சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 24 October 2024

தீபாவளி திருவிழா

தீபாவளி பண்டிகை என்று சொல்லாமல் திருவிழா என்று சொல்வதற்கு காரணம
இருக்கிறது.காரணம்அதுஒரு ஜாதியோ மதத்தையோ இனத்தையோ சார்ந்து கொண்டாடப்படும் விழாவாக இருப்பதில்லை.ஏன்மத நம்பிக்கை இல்லாத ஆட்கள் கூட கொண்டாடும் திருவிழாவாக இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் எதற்காக கொண்டாடுகிறோம் என்று கூட தெரியாமல் கொண்டாடப்படும் திருவிழாவாக உள்ளது.வேண்டுமானால் இந்து மத  சாமியார்களும் ,இதைவைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள் வேண்டுமானால் நரகாசுரன் வதம் அது இதென்று கதை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.ஜைன மத துறவிகள் மகாவீரர் அமரத்துவம் அடைந்த தினம் என்பார்கள். சீக்கியர்கள் குரு கோவிந்த் குவாலியர் சிறையிலிருந்து விடுதலை பெற்ற தினம் என்பார்கள் அதன் தாத்பரியமெல்லாம் தெரியாது எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.நாங்களும் கொண்டாடுகிறோம் என்று கொண்டாடுபவர்கள் தான் இங்குண்டு.

சின்ன வயதில் தீபாவளி வருவதற்கு வெகு நாட்கள் முன்னமே நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுவோம்.தீபாவளி என்றால் புது ஆடை கிடைக்கும்.தீபாவளிக்கு மட்டும் தான் கிடைக்கும் ,அதுவும் பள்ளி சீருடை தான் கிடைக்கும் என்பது வேறு விஷயம் .சில நேரங்களில் அப்பாவிற்கு பணம் கிடைத்தால் கூடுதலாக வேறு கலர் ட்ரெஸ்ஸும் கிடைக்கலாம்.ஆனால் நிச்சயமாக புத்தாடை கிடைக்கும்.

வழக்கமாக பள்ளி சீருடையான காக்கி டவுசருக்கு தேவையான துணி அப்பா கடையில் அவர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் காக்கி துணியில் எங்களுக்கு தேவையான பகுதி கிடைத்துவிடும்.கூட வேலைபார்க்கும் ஒருவர்  டெரிகாட்டன்  தான் உடுத்துவார் .எனவே கடையில் கொடுக்கும் காட்டன் துணியை எங்களுக்கு கொடுத்து விடுவார்,மேல்சட்டைக்கு மட்டும் வெள்ளை துணி எடுத்து தருவார்கள்.வசதி ஏற்பட்டால் கூடுதலாக ஒரு செட் கலர் துணி கிடக்கும்.

நாங்க குடியிருந்த வீட்டுக்கு அடுத்து ஒரு பாய் தையல்கடை வைத்திருந்தார்.அந்த காலத்தில் பண்டிகை காலங்களில் தையல்கடைக்கு அதிக மவுசு இருந்தது.அதிகமாக ரெடிமேட் ஆடைகள் கிடையாது தீபாவளி ,பொங்கல் சீசன்களில் தையல் கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் .துணியை கொடுத்துவிட்டு பசங்க விடாமல் படையெடுப்போம்.அவர்களும் நேரம் காலம் பார்க்காமல் தையல் வேலை பார்ப்பார்கள் என்றாலும் மிகவும் சிரமப்படத்தான் செய்வார்கள்.தீபாவளிக்கு தானே போடப்போகிறீர்கள்,ஏன்டா பறக்கிறீர்கள் என்று பாய் விரட்டுவார் .இருந்தாலும் விடமாட்டோம். வேடிக்கையாய் இருக்கும்.

 எனது பதினைந்தாம்வயதில் தீபாவளிக்கு முதன்முதலாய் வேட்டி கட்டினேன். வேறொரு  காரணமும் இல்லை.அந்த வருடம் நாட்டில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு அரசியல் தொழிற்சங்க போராட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தன.அதனால் முதலாளிகள் வசதியாக போனஸ் போன்ற சலுகைகள் அவர்கள் மனதுவைத்தால்  மட்டுமே கொடுக்கலாம் என்று நிறுத்தி விட்டனர்.என் அப்பாவிற்கு வழக்கமாய் கிடைக்கும் ஒருமாத ஊதியம் போனஸுக்கு பதிலாய் அரைமாத ஊதியமே போனசாய் கிடைத்தது. அதுவும் மிக தாமதமாய் தீபாவளிக்கு முதல் நாள் தான்  கிடைத்தது.அதனால் முதன் முறையாக ரெடிமேட் ஆடை  வாங்க போனோம்.வேட்டி வாங்கலாம் என அடம் பிடித்து அரசிற்கு எனது மானசீக எதிர்ப்பை காட்ட எண்ணி கருப்பு கரை வைத்த வேட்டி வாங்கி காட்டினேன்.அநேகமாய் எனது முதல் அரசியல் நடவடிக்கை இதுவாய் தான் இருக்கும்.அம்மாவிற்கு முதன் முதலாய் கருப்பு கரை வேட்டி கட்டியதில் வருத்தம் தான். 

அப்புறம்முறுக்கு,அதிரசம் சீடை என்று  விதவிதமாய் தின்பண்டங்கள் பலகாரங்கள் சமைப்பார்கள்.இதெல்லாம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பே தயாராக ஆரம்பித்துவிடும்.முதல் செட் சாமிக்கு படைப்பதற்கென்று தனியாக எடுத்து வைத்து விடுவார்கள்.சாமிக்கு படைப்பது எச்சில் படக்கூடாதல்லவா.அனால் எங்களுக்கு இதெல்லாம் புரியாது.அதிரச மாவு தயார்செய்து வைத்திருப்பார்கள். திருட்டுத்தனமாய் அதிரச மாவை எடுத்து தின்று விட்டு மாட்டிக்கொள்வோம்.எவ்வளவு ஜாக்கிரதையாய் திருடி தின்றாலும் அம்மா கண்டுபிடித்து விடுவார்கள்.அடையாளம் வைத்திருப்பார்கள்.கண்டுபிடித்து செம்மையாய் அடி  கொடுப்பார்கள்.பெரும்பாலும் அப்பா சமாதானப்படுத்தி அடி விழாமல் காப்பாற்றி விடுவார். சின்ன பசங்க தானே சாமியெல்லாம்  கோபித்துக்கொள்ளாது என்பார்.ஆனாலும் அம்மா சமாதானமாக மாட்டார்கள்.    

அப்புறம் தீபாவளி என்றால் பட்டாசு,மத்தாப்பு வகையறாக்கள் தான்.அப்பா வேலை பார்க்கும் கம்பனியில் சிவகாசியிலிருந்து நிறைய பார்சல் வரும்.வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு பிரித்து கொடுப்பார்கள்.  அப்பா கம்பெனியில் வேலை செய்யும் சாமு அய்யர்,அக்கௌன்டன்ட் வீட்டில் சின்ன பிள்ளைகள்இல்லாததால் எங்களுக்கே கொடுத்து அனுப்புவார்கள் .குட்டி சாக்கு நிறைய பட்டாசுகள் கொண்டு வருவார்.ஆனாலும் திருப்தி அடையமாட்டோம்.அப்பாவுக்கு தெரிந்த நண்பர் ரெத்தினம் நாடார் தீபாவளிக்கு பட்டாசு கடை போட்டிருப்பார்.அம்மாவுக்கு தெரியாமல் நானும் தம்பியும் அவர் கடைக்கு போய் நிற்போம். கூட்டம் நிறைய இருக்கும் .நான் பொறுமையாய் அவர் பார்ப்பதற்காக காத்திருப்பேன்.ஆனால் என் தம்பி பொறுக்க மாட்டான்.மாமா ..மாமா என்று கூப்பிடுவான்.அவர் பார்த்தவுடன் வேலையாட்களிடம் சீனி பசங்க வந்திருக்காங்க கொஞ்சம் பட்டாசு கொடுத்துவிடுங்கள் என்பார்.எல்லா சின்ன ஐட்டங்களிலும் போட்டு நிறையவே கொடுத்து அனுப்புவாரக்ள்.வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் திட்டு கிடைத்தாலும் கவலைப்படுவதில்லை .

எனக்கு நினைவு தெரிந்து முதலில் போட்டு கேப் என்னும் வெடிதான் வெடித்த ஞாபகம்,சின்னதாக பொட்டு வடிவில் நடுவில் சிறிது வெடிமருந்து வைத்தபகுதி உப்பி இருக்கும் வெடியை தான் எதாவது சுத்தி அல்லது கல்லை வைத்து அடித்து வெடிப்போம்.பிறகு ஓலை வெடி என்று ஒருவெடி.பனை   ஓலையில் முக்கோண வடிவில் வெடிமருந்து வைத்து வெளியில் திரி நீட்டியபடி இருக்கும் வெடி .வௌக்குமாற்றுக்குச்சியில்  ஓலைவெடியை செருகி வைத்துக்கொண்டு வெடிப்பது.அப்புறம் சீனி வெடி என்று கொஞ்சம்வளர்ந்த பிள்ளைகள் வெடிப்பது வழக்கம்.

கொஞ்சம் வளர வளர வெடி போடும்போது சேட்டைகளும் சேர்ந்தே வளரும்.கையில் பிடித்து வெடியை பற்றவைத்து எறிவது,சரவெடியை பற்றவைத்து எறிவது ,ஏதேனும் டப்பா அல்லது தேங்காய் சிரட்டைக்கு அடியில் வெடியை வைத்து பற்றவைத்து வெடிப்பது,அடுத்த தெருவுக்கு போய் ஆள் பார்க்காத நேரத்தில் தூம்பு ஓட்டைகளில் வெடியை வைத்து பற்றவைத்து விட்டு ஓடிவிடுவது என்றெல்லாம் வானர சேட்டைகள் கூடும்.

நாள்  பூராவும் வெடி வெடித்தாலும் திருப்தி அடையாமல் பெரியவர்கள்,நிறைய வெடி வெடிப்பவர்கள் வெடி போடும்போது போய் வேடிக்கை பார்ப்பது எல்லாம் வழக்கம்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் கடைசியில் வெடிக்காத வெடிகள் புஷ்வாணங்கள் ,மத்தாதப்புகளை  பொறுக்கி,அவைகளை பிரித்து வெடிமருந்துகளை அட்டை டப்பாக்களை போட்டு சொக்கப்பனை கொளுத்தினால் தான் திருப்தி வரும்.மூஞ்சி கைகால் எல்லாம் வெடிமருந்து அப்பிக்கொண்டு வந்து அம்மாவிடம் அடிவாங்குவது பழக்கமான ஒன்று.   

  பெரியவன் ஆனதற்கு அடையாளம் வெங்காய வெடி என்னும் எறிவெடி வாங்கி வந்து தரையிலோ அல்லது யார்வீட்டு சுவற்றிலாவது எறிந்து வெடிவெடிப்போம்.அகப்பட்டால் திட்டு,வசவு தான்.

தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம்.சின்ன வயதில் ஊரும் அளவுக்கு நிறைய எண்ணெய் தேய்த்து விடுவார்கள். பின்னாளில் பெயரளவிற்கு எண்ணெய்யை தொட்டுவைத்துவிட்டு குளிப்போம்.

தீபாவளி என்றால் வடை பலகாரங்கள்.இறைச்சி என்று சாப்பாடு அமோகமாய் இருக்கும். போகும்போதும் வரும்போதுமாய் வடையை வாயிலே திணித்துக்கொண்டு வெடி வெடிக்க அல்லது பிறர் வெடிப்பதை வேடிக்கை பார்க்க பறந்து விடுவோம்.இறைச்சி என்றவுடன் ஞாபகம் வருவது ,எங்கள் வீட்டுக்கு வரும் அப்பாவுடன் வேலைபார்க்கும் அய்யர் நண்பர்கள் இறைச்சி சாப்பிடுவது தான்.என் அம்மா முதலில் இறைச்சி வைக்க யோசித்தார்,அப்பா தான் அவர்கள் நம் வீட்டில் சாப்பிடுவதே இறைச்சிக்காகத்தான் என்பார்.அவர்களும் எங்கள் வீட்டிலெல்லாம் சாப்பிட முடியாதே என்று சிரிப்பார்கள்.அப்புறம் எல்லா வகை தின்பண்டங்களையும் எடுத்துக்கொண்டு போய் உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக்கு கொண்டுபோய் கொடுப்போம்.அதே போல எல்லார் வீட்டிலிருந்தும் நம் வீட்டுக்கு தின் பண்டங்கள் வரும்.என்ன, எல்லாவற்றையும் பதம் பார்த்த பின் இரண்டு நாட்களுக்கு வயிறு நம்மை பாடாய் படுத்தும்.  . 

   அதே போல கொஞ்சம் வளர்ந்த பின் ,தீபாவளிக்கு முதல் நாள் நகர்வலம் போவோம்.என்ன நகர்வலம் ஊர் சுற்றுவது தான்.கீழவாசல் விளக்கு தூணிலிருந்து சென்ட்ரல் வரை சாலை நிறைய கடைகள் நிறைந்திருக்கும்.பயங்கர கூட்டமாய் இருக்கும் ,எந்த திட்டமுமில்லாமல் விடிய விடிய ஊரைசுற்றிவிட்டு ஏதோ வாங்கி வருவோம்,ஒருவருடம் வீதியோரம் வாங்கி வந்த மெர்குரியை கொளுத்தினால் எரியவே இல்லை.அப்பா கிண்டலாக கொஞ்சம் மண்எண்ணெய் ஊற்றி கொளுத்துங்கள் என்றார்.அப்படி ஊற்றி கொளுத்தியும் எரியவில்லை. உடைத்து பார்த்தால் வெறும் களிமண் உருண்டைகளை வெடிமருந்தில் உருட்டி ஜிகினா பேப்பர் சுத்தி விற்றிருந்தனர். அது மாதிரி டுபாக்கூர் வியாபாரங்களும் தீபாவளி கூட்டங்களில் நடக்கும்.

அது சரி இப்போது அதெல்லாம் நினைத்தால் கனவு போல் இருக்கிறது.சிரிப்பாகவும்  இருக்கிறது.


என்ன செய்வது ...பழைய நினைப்புடா பேராண்டி பழைய நினைப்புதான்னு போகவேண்டியது தான்  

1 comment:

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...