சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 26 September 2024

வணிகர்கதைகள்

இதெல்லாம் எங்கப்பா சொன்ன கதைகள்.நான் திரித்து விட்டவை அல்ல.அவர் நகைச்சுவையாய் சொன்ன கதைகள் என்பதால் யாரும் சண்டைக்கு வந்துவிடக்கூடாது.

அந்த காலத்தில்  மூதாதையர் கடலோடி வணிகம் செய்த கதைகளில் ஒரு வில்லங்கமானவர் பற்றிய கதை இது.

இங்கிருந்து பலவிதமான பொருட்களை பாய்மரக்கப்பல்களில் ஏற்றிச்சென்றுவெளிநாடுகளில் விற்றுவிட்டு , அங்கு கிடைக்க கூடிய பொருட்களை இங்கு கொண்டுவந்து விற்பது வழக்கம்.

அவ்வாறு பொருள் ஏற்றிச்சென்ற கப்பல்களில் ஒன்று பாக்கு மூட்டைகளை ஏற்றிச்சென்றது. வில்லங்கமான வணிகர் ஒரு பாதி பாக்கினை கப்பல் தலைவனிடம் கொடுத்து இதையும் கொண்டுவாருங்கள்  .எவ்வளவு கூலி வேண்டுமோ பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.கப்பல் தலைவன் சரியான பைத்தியக்காரன் வந்து சேர்ந்திருக்கிறானே என்று நினைத்து இதெல்லாம் கொண்டு வரமுடியாது என்றிருக்கிறான்.

உங்களுக்கென்ன கூலி எவ்வளவோ வாங்கி கொள்ளுங்கள் என்றான் வணிகன்.

இவனை ஏமாற்ற எண்ணிய கப்பல் தலைவன் சரி ஐந்து பொற்காசு கொடு என்றான்.

சரி தாராளமாய் பெற்றுக்கொள்ளுங்கள் .பத்திரமாய் கொண்டுவந்தால் சரி என்று கூறிவிட்டு பணத்தை எண்ணிவைத்தான்.

கப்பல் தலைவன் பெற்றுக்கொண்டவுடன் எனக்கு அத்தாட்சி எழுதி கொடுங்கள் .நான் கொடுத்த பணத்திற்கு கணக்கு சொல்ல வேண்டுமென்றான் வணிகன்.

எவ்வாறு எழுதி தரவேண்டும் என்று கேட்டான் கப்பல் தலைவன்.

இந்த கப்பலில் இன்ன ஊரை சேர்ந்த இன்னார் மகன் இன்னாருக்கு சொந்தமான பாதி பாக்கினை கொண்டு வருவதற்கு கூலியாக ஐந்து பணத்தை பெற்றுக்கொண்டதற்கு இதுவே ரசீது ஆகும் என எழுதி வாங்கி கொண்டான்  வணிகன்.

கப்பல் போய் ஊர் சேர்ந்தவுடன் ,கப்பலில் வரும் பாக்குமூடைகளில் பாதியை எடுத்து வைக்க சொன்னான்.

கேட்டதற்கு நீதானே கப்பலில் வரும் பாக்கில் பாதி எனக்கு சொந்தமென்று எழுதி கொடுத்திருக்கிறாய் என்று வாதம் செய்தான்.

அப்படி  ஒரு வில்லங்கமான ஆள் அவன்.

ஊரிலே வட்டி தொழில் செய்து வந்தார்.பெரும்பகுதி விவசாயம் செய்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பார்.பெரும்பாலான விவசாயிகளுக்கு எழுத படிக்க தெரியாது.அதனால் அவர் சொன்னது தான் கணக்கு.அறுவடை காலம் முடித்த பின் பணத்தை மொத்தமாக கொடுத்து கணக்கை தீர்க்க வருவார்கள் விவசாயிகள்.இவர் கொஞ்சம் வேகமாக பேசுவார்.கடகடவென்று விரல் விட்டு மாதங்களை ஆடியிலிருந்து தைக்கு பன்னிரண்டு மாதங்களென கணக்கிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு கொஞ்சம் பணத்தை அவர்கள் கையில் கொடுத்து வீட்டில் பிள்ளைகளுக்கு தின்பண்டம்,பொருட்கள் வாங்கி செல்லுங்கள் என்பார்.

அவர்களும் பணம் மீதம் பிள்ளைகளுக்கு பெருந்தன்மையாய் கொடுக்கிறார் என்று பெருமையாய் பாராட்டி செல்வார்கள்.

அவர் முகச்சவரம் செய்து கொள்ளும்போது கொஞ்சம் பயப்படுவார்.சவரத்தொழிலாளி கத்தியை கழுத்தருகில் கொண்டுவரும்போது ,என்னப்பா உன் பெண்டு பிள்ளைகளெல்லாம் எப்படி இருக்கிறார்கள் .வீட்டுக்கு போகும்போது ஆச்சியிடம் தின்பண்டங்கள் வாங்கிட்டு போ சொல்லியிருக்கிறேன் என்பார்.ஒருவேளை கழுத்தில் வெட்டிவிட்டால் என்ன செய்வதென்று பயம். 

  இவரை  போலவே இவர் ஆட்களெல்லாம் அநியாய வட்டி வாங்கி ஏமாற்றுகிறார்கள் என்று மகாராஜாவிடம் சிலர் போய் புகார் செய்தனர் 

 மகாராஜா கூப்பிட்டு விசாரித்தார் . மகாராஜாவுக்கு ஏராளமான பரிசு பொருட்களை கொண்டுவந்து பணிந்து சமர்ப்பித்துவிட்டு பணிவாய் நின்றனர்.

"என்ன அநியாய வட்டி வாங்குகிறீர்களாமே "என்று கேட்டார்.

வணிகர்கள் கோரஸாக பதிலளித்தனர்.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மகாராஜா தம்பிடிக்கு தம்பிடி தான் வாங்குகிறோம்.தர்மப்பிரபு தாங்கள் ஆட்சி செய்யும்போது அப்படியெல்லாம் அநியாயம் செய்வோமா மகாராஜா" என்று நைச்சியமாக பதிலளித்தனர்.   

மகாராஜா உச்சி குளிர்ந்து போனார்.வெறும் தம்பிடி தானே என்று நினைத்து அனுப்பிவைத்தார்.புகார் செய்தவர்களை மகாராஜா மிரட்டி அனுப்பிவைத்தார்.

மந்திரிக்கு வருத்தமாய் இருந்தது.நேரம் பார்த்து மகாராஜாவிடம் இவர்களைப்பற்றி விளக்க நினைத்தார்..மகாராஜாவிற்கு பிறந்தநாள் வந்தது.இவர்கள் லட்சணத்தை புரியவைக்க இது தான் நல்ல சந்தர்ப்பம் என நினைத்த மந்திரி மகாராஜாவிடம் ஒரு ஆலோசனை சொன்னார்.மகாராஜாவின் பிறந்தநாளை ஒட்டி கோவிலில் பால் அபிஷேகம் செய்ய ஒரு பெரிய அண்டாவை வணிகர்கள் வசிக்கும் வீதியில் வைத்தனர்.வீட்டிற்கு ஒரு செம்பு பாலை அண்டாவில் ஊற்ற உத்தரவிடப்பட்டது.

அண்டா ஆளுயரத்துக்கு மேல் இருந்தது.எட்டி தான் ஊற்றமுடியும்.எல்லோரும் பால் ஊற்றும்போது நாம் மட்டும் ஒரு செம்பு தண்ணீர் ஊற்றினால் தெரியப்போகிறதென்று எல்லோருமே நினைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒரு செம்பு தண்ணீரை ஊற்றிச்சென்றனர்.

மாலை அண்டாவை எடுத்து சென்று மகாராஜாவும் மந்திரியும் பார்த்த போது மொத்தஅண்டாவுமே தண்ணீரால் நிறைந்திருந்தது.யாராவது ஒருவர் பால் ஊற்றியியிருந்தால் கூட கொஞ்சமாவது வெள்ளையாய் தெரிந்திருக்கும் .எல்லோருமே ஏமாற்றுக்காரர்களென்று மகாராஜா புரிந்து கொண்டார்.



அப்புறமென்ன மண்டகப்படி தான்.

  

கண்ணை திறந்த மகான்

 என்னுடைய முப்பதாவது வயதில் தான் முதன் முதலில் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த போகவேண்டியிருந்தது.சிறு வயதில் கோவிலுக்கு போவதென்பது சகஜமாய் தான் இருந்தது.என் அப்பா ஆத்திக வாதியா நாத்திக வாதியா என்றெல்லாம் தெரியாது.குளித்து முடித்தவுடன் நெற்றிநிறய விபூதி பூசுவார்.மதுரை ருக்மணிபாளயத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த கட்டிடமே மாரியம்மன் கோவில் தான்.அவர் ஒருநாள் கூட நின்று கும்பிட்டதில்லை.வெளியில் எந்த கோவிலுக்கும் கூட்டி சென்றதில்லை.சித்திரை திருவிழா வந்தால் வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு கூட்டி போவார்.தைப்பூசம் அன்று மாரியம்மன் தெப்பக்குள தெப்ப திருவிழாவுக்கு கூட்டி போவார்.மற்றபடி வேறெந்த திருவிழாவுக்கு கூட்டி போனதில்லை.

ஒருமுறை ஓபுளா படித்துறையில் திருவிழாவிற்கு சென்றபோது பாலம் ஏதும் அங்கில்லாத நிலையில் தடுமாறி கீழே விழுந்து விட்டார்.    `என்னை தோளில் சுமந்து சென்றவர் விழும்போது என்னை கீழேபோட்டு என்மேல் விழுந்து விட்டார்.உடனே பதறிப்போய் என்னை தட்டு தடுமாறி தூக்கியவர் மிகவும் சங்கடப்பட்டு போனார்.எனக்கு வேறே ஒன்றும் நினைவில்லை.மற்றபடி அவர் என்னை கோவிலுக்கு அழைத்து சென்றதும் இல்லை.போகாதே என்று சொன்னதும் இல்லை.

எங்கம்மாவுக்கு பக்தி அதிகம் .நாங்கள் குடியிருந்த வீட்டில் ஏழு குடித்தனங்கள் இருந்தன .யார் என்ன ஜாதி என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை .ஒருவர்க்கொருவர் முறை வைத்து அழைத்து கொள்வது வழக்கமாய் இருந்தது.அவரவர் உறவினர்களையும் அந்தந்த உறவுமுறைப்படியே அழைப்போம்.எல்லோரும் ஒற்றுமையாகவே திருவிழா பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.இன்றுவரை அந்த உறவுமுறை தொடர்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.மார்கழி ஆனதென்றால் எல்லா வீட்டுக்காரர்களும் சேர்ந்தே மீனாட்சி அம்மன் கோவில்,பெருமாள் கோவில் என்று போய்வருவோம்.ஆடி மாதம் என்றால் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவருவோம்.அது மாதிரி எந்த விசேஷம் என்றாலும் நண்டு சிண்டுகளை அழைத்துக்கொண்டு பெரியவர்கள் கூட்டி செல்வார்கள்எந்த கோவிலுக்கு கால்நடையாக தான் செல்வோம்.

கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்வதெல்லாம் கிடையாது.சூடம் வாங்கி செல்வோம்.தட்டில் காசு போடுவோம்.எப்போதாவது வேண்டுதல் இருந்தால் உண்டியலில் காசு போடுவோம்.மற்றவகையில் எந்த செலவும் செய்ததாக ஞாபகம் இல்லை.மற்ற வகையில் அம்மாவும் சாமி கும்பிட கட்டாய படுத்தியதும் இல்லை.

வயது கூட கூட கோவிலுக்கு போகும் வழக்கமெல்லாம் குறைந்தது.வாலிபர் சங்க சேர்க்கை பொதுவுடைமை அறிமுகங்கள் வர வர அறவே கோவிலுக்கு போவதில்லை.

நாளடைவில் முழு நாத்திகனாக மாறியபின் இறை எதிர்ப்பாளராகவே மாறிப்போனேன்.திருமணமான பின் மனைவி இறை நம்பிக்கை உள்ளவராக இருந்ததால் அவரை கோவிலுக்கு செல்வதை தடுப்பதில்லை .ஆனால் கோவிலுக்கும் போனதில்லை.

எங்கள் மகன் மூன்று வயதாக இருந்தபோது அம்மை போட்டு குணமடைந்த பின் ,பழனி முருகனுக்கு மொட்டை போடுவதென்று நேர்த்திக்கடன் வைத்தோம்.நானும் என் மனைவியும் நேர்த்திக்கடன் செலுத்த பழனிக்கு போவதாக இருந்தது.உடல் நலம் காரணமாக அவர் வர முடியாததால் நானும் எனது மகனும் செல்வதென்று முடிவானோம்.நேர்த்திக்கடனை முழுமையாக செய்ய சொல்லி அனுப்பி வைத்தார்.

பழனிக்கு சென்று இறங்கியவுடன் ஊரே வித்தியாசமாக் தெரிந்தது.நிறைய குதிரை வண்டிகள் சுற்றிக்கொண்டிருந்தன.சின்ன வயதில் மதுரையில் தான் குதிரை வண்டிகளை நிறைய பார்த்திருக்கிறேன்.சாலை முக்கங்களில் குதிரை லாயங்களும்,குதிரைகள் மற்றும் கால்நடைகள் குளிப்பதற்கென்று தண்ணீர் தொட்டிகளும் இருக்கும்.பள்ளிக்கூடம் சென்று வருகையில் தினமணி டாக்கீஸ் முக்கத்தில் தண்ணீர்த்தொட்டியில் காலை கழுவுவோம்.தண்ணீரில் தவறி விழுந்துவிடக்கூடாதென்று குதிரைவண்டிக்காரர்கள் அதட்டி விரட்டுவார்கள்.

அந்த ஞாபகம் வந்தது.மகனை அழைத்துக்கொண்டு முடி எடுக்க கிளம்பினேன்.எங்கு முடிஎடுப்பதென்று தெரியாது.ஏதாவது குளக்கரை அல்லது ஆற்றுக்கரையில் எடுக்க வேண்டுமென்று நினைத்து யாரிடமாவது கேட்கலாமென்றிருக்கையில் ஒருவர் சப்தமாக முடியெடுக்க இங்கே வாங்க என்றார்.அவர்களுக்கு ஞான திருஷ்டி இருக்கவேண்டும் அல்லது வருகிறவன் முகத்தை பார்த்தே கண்டு பிடித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.பக்கத்தில் உள்ள கட்டிடத்திற்கு கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றார்.அங்கு சிலர்மொட்டைபோட்டுக்கொண்டிருந்தனர். பையனுக்கு மொட்டை போட்டவுடன் அங்கேயே குளித்து முடித்தவுடன் வேகமாக வந்து ஒருவர் பையன் தலையில் சந்தனத்தை தடவிவிட்டு ஐந்து ரூபாய் கேட்டார். முடியெடுத்தவர் பத்து ரூபாய் கேட்டார்.மறுத்து பேச முடியல .பேசியும் பிரயோஜனம் இல்லை.  சந்தனம் பூசியவர் அன்று முழுமைக்கும் ஐந்து ரூபா சந்தனத்திலேயே பிழைப்பை ஒட்டிவிடுவார் என்று நினைக்கிறேன்.  

அர்ச்சனைக்கு சாமான்கள் வாங்க கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கடைப்பக்கம் சென்றோம்.கையை பிடித்து இழுக்காத குறையாக போட்டி போட்டுக்கொண்டு ஆட்கள் அழைத்தனர்.ஒருவர் இங்கேயே செருப்பை போட்டுக்கொள்ளுங்கள் என்று கடைக்கு இழுத்தார்.இவ்வளவு பெருந்தன்மையோடு இருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டு அவர் இழுத்து சென்ற இல்லை இல்லை அழைத்து சென்ற கடையில் செருப்பை கழற்றி போட்டேன்.

நான் முன்னைபின்னை அர்ச்சனை செய்து பழக்கமில்லாததால் என் மனைவி என்ன வாங்கவேண்டுமென்று சின்ன பட்டியலொன்று தயார் செய்து கையில் கொடுத்திருந்தார்.அவர்கள் அதற்கு வாய்ப்பெல்லாம் தரவில்லை .கடையில் எல்லாம் தயாராக உள்ளதென்று கையில் தட்டை திணித்தனர்.பெரிய மாலையெல்லாம் வைத்து இருநூறு ரூபா கேட்டனர்.இவ்வளவு பெரிய மாலையெல்லாம் வேண்டாம் சிறிதாக வையுங்கள் ,விலை அதிகமாக உள்ளதென்றேன். சிறிய மாலை வைத்து விட்டு நூற்றைம்பது கேட்டனர்.எனக்கு மயக்கமே வந்து விட்டது .ஒவ்வொன்றும் இன்ன விலை என்று வேகமாய் பட்டியியலிட்டார்.அய்யர் சொல்ற மந்திரம் கூட புரிந்துவிடும் இவர்கள் விலைசொல்லுகிற வேகமும் மொழியும் ஒன்றும் விளங்கவில்லை.அப்பா தான் வேடிக்கையாக சொல்லுவார்.பூ பத்து,புஸ்பம் பத்து சூடம் அஞ்சு கற்பூரம் அஞ்சு என்று கிண்டலாக சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.பொறுமையாக சொல்லுங்கள் என்று கேட்டேன்.உடனே கடைக்காரர்கள் சட்டென்று கூடுவதுபோல் தெரிந்தது.கல்லாவில் இருந்த பெரியவர் பெருந்தன்மையாக நூற்றுஇருவத்தைந்து கொடுங்களென்று பெருந்தன்மையாக?! கூறினார்.இங்கு இப்படித்தான் வழக்கம் என்றனர் அங்கிருந்தவர்கள்.வேறு வழி இல்லாமல் காசை கொடுத்துவிட்டு அர்ச்சனை சாமான்களை வாங்கிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினேன்.இங்கே செருப்பு போடும் காசு தான் மிச்சம்போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் அர்ச்சனை சீட்டு வாங்குமிடத்தை தேடும் போது அங்கும் வேகமாக ஓடிவந்து வாங்க வாங்க அர்ச்சனை பண்ண நான் கூட்டி போகிறேன் என்றார்.கீழே கிடைத்த அனுபவங்கள் நினைவுக்கு வரவே நாமே பார்த்துக்கொள்ளலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.

அவர் நானும் கோவில் ஆள் தான் என்று ஒரு நீல நிற வில்லையை கட்டிவிட்டு எங்களை குறுக்கு வழியில் அழைத்து சென்றார்.கர்ப்பகிரகம் இருக்கும் மண்டபத்துக்கு அருகில் செல்லும்போது எங்களது அர்ச்சனை தட்டை பறிக்காத குறையாக வாங்கிக்கொண்டு எங்களை விட்டுவிட்டு கூட்டத்துக்குள் மறைந்து சென்றார்,வரிசையை தாண்டிஎங்களால் செல்ல இயலவில்லை.வரிசையில் நின்றவாரே அவரைதேடும்போது ,வேகமாக வந்து எங்கள் கையில் தட்டை  திணித்துவிட்டு ,பையனின் கழுத்தில் பெரிய ரோஜாப்பூ மலையை போட்டார்.

நாம் வாங்கிவந்த மாலை சிறியதாயிற்றே,இது பெரிதாக இருக்கிறதே,என்று நினைக்கையில் ,எல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் தான்,அதுதான் உங்களுக்காக சாமி கழுத்திலிருந்து பெரியமாலையாக வாங்கி வந்தேன்.உள்ளேயே பெரிய அர்ச்சனையாக செய்து பிரசாதம் வாங்கி வைத்துள்ளேன் என்று சொல்லிவிட்டு யாரிடமோ கையசைத்தார்.உடனே லேசாக வழிஉருவாக்கி சட்டென்று உள்ளே அழைத்து சென்று அதேவேகத்தில்வெளியே அழைத்து வந்துவிட்டார்.சாமியை பார்த்த மாதிரியுமிருந்தது.பார்க்காத மாதிரியுமிருந்தது.வெளியே வந்தவுடன் ஐம்பது ரூபாய் கேட்டார். கூட்டத்தை பார்த்தீங்களா,எவ்வளவு சீக்கிரம் தரிசனம் ஏற்பாடு செய்தேன் என்றார். வேறு வழியுமில்லாமல் ஐம்பதை கொடுத்து விட்டு கீழே வந்து சேர்ந்தோம்.   கீழே வந்து பஞ்சாமிர்தம் வாங்கலாம் என்று பார்த்தால் அதே கதை தான் .ஆளாளுக்கு அழைத்தார்கள் .வீட்டில் சொல்லிவிட்டபடி எது ஒரிஜினல் சித்தநாதன்கடை என்று தேடி ஏதோ வாங்கி வந்தேன்.

மலைக்கு மேலே ஏறி கீழே இறங்கும் வரை கால்நடை தான்.பையனும் கால் வலிக்கிறது என்றான்.சரி குதிரைவண்டியில் திரும்பலாமென முடிவு செய்து ஒரு வண்டியை பிடித்தேன்.வண்டி ஓட்டியவர்,வயதானவர். தலை வாராத முடியும் தாடியும் ஒடிசலுமாய் இருந்தார்.லேசாக கிழிந்த ஆடை... குதிரையோ அவரைவிட தொத்தலாய்இருந்தது. அவரிடம் பஸ் ஸ்டான்ட் போக பேரம் பேச ஆரம்பித்தேன்.அவர் கேட்டார்.இதுவரை எவ்வளவு செலவு செய்திருப்பீர்கள்.என்னிடம் போய் பேரம் பேசுகிறீர்களே என்றார்.எனக்கு சுருக்கென்று இருந்தது.பேசாமல் நானும் மகனும் வண்டியில் ஏறினோம் .

பையனை அவர் அருகில் முன்னாள் அமர்த்திக்கொண்டார் .அவனும் உற்சாகமாய் வேடிக்கை பார்த்தபடி வந்தான்.அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி வந்தேன்.வந்ததிலுந்து முடியெடுக்க அர்ச்சனை சாமான்கள்,கோவில் என எல்லா இடத்திலும் இப்படி வழிப்பறி செய்வது போல காசு பறிக்கிறார்களே என்று வினவிக்கொண்டே வந்தேன்.

அவர் பொறுமையாய் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வந்தவர் சொன்னார்.

"தப்பாய் எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் முருகனைத்தானே வணங்க வந்தீர்கள் .நீங்கள் கொடுத்து சாமிக்கு ஏதும் நிரம்ப போகிறதா என்ன .நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அந்த பணத்திற்கு யாராவது ஏழைக்கு உணவோ அல்லது என்ன தேவையோ அதை வாங்கி கொடுங்கள் ,இல்லை உண்டியலில் போடுங்கள் ,கற்பூரத்தை வாங்கி கொளுத்திவிட்டு சாமியை மனதார வணங்கிவிட்டு போங்கள்,வந்த பிரார்த்தனை நிறைவேறும் ,அதை விட்டுவிட்டு இப்படி செலவு செய்தால் ,ஆளாளுக்கு நம்மை ஏமாற்றினார்களே,என்ற நினைப்பு தான் மிஞ்சும்" 

அவர் சொன்ன வார்த்தைகளை  கேடஂடபினஂ அவர் கணஂதிறநஂத மகானாக தெரிநஂதாரஂ

 

Friday, 20 September 2024

சந்தன பொட்டுக்காரர்

எங்க ஊர்ல பொதுவா பட்டப்பெயர் வைப்பதில் கில்லாடிங்க என்று அப்பா நிறைய சொல்லுவார்.வேடிக்கையாகவே நிறைய பட்டப்பெயர்  உண்டு.இதெல்லாம் அவர் காலத்து கதைகள்.

ஒருவர்க்கு பக்தா என்று பட்டப்பெயர்.எங்க ஊரில் வேலுசெட்டியார் என்று ஒரு அய்யா இருந்தார் .அவர் ஒரு குளத்தை வெட்டி சுற்று சுவரெல்லாம் எடுத்து ,படித்துறை அமைத்து ஒரு பிள்ளையார் கோவிலும் கட்டியிருந்தார்.அதை ஒட்டி ஒரு நந்தவனமும்,கூடவே ஒரு திண்ணை பள்ளிக்கூடமும் கட்டியிருந்தார்.மாணவர்கள் அதிகாலையிலேயே விழித்தெழுந்து வந்து குளித்து விட்டு பள்ளிக்கூடம் செல்வார்கள்.

அதில் ஒருவர் குளித்து விட்டு நந்தவனத்தில் பூப்பறித்து பிள்ளையாருக்கு போட்டு,வலம் வந்து பிள்ளையாரை வணங்கி பாட்டு பாடுவார்.பாடிமுடித்தவுடன் பிள்ளையார் பக்கத்திலே போய் நின்று உரத்த குரலில் "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம் வேண்டிய வரத்தை கேள்" என்பார் .

 உடனே அவர் பாடிய இடத்துக்கே போய் நின்று "வாத்தியார் தொல்லை தாங்க முடியலே அடியும் வாங்க முடியலே எப்படியாவது காப்பாத்து" என்பாராம்.

மீண்டும் பிள்ளையார் அருகில் சென்று நின்றுகொண்டு "பக்தா நீ வேண்டிய வரம் தந்தோம்" என்பாராம் .ஒளிந்திருந்து பார்த்த சக நண்பர்கள் அவருக்கு பக்தா என்ற பட்டப்பெயர் வைத்தனர்.

இன்னும் ஒருவர் சரியாக பேச்சு ,உச்சரிப்பு வராது.சைக்கிள் ஓட்டி பழகஆசை.சைக்கிள் கடைக்காரர் சின்ன பையனை நம்பி சைக்கிள் கொடுக்க பயம்.உனக்கெல்லாம் சைக்கிள் ஓட்ட தர முடியாது .கம்பி ஒடிஞ்சா காசு ரொம்ப செலவாகும் என்றார்.இவரும் வீட்டுக்கு போய் அம்மா சைத்தல் பலதனும் தம்பி தொடிஞ்சா தாசு தெப்பாங்க என்றாராம்.வேறொன்றுமில்லை சைக்கிள் பழகணும்,கம்பி ஒடிஞ்சா காசு கேப்பாங்க என்பதை தான் அவரது மழலை மொழியிலே அவ்வாறு சொல்லியிருக்கிறார் .பிற்காலத்தில் நன்றாக பேச்சு வந்தாலும் சைத்தல் பலதனும் என்ற பட்டப்பெயர் ரொம்ப நாளிருந்தது.  

எங்க தட்சிணாமூர்த்தி மாமா நாடக பிரியர்.அந்தக்காலத்திலேயே சொந்தமாக கதை வசனமெல்லாம் எழுதி "புயலுக்கு முன் அமைதி "என்ற நாடகத்தை இயக்கியிருக்கிறார்.எங்க சொந்தக்காரங்களே அதிகம் நடித்திருக்கின்றனர்.எங்க மாமா ஒருத்தர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.அவருக்கு கதாநாயகன் என்ற பட்டப்பெயர் நிலைத்திருந்தது.எங்க மாணிக்கம் சித்தப்பா முனிவராக வேஷம் போட்டிருக்கிறார்.மாமுனிகள் என்றாலே கைத்தட்டு நிறைய கிடைத்திருக்கிறது.அவரது சொந்த பெயரை சொன்னால் கூட தெரியாது.மாமுனி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். 

இன்னொரு பெரியப்பா அவரது பெயரே எனக்கு தெரியாது.ட்ரூமன் என்று தான் சொல்லுவார்கள்.பிரிட்டிஷ் பிரதமர் ட்ருமெனை போலவே இருப்பதால் அவருக்கு அந்த பெயர்.ஒரு அய்யா எதெடுத்தாலும் கோர்ட்டுக்கு போய் விடுவார்.அவருக்கு கோர்ட்டுப்புலி என்ற பெயர்.இன்னொரு அய்யா வார்த்தைங்கள் ஈட்டி முனையை போல் சுருக்கென்றிருக்கும்.அவருக்கு ஈட்டி முனை என்றபெயர்.

எங்க தட்சணா மாமாவின் அப்பாவிற்கு புலவர் என்ற பெயர்.அவர் எழுதிய நிறைய பாடல்களை பனை ஓலையில் பார்த்திருக்கிறேன்.எதுவும்அச்சானதில்லை.சாகும்போது அவரோடு போட்டு எரித்துவிட்டார்கள்.அவர் எழுதிய ஒரு கவிதை மட்டும் எனக்கு தெரியும்.முக சவரம் செய்ய நாவிதரிடம் சென்று சவரம் செய்துகொள்ளும்போது வெட்டுப்பட்டு ரத்தம் வந்து விட்டதால் கோவப்பட்டு பாடியிருக்கிறார்.

"அம்பட்டன் அழகன் 
அவன் சிறைக்கும் கத்தி 
மண்வெட்டி போலிருக்கும்

மயிரிருக்க தோலெடுக்கும்."

நாங்கள் எப்போதும் புலவர் அய்யா என்றுதான் சொல்லுவோம் அவரது உண்மை பெயரெல்லாம் தெரியாது.

வச்ச உலை இறக்கி என்று ஒருவருக்கு பட்டப்பெயருண்டு .அந்த காலத்தில் அரிசிக்கு பஞ்சம் இருந்ததால் அரிசி ஓர் மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்துக்கு கொண்டு செல்ல தடை இருந்தது.நெல்லுக்கு லெவி இருந்ததால் அரிசி கடத்தல் நடைபெறும்.கள்ள சந்தையில் அதிக விலைக்கு   கிடைக்கும் .அந்த நேரத்தில் ஒருவர் கள்ள சந்தையில் அரிசி விற்று வந்தார்.முன் கூட்டியே பணம் வாங்கி சென்றுவிட்டு பிறகு தான் அரிசியை கொண்டுவந்து தருவார். ஒருமுறை அரிசி கொண்டுவருகிறேன்,நீங்கள் உலையில் வையுங்கள்,இதோ வருகிறேன் என்று பணம் வாங்கி சென்றவர்   திரும்பி  வரவே இல்லை.  இவரை நம்பி உலை வைத்தவர் கடைசிவரை அரிசி வராததால் வைத்த உலையை இறக்கி வைக்க வேண்டியதாயிற்று.அதனால் வயிற்றெரிச்சல்பட்டு வச்ச உலை இறக்கி என்ற பட்டப்பெயரை வைத்தார்.

இன்னொருவருக்கு ஓசிப்பீடி என்ற பட்டப்பெயர்.வசதியானவர் என்றாலும் ஓசியில் மட்டுமே பீடி பிடித்ததால் அந்த பட்டப்பெயர் வந்தது,  

இவ்வாறு நிறைய பட்ட பெயர்கள் இருந்தன .சில பட்ட பெயர்களை சொன்னால் அவர்களது உறவினர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.ஏனென்றால் அவர்கள் இப்போது உயிரோடிருக்க வாய்ப்பில்லை.

சந்தன பொட்டுக்காரர்என்றொருவர் இருந்தார்.அவரது பெயரல்லாம் தெரியாது.ஒரே அடையாளம் சந்தன போட்டு தான்.எப்போது பார்த்தாலும் சுத்தமாக அப்போது தான் குளித்தெழுந்து வந்தது போல காட்சியளிப்பார்.எப்போதும் சலவை செய்யப்பட பளீரென்ற உடை.கமகமவென்று வாசனை திரவியம் பூசியிருப்பார்.பக்கத்திலிருப்பவருக்கு வாசனை பழக்கப்படவில்லையென்றால் தலைவலி வந்து விடும். நெற்றியில் அழகாய் சந்தன போட்டு வைத்து நடுவிலே குங்கும பொட்டுவைத்திருப்பார்.எத்தனை நாள் பார்த்தாலும் அந்த சந்தன பொட்டின் அளவு மாறியிருக்காது .அவ்வளவு கண கச்சிதமாக பொட்டு வைப்பார் .நேரம் எடுத்து அதற்கென்று அவ்வளவு சிரத்தையாக பொட்டு வைப்பார்.

தொழிலெல்லாம் ஒன்றுமில்லை.சுகஜீவனம் தான்.சுக ஜீவனம் என்றால் வேறொன்றுமில்லை .முன்னோர்கள் பர்மாவில் சம்பாதித்து சேர்த்து வைத்ததை சுகமாய் அழிப்பது தான் அது.

காலையில் எழுந்தவுடன் காபி,காலைக்கடன்களை முடித்து விட்டு குளியல் ,ஆடை அணிந்து அலங்கரித்தல் காலை உணவருந்தல் , ஊருக்குள் சென்று வெட்டி கதை பேசுதல் மதியம் வந்து உணவருந்தல்  ,பிறகு சின்ன உறக்கம் மாலைசிற்றுண்டி ,திண்ணையில் வெட்டி பஞ்சாயத்து இரவு உணவருந்தல் ,பிறகு உறக்கம்,இதெல்லாம் நித்திய கடமைகள்.ஆனால் எப்போது பார்த்தாலும் சந்தனப்பொட்டு நெற்றியில் திகழ்ந்து கொண்டேயிருக்கும் .

அவரது முன்னோர்கள் காலத்தில் வளர்பிறை போல் வளர்ந்து வந்த செல்வம் ,அவரது காலத்தில் தேய்பிறை போலானாலும் கவலையே படமாட்டார்.அவரது வாழ்க்கை எப்போதுமே சுக ஜீவனம் தான்,

ஒரு முறை அவரது வயலில் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் ஆட்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை .அறுவடை செய்யாவிட்டால் நெல்மணிகள் வயலில் உதிர்ந்துவிடும் நிலை.வேறு வழியில்லாமல் அவரது குடும்பத்து பெண்கள் உள்பட வேலையாட்களுடன் வயலுக்கு சென்று அறுவடை செய்யும்போது மழை தூற்றல் போட ஆரம்பித்தது.எல்லோரும் வேகவேகமாக கதிர்கட்டை பாதுகாக்க ஓடினார்கள்.இவர் மட்டும் கையை கொண்டு நெற்றியை மறைத்தவாறே மழையில்லாத இடத்திற்கு  ஓடினார்.

நெல்மணி வீணாக போகிறது என்று இவரை தடுத்தவுடன் கத்தினார்  .மயிறு நெல்லு போகுது.என்னோட சந்தன பொட்டு போனால் என்பேரு என்னாவது 


Thursday, 19 September 2024

 சரியாக நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இரு சின்ன பையன்கள் மதுரையிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள்.அவர்களை சின்ன பையன்கள் என்று சொல்வதில் தப்பில்லை.மீசைகூட முளைக்காத டீன் ஏஜ் பையன்களை எப்படி அழைப்பது.இருவரும் பட்டயபடிப்பு முடித்து வேலைக்காக மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.

இருவருமே ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள்.படிப்பை தவிர வேறு ஒன்றுமில்லை.இருவருமே ஒன்றாக கல்லூரியில் படித்தார்கள்.ஒன்றாய் என் சி சி யில் இருந்தார்கள் .வேலை எதிர்காலம் என்று எந்த கனவும் இல்லை.இல்லை என்ன தெரியாது.ஏதோ அவர்கள் நல்லகாலம் அவர்கள் படிப்பு அரசு கல்லூரியில் மட்டுமே இருந்தது.நல்ல மதிப்பெண்கள் இருந்ததால் கல்லூரியில் நேர்மையாகவே இடம் கிடைத்தது.சிபாரிசு ஊழல் ஏதும் இல்லாதால் இலவசமாகவே கிடைத்தது.

 நல்லவேளையாக வேலை காலியிடங்களை விட படித்து வருபவர்கள் குறைவாக இருந்ததால் அனைவருக்கும் வேலை கிடைத்தது.போட்டிக்கு பட்ட படிப்பு ,மேல்பட்டபடிப்பு படித்தவர்கள் வரவில்லை.

நேர்காணலுக்கு போன போது இவர்களை யாரும் பொருட்டாகவே நினைக்கவில்லை.ஏனென்றால் இவ்வளவு சின்ன பையன்கள் நேர்காணலுக்கு வருவார்கள் என்று யாரும் நினைத்திருக்கவில்லை .கடிதத்தை பார்த்த பின் தான் நம்பினார்கள்.வேலை வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள் என்று எண்ணி அவர்களுக்கு அலுவலகத்திலேயே தேனீரெல்லாம் வாங்கிக்கொடுத்து ,வேண்டிய நல்லஇடத்தில் வேலை போட்டுக்கொடுத்து மாவட்ட சுகாதார அதிகாரி அனுப்பி வைத்தார்கள்.

வேலைக்கு சென்ற இடத்திலும் இந்த சின்ன பையன்களை வேலைக்கு வந்தவர்கள் என்று யாரும் நம்பவில்லை.பணிஆணை,மற்றும் சான்றிதழ்களை பார்த்த பின் தான் அவர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டனர்.அவர்கள் வேறு யாருமல்ல இவர்கள் தான்.

த.சக்திவேலுவும்,சீனி.கார்த்திகேயனும் தான் அவர்கள் .

நேர்காணலுக்கு வந்த நாள் 19.9.1978

பணியில்  சேர்ந்த நாள்         20.9.1978.

குருஜி

நாங்கள் சின்ன வயதில் நிறைய சண்டை போட்டுக்கொள்வோம்.அப்போது அப்பா சமாதானப்படுத்த கதைகள் சொல்லுவார்.புகழ்ச்சி ,கோபத்தை அடக்கிவிட்டால் எதையும் சாதிக்கலாம் என்பார்.இரண்டும் இல்லாதவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டால் நிஜ சாமியார்கள் தான் என்பார்.    

எனக்கு சின்ன வயதில் சாமியாரரெல்லாம் பெரிதாக  தெரியாது.

அப்பாவை கேட்டால் 

"பெண்டு பிள்ளை இல்லாதவன்

பிழைக்க வழி காணாதவன் 

சண்டையினால் வீட்டை விட்டோன்

சாமியாராய் போனாரடி "  என்பார் .

மதுரை ருக்மணிப்பாளையத்தில் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் மாரியம்மன் கோவில் இருந்தது.எதிர்புறத்தில் ஒரு பாய் இரும்புக்கடை வைத்திருந்தார்.அவர் பெயரெல்லாம் எங்களுக்கு தெரியாது.குண்டாய்பெரிய தொப்பை வயிறுடன் இருப்பார்.பெரிய தாடி.சட்டையெல்லாம போடமாட்டார். அவரை தேடி காவி வேட்டி,தாடி,நெற்றி,உடம்பு முழுக்க விபூதி பட்டையுடன் கூடிய சாமிகள் வருவார்கள். சத்தமாக,சிரித்துக்கொண்டே தர்க்கம் செய்வார்கள்.ஒரே சிரிப்பாக கேட்கும்.அதே நேரம் கடை முழுக்க புகை மண்டலமாய் இருக்கும்.

பத்தி புகையுடன் பீடி புகை நிறைந்திருக்கும்.எங்களுக்கு ஒன்றும் புரியாது.யாரும் கடைப்பக்கம் போக மாட்டார்கள்.வேறு யாரும் அங்கு வியாபாரம் செய்ய வந்ததாய் நினைவில்லை.அப்படிகடைப்பக்கம்  வருபவர்களில் எங்களுக்கு தெரிந்த சாமியார் ஒருவரும் இருந்தார்.அவரை  நீச்ச தண்ணி சாமியார்  என்று தான் அம்மா சொல்லுவார்கள்.அவர் பெயரெல்லாம் எங்களுக்கு தெரியாது.அவரை வருந்தி வீட்டுக்கு அழைத்தால் கூட வரமாட்டார்.திண்ணையில் உட்கார்ந்துகொண்டு நீராகாரம் வாங்கி குடித்து விட்டு செல்லுவார்.எப்படி வற்புறுத்தி கேட்டுக்கொண்டாலும் சாப்பிட வரமாட்டார்.அவரது உணவு நீராகாரம் மிளகாய் தான்.ஒருமுறை ஊரில் எங்க அக்கா சிறுபிள்ளையாய்இருக்கையில் விளையாட்டுத்தனமாய் விஷ காய் ஒன்றை சாப்பிட்டு வாய்  நுரைதள்ளகிடந்த போது ஏதோமூலிகையெல்லாம் கொடுத்து காப்பாற்றினாராம் அதனால் அவர்மீது எங்கள் குடும்பத்தாருக்கு பக்தி. 

ஒருநாள் திடீரென்று போலீஸ் பாய் கடைக்கு வந்து உள்ளே சோதனை போட்டதில் ஏதோ கஞ்சா இருந்ததாக சொன்னார்கள் ,பாயை பின்கை கட்டாக  கட்டி போலீஸ் இழுத்து சென்றது.பக்கத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் வருத்தம் தான்.பெரியவர் பாய் எல்லோரையும் வாங்க போங்க என்று தான் மரியாதையாய் பேசுவார்.யாரிடமும் சண்டை போட்டதில்லை ,அமைதியானவர்.என்ன செய்வது கஞ்சா வைத்திருந்தது தவறு தானே.கடை மூடப்பட்டது.அப்புறம் சாமியார் யாரும் கடைப்பக்கம் காணோம்.கொஞ்ச நாளில் பாய் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.எனக்கு தெரிந்த சாமியாரெல்லாம் அவ்வளவு தான் அப்போது.

அப்பாவை கதை கேட்டால் எங்கள் ஊர் பக்கத்தில் ஒரு சாமியார் வந்த கதையை சொன்னார்.

ஊருக்கு புதிதாய் சாமியார் ஒருவர் வந்திருக்கிறார்.குதிரையெல்லாம் வைத்திருக்கிறார் என்று பரபரப்பாய் இருந்ததாம்.அவரிடம் ஒரு இளைஞன் போய் சீடனாக சேர கேட்டிருக்கிறான்.. 

"என்னிடம் எதுக்கப்பா சேர வந்திருக்கிறாய்  "என்று கேட்டார் சாமியார்.

"நீங்கள் மிகவும் நல்லவர் ,வல்லவர்,இறைவனுக்கு நிகரானவர்"என்று புகழ்ந்தான் இளைஞன்.

"எனக்கு புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது .நான் மிக சாதாரணமானவன்"என்றார் சாமியார்.

"சாமி ,எனக்கு தெரிந்து புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் கிடையாது.சாதாரண ஆளிலிருந்து,மன்னன் ஏன் சாமியார் வரை புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் கிடையாது.நீங்கள் கோடியில் ஒருவர்.உங்களை போன்றவர் இந்த யுகத்தில் பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் "என்று ஒரேயடியாக புகழ்ந்தாç.

அப்படியா என்று புன்சிரிப்புடன் அவனை சீடனாக ஏற்றுக்கொண்டார் சாமியார்.   

ஒரே புகழ்ச்சியுடன் வேலைக்கு சேர்ந்த சீடன் அவருக்கு எல்லா  சேவை செய்து நம்பிக்கைக்கு பாத்திரமானான்.

சாமியார் நிறைய பக்தி ,பொறுமை,தர்மம், கோபத்தை அடக்குதல் ,எளிமை பற்றியெல்லாம் பிரசங்கம் செய்தார்.

ஜனங்கள் நிறைய பிரசங்கங்கள் கேட்க வந்தனர்.நிறைய காணிக்கைகளை செலுத்தினர்.செல்வம் குவிய ஆரம்பித்தது.சாமியார் உத்திராட்சம் உள்பட அனைத்திலும் தங்கம் பகட்டுகள் என ஆடம்பரமாய் வள ஆரம்பித்தார். 

ஒருநாள் கோபத்தை அடக்குவது பற்றி சாமியார்பிரசங்கம் செய்தார்.

"ஏன் சாமி கோபத்தை அடக்குவது அவ்வளவு எளிதா"என்று கேட்டான் சீடன்.

கோபத்தை அடக்குவது மூச்சு பயிற்சி யோகங்கள்  ,பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்து முடித்தார்.

" கோபத்தை அடக்குவது எளிதா,நீங்கள் எப்படி சாமி அடக்கினீர்கள்" என்று மீண்டும் சீடன்கேட்டான்.

சற்று எரிச்சலான சாமியார் கோபத்தை அடக்குவது பற்றி மீண்டும் மிக விளக்கமாக பிரசங்கம் செய்தார்.

""அப்படியா சாமி உண்மையிலேயே நீங்கள் கோபத்தை அடக்கிவிட்டீர்களா சாமி என்று பவ்வியமாய்  கேட்டான் சீடன்.

சாமியாருக்கு கோபம் வந்தது.இருந்தாலும் கோபத்தை அடக்கி கொண்டு கோபத்தை அடக்குவது பற்றி பேச ஆரம்பித்தார்.

அவர் பேசி முடித்ததும் "என்ன இருந்தாலும் கோபத்தை அடக்குவது கஷ்டம் தானே சாமி பிறந்ததிலிருந்து வரும் குணமாயிற்றே "என்றான் சீடன்.

சாமியாருக்கு சண்டாளமாய் கோபம் வந்தது.கையில் கிடைத்த பொருட்களை தூக்கி எறிந்தார்.புரிந்துகொள்ளாத முட்டாளாய் இருக்கிறாயே ஓடிப்போ என்று கத்தி விட்டு எழும்பி வேகமாய் தன் அறைக்கு திரும்பினார் சாமியார். 


புகழ்ச்சி, தற்பெருமை, கோபத்தை அடக்கிய சாமியின் லட்சணம் இவ்வளவு தான் என்று சீடன் வேறு வேலை பார்க்க போய் விட்டான். 

Wednesday, 18 September 2024

மெய்ப்பொருள் காண்பதறிவு

 மெய்ப்பொருள் காண்பதறிவு   

(அப்பாவை அடிக்கடி தொந்தரவு செய்யும்போது ஏராளமாய் கதைகள் சொல்லுவார்.ரசித்தவைகளில் நினைவில் நின்றவைகளில் ஒன்று )

ஒரு ஊரில் ஆமாம்சாமி என்று ஒருத்தர் இருந்தார்.எதுக்கு ஏதாவது ஒரு பேரை சொல்லி யாரும் சண்டைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது.அவர் ரொம்ப நல்லவர்.பரம சாது .நல்ல உழைப்பாளி.சிக்கனமானவர்.யார் பொருளுக்கும் ஆசைப்பட மாட்டார்..தானுண்டு தன்வேலையுண்டு என்று இருப்பவர்.ஆனால் ஒரே ஒரு கெட்ட பழக்கம்.சட்டென்று ஒரு முடிவுக்கு வரமாட்டார்.எந்த விஷயமானாலும் நிறைய பேரிடம் கருத்து கேட்பார் ,அவ்வளவு தான்.

அந்த காலத்தில் மக்கள்வாகனங்கள் அதிகம் இல்லாததால் நடந்து போய் இங்கிருந்து தங்களிடமுள்ள பொருட்களை கொண்டு போய் விலைக்கு விற்று விட்டு, வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு கால்நடையாய்  தான் வருவார்கள்.நிறைய வியாபாரம் செய்பவர்கள் ,வசதி உள்ளவர்கள் மட்டுமே வண்டி கட்டி போய் வருவார்கள்.மற்றவர்களெல்லாம்  நடைபயணம்  தான்..  ..  

அவர் மனைவி வீட்டில் ஆடு வளர்க்க ஆசைப்பட்டதால் ,வீட்டில் உள்ள விளை பொருட்களை கொண்டு போய் சந்தையில் விற்றுவிட்டு ஆடு ஒன்றை வாங்கி வந்தார்.சந்தை வெகு தூரத்திலிருந்தாலும் கால்நடையாய் வாங்கிக்கொண்டு வந்தார்.வருகின்ற வழியில் இவரது சுபாவத்தை தெரிந்த சில குசும்பர்கள் ஆட்டை களவாட முடிவு செய்தனர்.வலுக்கட்டாயமாய் பறித்து செல்வதைவிட இவரிடம் ஏமாற்றி பறித்துவிட திட்டமிட்டனர். தனித்தனியாய் வந்து பறிக்க திட்டமிட்டனர்.

திட்டமிட்டபடி முதலில் ஒருவன் எதிரில் வந்து பேச்சு கொடுத்தான்.என்னப்பா நல்ல ரக நாயாய்தெரிகிறதே ,என்ன ரக நாய் என்று கேட்டான்.

ஆமாம் சாமிக்கு கோவம் வந்து விட்டது.என்னப்பா நல்ல வெள்ளாடாய் வாங்கி   வந்திருக்கிறேன் .நாய் என்கிறாயே என்றார்.

என்னப்பா ஆச்சு உனக்கு நாயை போய் ஆடு என்கிறாயே பார்த்து போ என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.

கொஞ்ச தூரம் கழித்து இன்னொருவன் வந்து ஏம்பா வாங்குனது தான் வாங்கினாய் ,என் வெள்ளை நிற நாய் வாங்கினாய் ,கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் நாய் வாங்கியிருக்கலாமே என்றான்.

ஆமாம் சாமி  கடுப்பாகி விட்டார்.வாங்கியது கருப்பு நிற வெள்ளாடு.இவன் வெள்ளை நிற நாய் என்கிறானே...

உனக்கென்ன கண் குருடா கருப்பு நிற வெள்ளாட்டை வெள்ளை நிற நாய் என்கிறாயே என்றார்.

என்னய்யா உனக்கு நிறமும் தெரியல நாயும் தெரியல உன்ன ஏமாத்திட்டாங்க போ என்று சொல்லிவிட்டு போய்விட்டான் .

இவர் கொஞ்சம் குழப்பமாக ஆரம்பித்து விட்டார்.   

இன்னும் கொஞ்ச தூரம் போனபின் இன்னுமொருவன் வந்தான்.

வந்தவன் நல்ல நாயாய் தான் வாங்கியிருக்கிறாயே,ஒரு கழுத்து சங்கிலி வாங்கி  கட்டி வந்திருக்கலாமே,வெறும் கயிறு கட்டியிருக்கிறாயே நாய்க்கு வலிக்காதா என்றான்.

பொறுமைசாலியான ஆமாம் சாமிக்கு கோபம் வந்துவிட்டது.

என்னய்யா வெள்ளாடு வாங்கி வந்திருக்கிறேன்.நாய்..கழுத்து சங்கிலி என்று உளறுகிறாய் என்று கோவித்துக்கொன்டே சென்றார்.

பொழுது சாய ஆரம்பித்து விட்டதால் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

இன்னும் கொஞ்ச தூரம் சென்ற பின் ஒருவன் வந்து நாய் என்னப்பா இப்படி குரைக்குது,யாரையாவது கடித்து விடப்போகிறது ஜாக்கிரதையாய் கொண்டு போப்பா என்றான்.ஆடு அப்பதான் மே மே என்று கத்தியது.

ஆமாம் சாமிக்கு பயங்கரமாய் கோபம் வந்தது.ஆடு மே என்று கத்துகிறது.நீ என்ன செவிடா நாய் குறைக்கிறது என்கிறாய் என்று கத்திவிட்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தார்.  

நன்கு இருட்ட ஆரம்பித்தது.

வரும் வழியில் சின்ன பாலம் ஒன்று .அசதியாக பாலக்கட்டையில் உட்கார்ந்தார். சற்று தூரத்தில்  ஒரு ஆலமரம் இவருக்கு பயங்கரமாய் தெரிந்தது.சேர்ந்த்தாற்போல நாய் குறைக்கும் குரல் கேட்டது.

நல்ல நாளிலேயே பத்து பேரிடம் ஆலோசனை கேட்பவர்.வந்தவனெல்லாம் நாய் என்கிறார்கள்.தன் கண்களையும் ,காதுகளையும் சந்தேகப்பட ஆரம்பித்தார்.விடாமல் நாய் குறைக்கும் சத்தம்.

வெள்ளாட்டை அவிழ்த்து விட்டு விட்டு வேகமாய் நடந்தார்...


பின்னாலேயே பொறுமையாய் வந்த குசும்பர்கள் ஆட்டை எளிதாய் லவட்டி சென்றார்கள். 

Monday, 16 September 2024

மஞ்சு விரட்டு என்னும் வீர விளையாட்டு

மஞ்சு விரட்டு என்னும் வீர விளையாட்டு 

எங்கள் அப்பாவிடம் மஞ்சு விரட்டு என்னும் வீர விளையாட்டு பார்க்க கேட்டு தொந்தரவு செய்வோம் .அவரும் சளைக்காமல் அழைத்து செல்வதாக கூறுவார்.ஆனால் அழைத்து சென்றதில்லை.வீர விளையாட்டு பற்றி கேட்பதற்கு ஆமாம் வீரவிளையாட்டு தான் மாட்டிற்கு என்பார்.சுற்றிவர மனிதர்கள் சூழ்ந்து கொண்டு மாட்டினை தொந்தரவு செய்யும்போது தப்பி ஓடுவது மாட்டுக்கு வீர விளையாட்டு தான் என்பார் .

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு அழைத்து சென்று காட்டினார்.ஜெமினி கணேசன் மாட்டை அடக்கும் காட்சி வரும்போது நாங்கள் உற்சாகமாக கத்தும் போது ,மாட்டை காலை கட்டிவிட்டு,அரை மயக்கத்தில் கொம்பை பிடித்து அடக்குவதை வெறும் முகத்தையும் கொம்பையும் நடிகரை மட்டும் காட்டி ஏமாற்றுகிறார்கள் என்று விளக்குவார்.  

அப்படியானால் நிஜமாகவே மாட்டை அடக்குபவர்கள் இல்லையா என்று கேட்போம் .அவர் எங்கள் பகுதியில் ஒரு அய்யர் நிஜமாகவே அடக்குவதில் கில்லாடி என்பார்.உண்மையிலேயே அப்படி ஒருவர் இருந்தாராம்.சரியான முரடர்.நன்றாக குடிப்பார் ,எப்போதும் கண்கள் சிவந்தே இருக்கும் என்பார்.மஞ்சுவிரட்டு வந்துவிட்டால் வேட்டியை மடித்து இறுக்கி கட்டிவிட்டு பூணூலை இடுப்பில் இருக்க கட்டி களத்தில்  இறங்கிவிட்டால் மாடுகளுக்கு திண்டாட்டம் தானாம் .தரையோடு தரையாக உருண்டு கொம்பில் ஒரு கையும் திமிலில் லாவகமாக கைபோட்டு உடும்பு பிடியாக  பிடித்து அடக்கி விடுவாராம்.யாரையும் கூட்டு சேர்க்காமல் தனியாக களமாடுவாராம்.எவ்வளவு கிடைத்தாலும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல் செலவழித்துவிடுவாராம்.

உண்மையிலேயே அய்யர் தானாஎன்று சந்தேகம் வந்து விடுமாம்.ராமாயணம் பற்றி கேட்டால் ராமன் பொண்டாட்டியை இராவணன் தூக்கிட்டு போனான் அனுமனை கூட்டிட்டுபோய் அடிச்சு பிடுச்சு கூட்டிட்டு வந்தான் அவ்வளவு தான் ராமாயணம் போங்கடா என்பாராம்.

அது சரி ...அவர் கதை நமக்கெதுக்கு .வேற சொல்லுங்கப்பா என்போம்.  

எங்க அய்யாவுக்கு நெருங்கிய நண்பர்குடும்பம் கருமலைக்கு அருகில் இருந்ததாம்.அண்ணன் தம்பிகள் என இருவர் .அவர்கள் பெரிய குடித்தனக்காரர்களாம்.நிறைய வயல் மாடுகள் என செல்வாக்கு மிக்கவர்களாம்.ஒரு ஆட்டு கறியை  அவர்கள் இரண்டுபேரும் அய்யாவும் சேர்ந்தே தின்று விடுவார்களாம்.சண்டை என்று வந்து விட்டால் இருவரும் சிலம்பு ஆடி ஊரையே துரத்தும் அளவுக்கு வல்லமை  படைத்தவர்களாம். 

மஞ்சு விரட்டு என்று வந்துவிட்டால் வீட்டில் வளர்த்து வந்த ஒரு தொத்தல் மாட்டுக்கு நல்ல அலங்காரம் செய்து கொம்புக்கு கரை வைத்த பட்டு வேட்டிகட்டி  ஒரு சிறுவனுடன் அனுப்பி வைப்பார்களாம்.அவனும் கையில் ஒரு வேல்கம்பை பிடித்தவாறு மாட்டை ஒட்டிக்கொண்டு வீதி முக்கத்தில் நிற்பானாம்.உள்ளூர் ஆட்கள் அவரவர் பங்குக்கு மாட்டின் கொம்பிலும் கழுத்திலும் புது வேட்டிகளை கட்டிவிடுவார்கள்.எல்லோருக்கும் அவ்வளவு அன்பு..வேறே வழி...

ஏற்கெனவே தொத்த மாடு ,இதில் பாரம் தாங்கமுடியாத அளவுக்கு பரிசு பொருட்கள் .மாடு தலை தூக்க முடியாமல் குனிந்தே தான் வரும்.மாட்டு தொழுவில் கட்டி விட்டு அய்யாமாரின்அனுமதிக்காக காத்திருப்பர் .அனுமதி வந்தவுடன் கோயில்  காளை அவிழ்த்து விட்டபின் முதல் மாடாக அய்யாமாரின் மாடு அவிழ்த்து விடப்படும்.எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் ,எவ்வளவு பெரிய மாடுபிடிவீரராக இருந்தாலும் அப்படியே ஒதுங்கி மாடு போக வழி விட்டு ஒதுங்கி நிற்பர்.பின்னாடியே சிறுவன் வேல்கம்புடன் மாட்டை தொட்டு விட்டு அடிவாங்க அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.தப்பித்தவறி எவனாவது தெரியாத வெளியூர்காரன் மாட்டை தொட்டாலே அவனக்கு பொங்கல் தான்..    

இப்படிப்பட்ட காளை ஒரு மஞ்சு விரட்டில் தடுமாறி விழுந்து இறந்து போயிற்று.அதன் துக்கம் தாங்காததாலோ  ,அல்லது வயது முதிர்ந்து விட்டது போதும் இந்த விளையாட்டு என்று அய்யாமார் நினைத்ததாலோ   என்னவோ அதற்கு பிறகு மஞ்சு விரட்டிக்காக மாடு வளர்க்கவில்லை .அந்த ஊர் மக்களும் நிஜமாகவே மஞ்சுவிளையாட்டை கொண்டாட ஆரம்பித்தனர்.

(உங்கள் ஊரில் யாராவது மாடு பிடிக்கையில் ஆட்கள் அடித்தால் அதை இந்த கதையுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல )   

Thursday, 12 September 2024

அபுதாபி அரண்மனையில்


 

அபுதாபியில் காலை நடைபயிற்சி


 

முதல் பந்தி

 எங்கள் அப்பா சிறு வயதில் ஏராளமாய் கதைகள் சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்.அம்மாதிரி கதைகளில் ஒன்று .

சமஸ்தான ராஜாவுக்கு பொழுதுபோகலைன்னா ஆஸ்தான அவையை கூட்டி மந்திரி பிரதானிகள் அறிஞர்களை உசாவிகொண்டிருப்பார் .வேறொண்ணுமில்லை அல்லக்கைகளை கூட்டி வைத்து அறுத்து கொண்டிருப்பார்.அன்றைக்கு என்னவோ ஞானோதயம் வந்து பாவ புண்ணியங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர் .தான தர்மங்களைப்பற்றி பேச்சு வந்தது.தானங்களில் சிறந்தது பற்றி பேசும்போது கல்வி தானம் ஆடை தானம் அன்னதானம் என்றெல்லாம் வந்தது. பசி எடுக்கிற நேரமோ என்னவோ அன்ன தானத்தில் வந்து நின்றது.

அந்தநேரம் திருவிழா மாதிரி ஏதும் இல்லாததால் ராஜாவின் பிறந்த நாள் அருகில் வரவே மக்களுக்கு விருந்து வைத்தால் விழாவுக்கு விழாவும் ஆச்சு .அன்னதானம் செய்த புண்ணியம் ஆச்சு என ஒரு அல்லக்கை மந்திரி சொல்லவே ராஜாவுக்கு பிடித்து போகவே பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார்.ஆலோசனை சொன்ன அல்லக்கைக்கு பரிசும் கொடுத்தார் .

பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுவதென்று திட்டமிட ஆரம்பித்தனர்.

ஆலோசனை சொன்ன அல்லக்கை மந்திரிக்கே பொறுப்பு வழங்கப்பட்டது.சமஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துமக்களுக்கும் உணவிட திட்டமிடப்பட்டது.எல்லா ஊர்களுக்கும் தண்டோரா மூலம் பிறந்தநாள் விருந்து பற்றி அறிவிக்கப்பட்டது.நிறைய மக்கள் கூடுவதால் அரண்மனைக்கு எதிரே உள்ள திடலில் பெரிய பெரிய பந்தல்கள் போடப்பட்டது.

வகை வகையாய் சமைக்க நிறைய பரிசாரகர்கள் அதாங்க சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டனர்

உணவு பொருட்கள்  காய்கறிகளை சுற்று வட்டாரங்களிருந்து வசூலிக்க அரசாங்க காரியக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அவர்கள் என்ன பணம் கொடுத்தா வாங்குவார்கள்.எல்லாம் கட்டாய வசூல் தான்.ராஜாவுக்கு பிறந்தநாளுக்கு இல்லையென்றா சொல்ல முடியும்.மக்களும் தாராளமாய் கொடுத்தார்கள்.கொடுத்தார்களென்ன வசூலிக்கப்பட்டது.  

பிறந்த நாளும் வந்தது.ஏராளமானோர் பரிசு பொருளுடன் கூடினர்.பரிசு பொருள் இல்லாமல் ராஜாவை பார்க்க போகலாமா ..அதனால் பரிசு பொருட்கள் குவிந்தன.புலவர்கள் பாட்டெழுதி குவித்தார்கள்.யாரும் கர்ணனை பாரியை கடையெழு வள்ளல்களை  பார்த்ததில்லையோ அல்லது யாரும் எதுத்து கேட்டுவிடவா போகிறார்கள் என்று ஆளாளுக்கு புகழ்ந்து அள்ளிவிட்டார்கள்.ஒருசிலர் இன்னுமொருபடி மேலே போய் கடவுளுக்கு நிகராய் புகழ்ந்து தள்ளினார்கள்.ராஜா மகிழ்ந்து போய் அவரவர் புளுகிய இல்லை இல்லை புகழ்ந்த அளவிற்கு தகுந்தாற்போல் பரிசுகளை போட்டி போட்டு வாரி வழங்கினார்.

ஒரு வழியாக பாராட்டு மழைக்கு பின் விருந்து ஆரம்பித்தது.குடிமக்கள் சாரி சாரியாய் வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் .இரண்டு மூன்று பந்திகள் முடிந்தன .இன்னும் மக்கள் வந்து கொண்டே இருந்தனர்.   ராஜா சந்தோசமாக உப்பரிகையில் நின்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.அப்போது  அரண்மனை வாசலுக்கு முன்னால் ஒருவன் தரையில் விழுந்து புரண்டு கதறிக்கொண்டிருந்தான்.இதை பார்த்ததும் ராஜா பதறிப்போய்விட்டார்.நம் ராஜ்யத்தில் ஒரு பிரஜை நம் பிறந்த நாளும் அதுவுமா அழுவதா .அவன் பிரச்சனையை உடனே தீர்க்க எண்ணி ஆட்களை அனுப்பி அழுபவனை அழைத்து வரச்சொன்னார் . 

அவனிடம் என்ன கவலையப்பா என் பிறந்த நாளில் இப்படி கதறுகிறாயே உன் பிரச்சனையை கூறு என்றார்.அவனும் ராஜா உங்க பிறந்தநாள் விருந்துக்காக பத்துகல் தொலைவிலிருந்து ஓடிவருகிறேன் நான் வருவதற்குள் முதல் பந்தி ஆரம்பித்து விட்டார்கள் இப்ப என்னகிடைக்குமோ தெரியவில்லை என்று கதறினான்.என்னடா சோத்துக்கு செத்தவனை இருக்கிறானே என்று நினைத்து மந்திரியிடம் முதல் பந்தியில் என்னென்ன வைத்தார்களோ அதைபோல் இரண்டு மடங்கு வைத்து கவனியுங்கள் என்று உத்தரவிட்டார்.அவனும் மகிழ்ந்து போய் ராஜாவின் காலில் விழுந்து சாப்பிட போனான்.  கூடவே விசேஷமாய் கவனிக்க ஆளொருவனையும் அனுப்பி வைத்தார் மந்திரி.

பந்தியில் தனியாய் உட்காரவைத்து முதல் பந்தியில் பரிமாறப்பட்ட வகைகளைப்போல் இரண்டு மடங்கு உணவு பரிமாறப்பட்டது.திருப்தியாய் சாப்பிட்டான்.கழுத்து வரை நிரம்பி விட்டது .எழும்ப முடியவில்லை ,உடணனுப்ப பட்டவன் உதவியோடு அருகில் உள்ள குளத்திற்கு கைகழுவ சென்றவனுக்கு  குனிய முடியாமல் தண்ணீருக்குள்ளேயே இறங்கி கைகழுவும்போது தண்ணீரில் முழுகியிருந்த எருமை மாட்டின் வயிற்றில் முழங்கை இடித்தவுடன் சோகமாய் கத்தினான் .முதல் பந்தியில் சாப்பிட்டவன் செரிக்க தண்ணீருக்குள் உட்காந்திருக்கிறான்போல என்று ....         

ஓணம் சத்யா

 அபுதாபியில் வணிக வளாகங்களுக்கு சென்ற போது ஓணம் விளம்பரங்களை பார்த்தேன்.ஓணம் பண்டிகைகளுக்கு ஓணம் சத்யா விளம்பரங்கள் நம்பூதிரி சமையல் விளம்பரங்களை பார்த்த போது அந்த காலத்தில் அப்பா சிரிக்க சிரிக்க ஏராளமாய் கதைகள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

அந்த காலத்தில் ஒரு சமஸ்தான ராஜா சாப்பாட்டுபிரியராக இருந்தார்.ஒருத்தரென்ன அநேகமாக எல்லோருமே அப்படித்தானே இருந்தார்கள் .அவர் மந்திரியிடம் சாப்பாடு பற்றி குறைப்பட்டு கொண்டார் .எப்ப பார்த்தாலும் வச்ச வகைகளையே வைக்கிறார்கள் .புதுசு புதுசா வகையான உணவு சமைக்க ஏற்பாடு பண்ண சொல்லி கேட்டுக்கொண்டார்.

மந்திரியும் அலைந்து திரிந்து ஒரு நம்பூதிரியை கூட்டி வந்தார்.ராஜா நம்பூதிரியிடம் உணவு பற்றி பேசினார்.இவர் பேசுறது அவருக்கு புரியல .அவர் சொல்றது இவருக்கு விளங்களை ஒரு வழியாக புரிய வச்சு அல்லது புரிந்ததா நினைச்சுகிட்டு ராஜா நம்பூதிரிகிட்ட என்ன வேணும்னு கேட்டார்.

அவரும் கொஞ்சம் உண்ணனும் பிறகு உறங்கணும் பின்ன கொஞ்சம் உண்ணனும் பிறகு உறங்கணும் என்றார்.  

சரி இவர் கேக்கறத செய்யுங்க என்றார் ராஜா 

நம்பூதிரி சாப்பிட உட்கார்ந்தார் .திருப்தியா சாப்பிட்டார்.சாப்பிட்டு முடிந்தவுடன் உறங்க சென்றார்.நன்கு தூங்கினார்.எழுப்பும் வரை தூங்கினார்.நல்ல அயர்ச்சி போல தூங்கட்டும் என யாரும் எழுப்பவில்லை .தானாக விழித்து எழுந்தார்.எழுந்தவுடன் சாப்பாடு கேட்டார்.திருப்தியாக சாப்பிட்டார்.சாப்பிட்ட பின் உறங்க சென்றார்.உறங்கினார் .எழுந்த பின் சாப்பாடு கேட்டார் .   

கொஞ்சம் உண்ணனும் பிறகு உறங்கணும் பின்ன கொஞ்சம் உண்ணனும் பிறகு உறங்கணும் என்பதன் அர்த்தம் அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது .ஒருவழியாக அவரிடம் மீண்டும் விளக்கிய பின் ஓ நளபாகமா என்ன செய்யணும் என்று நம்பூதிரி கேட்டார் 

ராஜா சாப்பாட்டு பிரியரல்லவா .

காய் கறிகள் வகை வகையாய் இருக்க வேண்டும் என்றார்  ராஜா. 

நம்பூதிரி சமையலல்லவா விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் ராஜா.

விருந்துக்கு ஏற்பாடு செய்தாகி விட்டது.அழைக்கப்பட்ட விருந்தினர்கள் வந்து சேர்ந்தனர்.பந்தி பாய் விரிக்கப்பட்டது.அனைவரும் வரிசையாய் அமர்ந்தனர் .தலைவாழை இலை போடப்பட்டது.தலை வாழை  இலையென்றால் பக்கவாட்டு மரத்து இலை இல்லை.பெரிய மரத்து இலை.ஒன்றொன்றும் ஆள் உயரளவு இலை.

சாப்பாடு வரட்டுமென்றார் ராஜா.வரிசையாய் பரிமாறுபவர்கள் வந்து பரிமாற ஆரம்பித்தார்கள் .வகை வகையாய் பொரியல் அவியல் கூட்டு என்று வந்து கொண்டே இருந்தது.

இலை நிரம்பி விட்டது .வைப்பதற்கு இடமே இல்லை .ராஜா அசந்து போனார் .

சாதம் வரட்டுமென்றார்.  

மகாராஜா சாதம் சொல்லலையே என்றார் நம்பூதிரி 




உண்மையிலேயே ராஜா அசந்தே போனார் 


ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...