சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 15 October 2024

என் கதை 2

 என் ஆரம்ப பள்ளிக்காலத்து நினைவுகளைப்பற்றி இன்னும் சொல்ல ஆசை தான் ,ஆனாலும் சுருக்கமாய் சொன்னால் தானே நன்றாய் இருக்கும் .எனக்கு பள்ளியில் பிடிக்காத வகுப்பு எனது மூன்றாம் வகுப்பு தான்,காரணம் எனது வாத்தியார்.அவரது பெயரெல்லாம் ஞாபகம் இல்லை.நாங்கள் வாய்த்த பட்டப்பெயர் மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது.தூங்கு மூஞ்சி வாத்தியார் என்பது தான் அவருக்கு நாங்கள் வைத்த செல்ல பெயர்.காரணம் அவர் எப்போதும் வகுப்பில் தூங்கிக்கொண்டே இருப்பார்.பசங்களெல்லாம் கூச்சலிடும்போதுஅவர்  விழித்துக்கொண்டு  பிரம்பை எடுத்து மேஜையில் அடித்து சைலன்ஸ் என்று சப்தமிடுவார்.  பிறகு இரண்டு பையன்களை  கடையில் வடை டீ வாங்கி வர அனுப்பி வைப்பார். போட்டி போட்டுக்கொண்டு செல்வோம்.

அந்த நேரத்தில் எனக்கு ஒரு பையன் நட்பு கிடைத்தது.அவன் என்னைவிட பெரிய பையன்.பள்ளிக்கூடத்திற்கு கட்டடித்துவிட்டு இம்பிரியல் சினிமா தியேட்டருக்கு கூட்டி சென்றான்.இடைவேளையில் பீடி பிடித்தான், வீட்டுக்கு திரும்பிவரும்போது என்னுடைய நல்ல நேரம் தெரிந்தவர்கள் கண்ணில் பட்டு அம்மாவிடம் சொல்லி விட்டார்கள்.நல்ல அடி கிடைத்தது.அதோடு அந்த பையன் சகவாசம் முடிந்தது.இல்லாவிட்டால் உருப்படாமல் போயிருக்க வாய்ப்பு அதிகம்,தூங்கு மூஞ்சி வாத்தியார் இல்லாமல் நல்ல வாத்தியார் இருந்திருந்தால் இது நடக்காமல் போயிருக்கும்.

முதலில் ஜோதி டீச்சர் வீட்டுக்கு டியூஷன் போனேன் என்று சொன்னேனல்லவா .அவர்கள் எங்கள் தெருவிலிருந்து மூன்று தெரு தள்ளி இருந்தது.சின்ன குறுக்கு சந்தில் அவர்கள் வீடு.சந்து ஆரம்பத்தில்  ஒரு பனைமரமும் கீழே ஒரு சின்ன கோவிலும் இருந்தது.ஒருமுறை டீச்சர் வீட்டுக்கு டியுசன் முடித்து   திரும்பும்போது கோவில் எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது,சின்ன கல்லைத்தான் சாமியாக கும்பிட்டு கொண்டிருந்தனர்.சிலை உருவமெல்லாம் கிடையாது.சாமி மேலே வெள்ளையாய் பூசியிருந்தனர்.நிறைய மாலையெல்லாம் போட்டிருந்தனர்.கரண்டும் இல்லை ஆட்களும் இல்லை.அந்த கோவிலை கடக்க பயமாய் இருந்தது.பயத்தில் கால் நடுங்க நின்றுகொண்டே இருந்தவன் அந்தப்பக்கம் ஆள் நடமாட்டத்தை பார்த்தவுடன் ஒரே ஓட்டமாய் கோவிலை கடந்து ஓடியவன் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். மண்டை உடைந்து ஒரே ரத்தம்.  

அந்தப்பக்கம் வந்தவர்கள் தூக்கி விட்டு கழுவிப்பார்த்ததில் நெற்றியில் காயம் சுத்தம் செய்து விட்டு முதல் உதவி செய்தனர்.ரத்த போக்கை நிறுத்த காப்பி பொடியை அழுத்தி வைத்து கட்டு போட்டு வீட்டுக்கு கொண்டு போய் விட்டனர்.மறுநாள் நெற்றி வீங்கி ஆஸ்பத்திரிக்கு அம்மா என்னை அழைத்து போய் வைத்தியம் பார்த்தார்கள் .காபித்தூள் வைத்து காட்டியதற்கு ஆஸ்பத்திரியில் நிறைய திட்டு கிடைத்தது.அம்மா என்ன செய்வார்கள் பாவம்.காயம் குணமாகி பெரிய தழும்பாய் இருந்தது.இன்னமும் சிறியதாய் தழும்பு இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதன் பிறகு டியூசன் போக மறுத்துவிட்டேன்.

நான்காம் வகுப்பிற்கு வந்த பின் வகுப்பு ஆசிரியை வசந்தா டீச்சர் வீட்டிற்கு டியூசன் போக   ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை வசந்தா டீச்சர் வீட்டிற்கு படிக்க சென்றேன்,அந்த ஆரம்ப கல்விக்கு நல்ல அடித்தளம் போட்டவர்கள் வசந்தா டீச்சர்அவர்களும் அவரது கணவரும் தான்.என்றென்றும் நன்றிக்குரியவர்கள்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது வாரா வாரம் ஒரு நாள் சனிக்கிழமை என்று நினைக்கிறேன்,பெரியவகுப்பு,அதுதாங்க ஐந்தாம் வகுப்பு மாணவர்களை நீச்சல் பழக தெற்கு வெளிவீதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியிலிருந்து நீச்சல் குளத்திற்கு அழைத்து செல்வார்கள்.    முன்னால் ஒரு டீச்சர்,வரிசையாய் மாணவர்கள்,கடைசியில் ஒரு டீச்சர் என்று பாதுகாப்பை ஊர்வலம் போவது போல அழைத்து செல்வார்கள்.நீச்சல் குளத்தில் ஆழமில்லாத பகுதில் நீச்சல் பழக விடுவார்கள்.நீச்சலெல்லாம் பெரிதாய் பழகவில்லை.போய் சப்தமிட்டுக்கொண்டே தொபுக்கடீரென்று  என்று மொத்தமாய் குதித்து விளையாடுவோம்.இலவச பள்ளி காலத்திலேயே எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இருந்தது.இப்போதெல்லாம் தனியார் பள்ளிகளில் அதற்கும் கட்டணம் தான்.நான் இதை சொன்னால் இப்போது கதை விடுகிறேன் என்று தான் சொல்லுவார்கள்.ஆனால் நடந்தது நிஜம்.ஒரு வழியாக ஆரம்ப கல்வி முடிந்து உயர்கல்விக்கு சென்றேன்.



இன்னும் சொல்வேன்...

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...