அய்யா வார்த்தைங்கள் ஈட்டி முனையை போல் சுருக்கென்றிருக்கும்.அவருக்கு ஈட்டி முனை என்றபெயர்.

எங்க தட்சணா மாமாவின் அப்பாவிற்கு புலவர் என்ற பெயர்.அவர் எழுதிய நிறைய பாடல்களை பனை ஓலையில் பார்த்திருக்கிறேன்.எதுவும்அச்சானதில்லை.சாகும்போது அவரோடு போட்டு எரித்துவிட்டார்கள்.அவர் எழுதிய ஒரு கவிதை மட்டும் எனக்கு தெரியும்.முக சவரம் செய்ய நாவிதரிடம் சென்று சவரம் செய்துகொள்ளும்போது வெட்டுப்பட்டு ரத்தம் வந்து விட்டதால் கோவப்பட்டு பாடியிருக்கிறார்.

"அம்பட்டன் அழகன் 
அவன் சிறைக்கும் கத்தி 
மண்வெட்டி போலிருக்கும்

மயிரிருக்க தோலெடுக்கும்."

நாங்கள் எப்போதும் புலவர் அய்யா என்றுதான் சொல்லுவோம் அவரது உண்மை பெயரெல்லாம் தெரியாது.

வச்ச உலை இறக்கி என்று ஒருவருக்கு பட்டப்பெயருண்டு .அந்த காலத்தில் அரிசிக்கு பஞ்சம் இருந்ததால் அரிசி ஓர் மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்துக்கு கொண்டு செல்ல தடை இருந்தது.நெல்லுக்கு லெவி இருந்ததால் அரிசி கடத்தல் நடைபெறும்.கள்ள சந்தையில் அதிக விலைக்கு   கிடைக்கும் .அந்த நேரத்தில் ஒருவர் கள்ள சந்தையில் அரிசி விற்று வந்தார்.முன் கூட்டியே பணம் வாங்கி சென்றுவிட்டு பிறகு தான் அரிசியை கொண்டுவந்து தருவார். ஒருமுறை அரிசி கொண்டுவருகிறேன்,நீங்கள் உலையில் வையுங்கள்,இதோ வருகிறேன் என்று பணம் வாங்கி சென்றவர்   திரும்பி  வரவே இல்லை.  இவரை நம்பி உலை வைத்தவர் கடைசிவரை அரிசி வராததால் வைத்த உலையை இறக்கி வைக்க வேண்டியதாயிற்று.அதனால் வயிற்றெரிச்சல்பட்டு வச்ச உலை இறக்கி என்ற பட்டப்பெயரை வைத்தார்.

இன்னொருவருக்கு ஓசிப்பீடி என்ற பட்டப்பெயர்.வசதியானவர் என்றாலும் ஓசியில் மட்டுமே பீடி பிடித்ததால் அந்த பட்டப்பெயர் வந்தது,  

இவ்வாறு நிறைய பட்ட பெயர்கள் இருந்தன .சில பட்ட பெயர்களை சொன்னால் அவர்களது உறவினர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.ஏனென்றால் அவர்கள் இப்போது உயிரோடிருக்க வாய்ப்பில்லை.

சந்தன பொட்டுக்காரர்என்றொருவர் இருந்தார்.அவரது பெயரல்லாம் தெரியாது.ஒரே அடையாளம் சந்தன போட்டு தான்.எப்போது பார்த்தாலும் சுத்தமாக அப்போது தான் குளித்தெழுந்து வந்தது போல காட்சியளிப்பார்.எப்போதும் சலவை செய்யப்பட பளீரென்ற உடை.கமகமவென்று வாசனை திரவியம் பூசியிருப்பார்.பக்கத்திலிருப்பவருக்கு வாசனை பழக்கப்படவில்லையென்றால் தலைவலி வந்து விடும். நெற்றியில் அழகாய் சந்தன போட்டு வைத்து நடுவிலே குங்கும பொட்டுவைத்திருப்பார்.எத்தனை நாள் பார்த்தாலும் அந்த சந்தன பொட்டின் அளவு மாறியிருக்காது .அவ்வளவு கண கச்சிதமாக பொட்டு வைப்பார் .நேரம் எடுத்து அதற்கென்று அவ்வளவு சிரத்தையாக பொட்டு வைப்பார்.

தொழிலெல்லாம் ஒன்றுமில்லை.சுகஜீவனம் தான்.சுக ஜீவனம் என்றால் வேறொன்றுமில்லை .முன்னோர்கள் பர்மாவில் சம்பாதித்து சேர்த்து வைத்ததை சுகமாய் அழிப்பது தான் அது.

காலையில் எழுந்தவுடன் காபி,காலைக்கடன்களை முடித்து விட்டு குளியல் ,ஆடை அணிந்து அலங்கரித்தல் காலை உணவருந்தல் , ஊருக்குள் சென்று வெட்டி கதை பேசுதல் மதியம் வந்து உணவருந்தல்  ,பிறகு சின்ன உறக்கம் மாலைசிற்றுண்டி ,திண்ணையில் வெட்டி பஞ்சாயத்து இரவு உணவருந்தல் ,பிறகு உறக்கம்,இதெல்லாம் நித்திய கடமைகள்.ஆனால் எப்போது பார்த்தாலும் சந்தனப்பொட்டு நெற்றியில் திகழ்ந்து கொண்டேயிருக்கும் .

அவரது முன்னோர்கள் காலத்தில் வளர்பிறை போல் வளர்ந்து வந்த செல்வம் ,அவரது காலத்தில் தேய்பிறை போலானாலும் கவலையே படமாட்டார்.அவரது வாழ்க்கை எப்போதுமே சுக ஜீவனம் தான்,

ஒரு முறை அவரது வயலில் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் ஆட்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை .அறுவடை செய்யாவிட்டால் நெல்மணிகள் வயலில் உதிர்ந்துவிடும் நிலை.வேறு வழியில்லாமல் அவரது குடும்பத்து பெண்கள் உள்பட வேலையாட்களுடன் வயலுக்கு சென்று அறுவடை செய்யும்போது மழை தூற்றல் போட ஆரம்பித்தது.எல்லோரும் வேகவேகமாக கதிர்கட்டை பாதுகாக்க ஓடினார்கள்.இவர் மட்டும் கையை கொண்டு நெற்றியை மறைத்தவாறே மழையில்லாத இடத்திற்கு  ஓடினார்.

நெல்மணி வீணாக போகிறது என்று இவரை தடுத்தவுடன் கத்தினார்  .மயிறு நெல்லு போகுது.என்னோட சந்தன பொட்டு போனால் என்பேரு என்னாவது 


No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...