சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 12 September 2024

முதல் பந்தி

 எங்கள் அப்பா சிறு வயதில் ஏராளமாய் கதைகள் சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்.அம்மாதிரி கதைகளில் ஒன்று .

சமஸ்தான ராஜாவுக்கு பொழுதுபோகலைன்னா ஆஸ்தான அவையை கூட்டி மந்திரி பிரதானிகள் அறிஞர்களை உசாவிகொண்டிருப்பார் .வேறொண்ணுமில்லை அல்லக்கைகளை கூட்டி வைத்து அறுத்து கொண்டிருப்பார்.அன்றைக்கு என்னவோ ஞானோதயம் வந்து பாவ புண்ணியங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர் .தான தர்மங்களைப்பற்றி பேச்சு வந்தது.தானங்களில் சிறந்தது பற்றி பேசும்போது கல்வி தானம் ஆடை தானம் அன்னதானம் என்றெல்லாம் வந்தது. பசி எடுக்கிற நேரமோ என்னவோ அன்ன தானத்தில் வந்து நின்றது.

அந்தநேரம் திருவிழா மாதிரி ஏதும் இல்லாததால் ராஜாவின் பிறந்த நாள் அருகில் வரவே மக்களுக்கு விருந்து வைத்தால் விழாவுக்கு விழாவும் ஆச்சு .அன்னதானம் செய்த புண்ணியம் ஆச்சு என ஒரு அல்லக்கை மந்திரி சொல்லவே ராஜாவுக்கு பிடித்து போகவே பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார்.ஆலோசனை சொன்ன அல்லக்கைக்கு பரிசும் கொடுத்தார் .

பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுவதென்று திட்டமிட ஆரம்பித்தனர்.

ஆலோசனை சொன்ன அல்லக்கை மந்திரிக்கே பொறுப்பு வழங்கப்பட்டது.சமஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துமக்களுக்கும் உணவிட திட்டமிடப்பட்டது.எல்லா ஊர்களுக்கும் தண்டோரா மூலம் பிறந்தநாள் விருந்து பற்றி அறிவிக்கப்பட்டது.நிறைய மக்கள் கூடுவதால் அரண்மனைக்கு எதிரே உள்ள திடலில் பெரிய பெரிய பந்தல்கள் போடப்பட்டது.

வகை வகையாய் சமைக்க நிறைய பரிசாரகர்கள் அதாங்க சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டனர்

உணவு பொருட்கள்  காய்கறிகளை சுற்று வட்டாரங்களிருந்து வசூலிக்க அரசாங்க காரியக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அவர்கள் என்ன பணம் கொடுத்தா வாங்குவார்கள்.எல்லாம் கட்டாய வசூல் தான்.ராஜாவுக்கு பிறந்தநாளுக்கு இல்லையென்றா சொல்ல முடியும்.மக்களும் தாராளமாய் கொடுத்தார்கள்.கொடுத்தார்களென்ன வசூலிக்கப்பட்டது.  

பிறந்த நாளும் வந்தது.ஏராளமானோர் பரிசு பொருளுடன் கூடினர்.பரிசு பொருள் இல்லாமல் ராஜாவை பார்க்க போகலாமா ..அதனால் பரிசு பொருட்கள் குவிந்தன.புலவர்கள் பாட்டெழுதி குவித்தார்கள்.யாரும் கர்ணனை பாரியை கடையெழு வள்ளல்களை  பார்த்ததில்லையோ அல்லது யாரும் எதுத்து கேட்டுவிடவா போகிறார்கள் என்று ஆளாளுக்கு புகழ்ந்து அள்ளிவிட்டார்கள்.ஒருசிலர் இன்னுமொருபடி மேலே போய் கடவுளுக்கு நிகராய் புகழ்ந்து தள்ளினார்கள்.ராஜா மகிழ்ந்து போய் அவரவர் புளுகிய இல்லை இல்லை புகழ்ந்த அளவிற்கு தகுந்தாற்போல் பரிசுகளை போட்டி போட்டு வாரி வழங்கினார்.

ஒரு வழியாக பாராட்டு மழைக்கு பின் விருந்து ஆரம்பித்தது.குடிமக்கள் சாரி சாரியாய் வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் .இரண்டு மூன்று பந்திகள் முடிந்தன .இன்னும் மக்கள் வந்து கொண்டே இருந்தனர்.   ராஜா சந்தோசமாக உப்பரிகையில் நின்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.அப்போது  அரண்மனை வாசலுக்கு முன்னால் ஒருவன் தரையில் விழுந்து புரண்டு கதறிக்கொண்டிருந்தான்.இதை பார்த்ததும் ராஜா பதறிப்போய்விட்டார்.நம் ராஜ்யத்தில் ஒரு பிரஜை நம் பிறந்த நாளும் அதுவுமா அழுவதா .அவன் பிரச்சனையை உடனே தீர்க்க எண்ணி ஆட்களை அனுப்பி அழுபவனை அழைத்து வரச்சொன்னார் . 

அவனிடம் என்ன கவலையப்பா என் பிறந்த நாளில் இப்படி கதறுகிறாயே உன் பிரச்சனையை கூறு என்றார்.அவனும் ராஜா உங்க பிறந்தநாள் விருந்துக்காக பத்துகல் தொலைவிலிருந்து ஓடிவருகிறேன் நான் வருவதற்குள் முதல் பந்தி ஆரம்பித்து விட்டார்கள் இப்ப என்னகிடைக்குமோ தெரியவில்லை என்று கதறினான்.என்னடா சோத்துக்கு செத்தவனை இருக்கிறானே என்று நினைத்து மந்திரியிடம் முதல் பந்தியில் என்னென்ன வைத்தார்களோ அதைபோல் இரண்டு மடங்கு வைத்து கவனியுங்கள் என்று உத்தரவிட்டார்.அவனும் மகிழ்ந்து போய் ராஜாவின் காலில் விழுந்து சாப்பிட போனான்.  கூடவே விசேஷமாய் கவனிக்க ஆளொருவனையும் அனுப்பி வைத்தார் மந்திரி.

பந்தியில் தனியாய் உட்காரவைத்து முதல் பந்தியில் பரிமாறப்பட்ட வகைகளைப்போல் இரண்டு மடங்கு உணவு பரிமாறப்பட்டது.திருப்தியாய் சாப்பிட்டான்.கழுத்து வரை நிரம்பி விட்டது .எழும்ப முடியவில்லை ,உடணனுப்ப பட்டவன் உதவியோடு அருகில் உள்ள குளத்திற்கு கைகழுவ சென்றவனுக்கு  குனிய முடியாமல் தண்ணீருக்குள்ளேயே இறங்கி கைகழுவும்போது தண்ணீரில் முழுகியிருந்த எருமை மாட்டின் வயிற்றில் முழங்கை இடித்தவுடன் சோகமாய் கத்தினான் .முதல் பந்தியில் சாப்பிட்டவன் செரிக்க தண்ணீருக்குள் உட்காந்திருக்கிறான்போல என்று ....         

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...