நான் ஒரு வழியாக ஆரம்ப கல்வி முடித்து உயர்நிலைப்பள்ளியில் சேர முடிவெடுத்தபோது அருகில் சௌராஷ்டிரா உயர்நிலைப்பள்ளி,விருதுநகர் நாடார் உயர்நிலைப்பள்ளி,செயின்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளி என அருகில் பள்ளிகள் இருந்தாலும் அப்பாவிடம் சில நண்பர்கள் சொன்னதன் பேரில் அப்பா தியாகராஜர் நன்முறை உயர்நிலைப்பள்ளியில் சேர்த்துவிடமுடிவு செய்தார்.பக்கத்துக்கு வீட்டு மாரிமுத்து அண்ணன் என்னை அப்பள்ளிக்கு நுழைவு தேர்வு எழுத அழைத்து சென்றார்.பரீட்சை முடிந்தவுடன் தேர்வு முடிவினையும் ,பள்ளியில் சேரவேண்டிய தேதியையும் அறிவிப்பு பலகையில் ஒட்டினர்.ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் சேரவேண்டும் என குறிப்பிட்டதை தவறாக புரிந்துகொண்ட நான் அந்த தேதிக்கு பின்னர் சேரவேண்டும் என அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.
அந்தவருடம் முழுப்பரிட்சை விடுமுறையின் போது என் சொந்தஊரிலிருந்து அண்ணன் மகாதேவன் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போதெல்லாம் பொழுது போக்கு என்பது திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பது மட்டும் தான் அதிகம்.நானும் அவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் போதும் அப்போதைக்கு ஓடுகிற எல்லா படங்களையும் பார்த்து விட்டு தான் மறுவேலை.அவர் வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம்,அதனால் திரைப்படம் காணச்செல்லும் செலவுகளுக்கு கவலைப்படத்தேவையில்லை .அந்தவருடம் விடுமுறையின்போது இருபது படங்கள் பார்த்ததாக ஞாபகம்.அவரும் ஊருக்கு திரும்புகின்றவேளை.அப்பா மத்திய உணவிற்காக வந்தபோது பரபரப்பாக என்னை தேடினார்.காரணம் பள்ளியில் சேர அன்று தான் கடைசி தினம் என்று அறிவித்திருந்தனர்.ஆனால் நான் கவனக்குறைவாக அந்த தேதிக்கு பின் சேரவேண்டும் என என் தந்தையிடம் சொல்லியிருந்தேன்.அப்பா தற்செயலாக அவர்வேலை பார்க்கும் கடையிலிருந்து பள்ளிக்கு தொலைபேசியில் விசாரித்தபோது அன்று தான் கடைசி தினம் எனவே உடனடியாக பள்ளியில் அழைத்துவந்து சேர்க்க சொல்லிவிட்டனர்.
நல்லவேளையாக சினிமாவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தோம்.அப்பா என்னை பிடித்துவிட்டார்,இல்லையென்றால் சிட்டாக பறந்திருப்போம்.வேகமாக வீட்டுக்கு வந்து ரெக்கார்ட் சீட் அதாங்க டீ சி தேடினால் காணவில்லை.ஆரம்ப பள்ளியிலிருந்து வாங்கி வந்த ரெகார்ட் சீட்டை என்னுடைய புத்தகம் ஒன்றில் வைத்து பையில் தொங்க விட்டிருந்தேன்.என் இரண்டுவயது தங்கை விளையாடுவதற்கு பையை இழுத்துப்போட்டு எல்லாவற்றையும் பரப்பி போட்டிருந்தது.என்னுடைய ரெக்கார்ட் சீட் கசங்கி குப்பையாய் சுருண்டு கிடந்தது.சாணித்தாள் காகிதம் பார்க்க சான்றிதழ் போல தெரியாது.என்னுடைய நல்ல நேரம் கிழித்து போடாமல் சுருட்டி போட்டிருந்தது.ஒருவழியாய் எடுத்துக்கொண்டு சைக்கிளில் பரந்து சென்று பள்ளியில் சேர்த்தார்கள்.அப்போதெல்லாம் சைக்கிளில் டபுள்ஸ் போவது குற்றம் .போலீஸ் பிடித்து அபராதம் போடுவார்கள்.
எங்கள் பள்ளி தியாகராஜர் நன்முறைப்பள்ளி தெப்பக்குளத்தின்தென்கரையில் இருந்தது.வடகரையில் தியாகராஜர் கலைக்கல்லூரி இருந்தது.மேற்கு கரையில் தியாகராஜர் கல்வியியல் கல்லூரி இருந்தது.கிழக்கு கரைப்பக்கம் கருமுத்து தியாகராஜர் அய்யா அவர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது.கிடைத்திருந்தால் அந்த கரைப்பக்கமும் ஏதாவது கல்விநிலையம் ஆரம்பித்திருப்பார்.துரதிஷ்டவசமாக அந்தப்பக்கம் இடம் கிடைக்கவில்லை.
Thiagarajar Model High School என்பது எங்கள் பள்ளியின் ஆங்கில பெயர்.பொதுவாக model school என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாக முன்மாதிரி பள்ளி என்று தான் எல்லா இடங்களிலும் பள்ளிகளின் பெயர் இருக்கும். ஆனால் எங்கள் பள்ளிக்கு முன்மாதிரி என்பதற்கு பதிலாக நன்முறை உயர்நிலைப்பள்ளி என்று அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் பெயரிட்டிருந்தனர்.பொதுவாக படிக்கும்போது பெரும்பாலானோருக்கு தாங்கள் படிக்கும் பள்ளியை விரும்புவதில்லை.ஆனால் படித்துமுடித்துவிட்டு பின்னாளில் அதே பள்ளியையும் பள்ளிக்காலத்தையும் பெருமையாகவும்,மகிழ்வாகவும் நினைவு கூறுவது வழக்கம்.எத்தனையோ வருடங்கள் கழித்துகூட என்னுடைய பள்ளித்தோழர்கள் இன்றும் கூட சந்தித்து பேசி நண்பர்களது வீட்டு நல்லது கெட்டது என சுக துக்கங்களில் பங்கெடுக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் ,அது பற்றி பின்னர் விரிவாக பேசலாம்.
அப்போதே எங்கள் பள்ளி மதுரையில் இரண்டாவது பெரிய பள்ளியாக இருந்தது.அரசு உதவிபெறும் பள்ளியாகவும் இருந்ததால் கட்டணங்கள் அதிகம் இல்லை.A பிரிவு மட்டும் ஆங்கில முறை கல்வியாகவும் ,மற்ற வகுப்புகள் தமிழ்முறை கல்வியாகவும் இருந்தன, எல்லா மாணவர்களுக்கும் ஒரே யூனிபார்ம் தான்.காக்கி டவுசர்,வெள்ளை சட்டை.எங்களது இளமைக்காலத்தில் நாடு முழுக்க ஒரே பிரச்னை தான்.உணவு,உடை,இருப்பிடம் .மற்ற விஷயங்களை பிறகு பேசுவோம்.உடை மிகவும் வேதனைக்குரிய விஷயம் ,ஏழை மாணவர்களைப்பொறுத்தவரை பள்ளி சீருடை தான் எப்போதுமே .தீபாவளியோ பொங்கலோ ஏதாவது பண்டிகைக்கு வீட்டில் எடுத்து தருவது சீருடையாக தான் இருக்கும் . நான் ஆறாம்வகுப்பு பி செக்சனில் சேர்ந்தேன்,கனகாம்புஜம் டீச்சர் தான் வகுப்பு ஆசிரியை.மிகவும் நல்லவர் .
இன்னும் சொல்வேன்
No comments:
Post a Comment