நான் பள்ளிக்கு சென்றதே வேடிக்கை தான். ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ,மதுரை கான்பாளையம் குறுக்குத்தெருவில் இருந்த நகராட்சி தொடக்க பள்ளிக்கு நான்கு வயதாக இருக்கும்போதே அம்மா பள்ளிக்கு அழைத்து சென்றார்கள்.அப்போதெல்லாம் நர்சரி பள்ளியெல்லாம் கிடையாது.அரசு பள்ளிகள் ,அரசு உதவி பெறும்பள்ளிகள் மட்டுமே.பிள்ளைகளை படிக்க வைக்க டொனேஷன் ,நிறைய பணச்செலவுகள் கிடையாது.அந்தவகையில் பெற்றோர்கள் அதிருஷ்ட சாலிகள்.குறிப்பாக ஏழைகள்... அப்போதெல்லாம் குழந்தை பிறந்தால் பதிவு செய்வதென்பதெல்லாம் கிடையாது.அதனால் பள்ளியில் சேர்க்கும்போது சான்றிதழ் ஏதும் கேட்க மாட்டார்கள்.கையை மேலேதூக்கி தலைக்கு மேலாக காதை தொட்டால் போதும் .பள்ளியில் சேர்க்க அனுமதி கிடைத்துவிடும் .
அந்த பள்ளியை சுற்றியே நான்கு பள்ளிகள் இருந்தன என்றாலும் ,நாங்கள் குடியிருந்த ருக்மணிப்பாளையத்துக்கு இது இன்னும் அருகில் இருந்தது. அந்தப்பள்ளியின் வாசலருகேயே ஒரு கடை இருந்தது.தாடி வாலா கடையென்று எல்லோரும் அழைப்பர்.அந்த கடையை வைத்திருந்தவர் சவுராஷ்டிரா .தாடி வைத்திருப்பார்.முடியை நன்றாக கொண்டாய் போட்டு ,பஞ்சகச்சம் கட்டியிருப்பார்.சட்டையெல்லாம் போட்டிருக்க மாட்டார்.செக்க செவேலென்றிருப்பார்.நரைத்த முடி ,தாடி.நெற்றியில் நீண்ட ஒற்றைக்கோடு செந்தூர ராமம் தீட்டியிருப்பார்.மரத்தாலான பாத குறடு அணிந்து கைதடியூன்றி நடந்து வருவார். பழைய காலத்து முனிவர்களை திரைப்படங்களில் பார்த்த மாதிரியே இருப்பார்.
கடையில் மிட்டாய்கள் ,நோட்டு புத்தகங்கள் ,ஸ்டேஷனரி, அலங்கார பொருட்கள் நிறைந்திருக்கும்.கடையில் சேமிப்பு சீட்டு பிடிப்பார்கள்.குறைந்தது நாலணா அதாவது இருபத்தைந்து பைசாவிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி வரலாம்.ஒரு சிறிய பற்று நோட்டில் வரவு வைத்து கொடுப்பார்கள்.அந்த நோட் பக்கம் முடியும்போது அல்லது தீபாவளி மாதிரி பண்டிகை முடியும்போது கணக்கு பார்த்து கொஞ்சம் பணம் வட்டிக்காக போட்டு கொடுப்பார்கள்.வரவு வைத்துக்கொள்வதற்கு சித்திரகுப்தன் நோட் போல பெரியதான நோட்டில் ஆளுக்கொரு பக்கம் வரவு வைப்பார்கள்.நம்முடைய நோட்டில் நுணுக்கி பொடி எழுத்தில் வரவு வைப்பார்கள்.அதாவது அதிகபட்சம் வரவுகள் வைக்கும் வகையில் வரவு கணக்கு எழுதுவார்கள்.ஏமாற்றமாட்டார்கள்.என் அம்மா அங்கு என்னை அழைத்து செல்லும்போது தாடி தாத்தா கண்ணாடி ஜாடியிலிருந்து மிட்டாய் எடுத்துக்கொடுத்து சிரிப்பார்.அதற்காகவே அங்கு அழைத்து செல்ல அம்மாவிடம் அடம் பிடிப்பேன்.ஐம்பது வருடங்கள் கழித்து மீண்டும் மதுரையில் வாழும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அங்கு சென்று பார்த்தேன்.அந்த கடை இன்னும் இருக்கிறது.தாடிவாலா கடை என்ற பெயர்பலகையுடன் இருந்தது.நான் படித்த பள்ளி மட்டும் இல்லை.
அதனாலேயே என்னமோ என் அம்மா அந்த பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் சேர்த்தார்.என்னை பள்ளியில் சேர்த்துவிட்டு அம்மா காய்கறிவாங்க கடைக்கு போனார்கள்.என்னை பள்ளியில் விட்டு விட்டு அம்மா சென்றவுடன் பயந்து போய் வீட்டிற்கு ஒரே ஓட்டமாய் போய் கதவின் பின்புறம் ஒளிந்துகொண்டேன்.அம்மா கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தவர்கள் சமையல் செய்ய ஆரம்பித்து விட்டார். கதவு அசைவதை பார்த்தவர் பின்புறம் நான் ஒளிந்திருந்ததை பார்த்து என்னை சமாதானப்படுத்தி,கொஞ்ச மீண்டும் பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.அந்த நிகழ்ச்சி நன்றாய் ஞாபகம் இருக்கிறது.
பள்ளிக்கு செல்லும்போது பையில் ஒரு சிலேட்டு எழுத சிலேட்டு குச்சி ,ஒரு அட்டை (அதாவது ஒருபக்கம் உயிர் ,மெய்,உயிர்மெய் எழுத்துக்களும்,மரு பக்கம் வாய்ப்பாடும் உள்ளது ),கூடவே ஒரு தட்டு இருக்கும்.அப்போது பள்ளியில் மதிய உணவு போடுவார்கள். பொதுவாகவே உணவுக்கு பற்றாக்குறை இருந்த காலம்.இலவச படிப்பும்,மதிய உணவும் இல்லைஎன்றால் ஏழைகளுக்கு கல்வி என்பது எளிதில் கிடைத்திருக்காது.
நன்கு துறுதுறுப்பாக இருந்ததால் என்னை அம்மா டியூஷனில் சேர்த்து விட்டார்கள்.பெரிய தொகையெல்லாம் கிடையாது.டியூசனுக்கு நாங்கள் கொடுத்ததைவிட ஜோதி டீச்சர் எனக்கு கொடுத்த சாப்பாடு தின்பண்டங்கள் அதிகம்.அவர்களுக்கு செல்ல பிள்ளையாக இருந்தேன்.
அடுத்து வசந்தா டீச்சர் வீட்டிலும் செல்ல பிள்ளையாக இருந்தேன்.ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்து விட்டேன்.வசந்தா டீச்சரின் கணவரும் ஆசிரியர் தான்.சின்ன சந்தேகம் வந்து விட்டாலும் டிக்சனரியை எடுத்து விளக்கம் சொல்லுவார்.அங்கிள் உச்சரிப்பை நன்கு சொல்லி தருவார்.
அவர்கள் எனக்கு அமைத்துக்கொடுத்த அடித்தளம் தான் பின்னாளில் நன்கு படிக்க எனக்கு உதவியது என்பதை எப்போதும் நன்றியோடும்,பெருமையோடும் சொல்வேன்.
இன்னும் தொடர்வேன்.
No comments:
Post a Comment