சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 11 October 2024

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்

 சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் என் அப்பாவின் அனுபவ கதை.

அவர் மதுரையில் ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்தார்.அப்போது அந்த வாகனம் மிகவும் பிரபலமானது.ஏனென்றால் ஒரே 350 சி சி நான்கு சிலிண்டர் மோட்டார்வாகனம் நாட்டிலேயே அது ஒன்று தான் .அந்த வாகனத்தின் உற்பத்தி செய்யும் நிறுவனமே மதுரையில் மட்டும் வியாபாரம் செய்யும் உரிமையை தங்கள் வசம் இருக்கட்டும் என்று வைத்திருந்தது. காரணம் வேறொன்றும் இல்லை.அவர்கள் ஆதியில் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனங்களை சில நகரங்களில் வைத்திருந்தனர்.பின்னர் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி கண்ட  பின்னர் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனங்களை மூடிவிட்டனர்.ராசிக்காகவோ எதுக்கோ மதுரை நிறுவனத்தை மட்டும் மூடிவிடாமல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனமாக தொடர்ந்தனர். 

வேறு யாருக்கும் விநியோக உரிமை வழங்காததால் இந்த நிறுவனம் மட்டுமே மதுரையில் ஏகபோக விற்பனை நிலையமாக இருந்தது.மோட்டார் சைக்கிள் அதிகம் இல்லாத காலம் அது.எனவே விற்பனை நிலையத்துடன் ஒரு ஒர்க் ஷாப்பும் இருந்தது.இரண்டிலும் சேர்த்து சுமார் இருபது பேர் வேலை பார்த்தனர் . 

அங்கு வேலை பார்த்தவர்களுக்கு குறைந்தது பத்து ஆண்டுகளிலிருந்து இருபது ஆண்டுகளாவது அனுபவம் இருக்கும்.  வருடாவருடம் ஊதிய உயர்வு ,போனஸ் என்றபோதிலும் ஊதியம் அதிகம் இல்லை .இருந்தாலும் அதைப்பற்றி கேட்க அவர்களுக்கென்று சங்கம் இல்லை. அவர்களுக்கும் அது பற்றிய விழிப்புணர்வும் இல்லை.அதனால் அதைப்பற்றி யாரும் பேசிக்கொள்வதில்லை.

அப்போது தான் தேசமெங்கும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.அரசியல் நடவடிக்கைகள் ,தொழிற்சங்கங்கள் முடக்கப்பட்டன.அது வரை ஒருமாத ஊதியம் போனசாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த வருடமும் அடுத்த வருடமும் போனஸ் அரை மாதமாக குறைக்கப்பட்டது.நாடே மூச்சு விடாத நிலையில் இவர்கள் எங்கே முணுமுணுப்பது.ஒருவழியாக அவசரநிலை நீக்கப்பட்டு தேர்தல்நடத்தப்பட்டு ஆட்சி மாறிய பின் நாடே காட்சி மாறியது.மெல்ல மெல்ல தொழிற்சங்க நடவடிக்கைகள் மீண்டு வர ஆரம்பித்தன.    

அவர்களுக்குள்ளே ஊதிய உயர்வு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்தன .மிக குறைத்த ஆட்களே உள்ளதால் தனியாக சங்கம் ஆரம்பிக்க பயமா அல்லது தயக்கமா தெரியவில்லை.ஏதேனும் ஒரு பொது சங்கத்தில் சேரலாம் என முடிவெடுத்தனர்.எந்த பொது அமைப்பில் சேருவதென்று விவாதிக்கையில் செங்கொடி இயக்கமே சிறந்ததென்று முடிவெடுத்தனர்.அவர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஒன்றிரண்டு பேர் காங்கிரஸ் ஆதரவாளர்கள்.அப்பா ஒருவர் மட்டுமே இடதுசாரி அனுதாபி.ஆனாலும் அனைவருமே செங்கொடி இயக்கத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அவர்களுக்கு திடீரென்று இடது சார்பு சிந்தனை வந்து அல்ல.அவர்களை பொறுத்தவரை செங்கொடி இயக்கம் ஒன்று மட்டுமே விலைபோகாமல் இறுதிவரை வாதாடி கோரிக்கைகளை பெற்று தருவார்கள் என்ற திடமான நம்பிக்கையே. 

அப்பா மட்டுமே தயக்கம் காட்டினார் .அவருக்கு மட்டுமே நம்பிக்கை குறைவு ,சங்கத்து மீது அல்ல ,தன் சக தொழிலாளிகள் மீதே.

எல்லோரும் உற்சாகமாக சி ஐ டி யு அலுவலகம் சென்று உறுப்பினராக சேர்ந்தனர்.ஆளாளுக்கு கோரிக்கைகளை பற்றி சங்க நிர்வாகியிடம் பேசினர்.கோரிக்கைகளுக்காக என்னவெல்லாம் செய்யவேண்டும் என ஆலோசனைகள் கூறினர்.என்னமோ வாழ்நாளெல்லாம் போராட்ட களங்களில் நின்ற மாதிரியாக பேசினர்.அப்பா மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.சங்க நிர்வாகி பொறுமையாகவும் நிதானமாகவும் பேசினார்.அவசரப்பட்டு போராட்டங்கள் செய்ய கூடாது.அமைப்பு ரீதியாக சேர்ந்து செயல்படுவதன் அவசியத்தையும் முதலில்  நியாயத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை வரையறுத்து நிர்வாகத்திடம் கொடுத்து குறிப்பிட்ட கால அவகாசத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும் எடுத்து கூறி அனுப்பி வைத்தார்.

அதன்அடிப்படையில் கோரிக்கைகளை வரையறுத்து நிர்வாகத்திற்கு சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.கடிதத்தை கண்டவுடன் நிர்வாகத்திற்கு கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.அவர்களால் தங்கள் தொழிலாளர்கள் செங்கொடி இயக்கம் மூலம் கடிதம் அனுப்பியதை ஜீரணிக்க முடியவில்லை.தனித்தனியாக கூப்பிட்டு விசாரித்தனர்.செல்லமாக மிரட்டவும் செய்தனர்.உடனடியாக தொழிலாளர்கள் அடுத்த நிலைக்கு அதாவது சங்கமாக சேர்கிற நிலைக்கு செல்லாமல் தடுக்க முடிவு செய்தனர்,சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலேயே ஊதிய உயர்வும் சில கோரிக்கைகளை நிறைவேற்றியும் அறிவித்தனர்.நிர்வாகத்துக்கு மிகவும் நம்பிக்கையான விசுவாசியுமான தொழிலாளியிடம் விசாரித்து களையெடுக்க முடிவு செய்தனர்.மிகவும் வீராவேசமாக பேசியவர் யார் யார் என்ற விபரத்தை நிர்வாகத்திடம் போட்டு கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டார்.

சலுகைகளை பெற்றபின்னர் சங்கத்து நிறைய செய்யவேண்டுமென  ஆரம்பத்தில் ஆளாளுக்கு பேசியிருந்தனர்.ஆனால்சம்பள உயர்வு சலுகைகள் பெற்றபின்னர் யாரும் மூச்சு கூட விடவில்லை.சங்க கட்டிடம் பக்கம் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை.அப்பா கூப்பிட்டு பார்த்தார் .யாரும் வருவதாக தெரியவில்லை.

அவர் மட்டும் தனியாக சென்று அவரால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்துவந்தார்.தனது வருத்தத்தை சங்க நிர்வாகியிடம் தெரிவித்த போது அவர் மென்மையாக சிரித்தவாறே இதல்லாம்  சகஜம்  தான் தோழரே என்று அனுப்பி வைத்தார் .

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...