சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 30 October 2024

தீபா வலி

 நாங்கள் பட்டாசுகளையும் மத்தாப்புகளையும். வேடிக்கையாய் கொளுத்தி மகிழ்ந்து கொண்டிருக்கையில், 

 அங்கே ஏவுகணைகளாலும் வெடிகுண்டுகளாகலும்          மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்து கொண்டிருந்தார்கள்.... 

இங்கே விதவிதமாய் தின்பண்டங்களும்    பதார்த்தங்கள் ருசித்து கொண்டிருக்கையில், 

அங்கே மக்கள்                உணவுக்கும்                  குடிநீருக்கும்  அல்லாாடி கொண்டிருந்தனர்....

இங்கே பிள்ளைகள்    பாதுகாப்பாய்                               வெடி வெடிக்க பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், 

அங்கே குழந்தைகள்            குண்டடி பட்டு                              இரத்த காயங்களோடு                        செத்துக் கொண்டிருந்தார்கள்.

 நாங்கள் புத்தாடைகளும் அணிகலன்களுமாய் ஆடிக்கொண்டிருக்கையில், 

அங்கே குளிரிலும் பணியிலும் கந்தல் ஆடைகளோடு கருகிக் கொண்டிருந்தார்கள். 

நாங்கள் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கையில், 

அவர்கள் சமாதானத்துக்காக ஆங்காங்கே கையேந்தி கொண்டிருந்தார்கள். 

அங்கே மரண வியாபாரிகள் நாட்டாமை செய்து கொண்டிருக்கையில், 

 உலகை படைத்த இறைவன் எங்கோ அமைதியாய் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான். 

நாங்களும் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 


தோழர் தணிகைச் செல்வன்

 


"*தோழர் கவிஞர்  தணிகைச் செல்வன் [90] அவர்களுக்கு அஞ்சலி!*

70களில் மிகப் பிரபலமான இடதுசாரி கவிஞர்களில் முதன்மையானவராக தோழர் தணிகைச் செல்வன் திகழ்ந்தார்.

*"எல்லாம் இழந்தோம் இனி இழப்பதற்கு ஏதுமில்லை"*

*கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்*

*துணியினை இழந்ததாலே திரவுபதை சபதம் நியாயம்*

*தனது மண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்* 

*அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் நியாயம்.*


*தாக்குண்டால் புழுக்கள் கூட தரைவிட்டுத்துள்ளும்*

*கழுகு தூக்கிடும் குஞ்சுக்காகத் துடித்தெழும் கோழி*

*சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போதும் முயல்கூட எதிர்த்துநிற்கும்*

*சாக்கடைக் கொசுக்களாநாம்; சரித்திரச் சக்கரங்கள்*

*சரித்திரம் சுழலும் போதும்* 

*சமுத்திரம் குமுறும்போதும்* 

*பொறுத்தவன் பொங்கும் போதும்*

*புயல்காற்று சீறும்போதும்* 

*பறித்தவன் ஆதிக்கத்தை*

*பசித்தவன் எதிர்க்கும்போதும்*

*மறித்தவன் வென்றதில்லை* *மறுப்பவன் புவியில் இல்லை*.

 எனவர்க்க போராட்டத்திற்கு விளக்கம் அளித்தவர் தணிகைச் செல்வன். 

70களில் இவரது கவிதையை உச்சரிக்காத இடதுசாரி இளைஞர்களே இல்லை எனலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்டு வெளியேறிய பின்னர் அவரது பெயர் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டது. அன்னாரது  மறைவு இடதுசாரி போராட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு  பேரிழப்பாகும். 

Thursday, 24 October 2024

தீபாவளி திருவிழா

தீபாவளி பண்டிகை என்று சொல்லாமல் திருவிழா என்று சொல்வதற்கு காரணம
இருக்கிறது.காரணம்அதுஒரு ஜாதியோ மதத்தையோ இனத்தையோ சார்ந்து கொண்டாடப்படும் விழாவாக இருப்பதில்லை.ஏன்மத நம்பிக்கை இல்லாத ஆட்கள் கூட கொண்டாடும் திருவிழாவாக இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் எதற்காக கொண்டாடுகிறோம் என்று கூட தெரியாமல் கொண்டாடப்படும் திருவிழாவாக உள்ளது.வேண்டுமானால் இந்து மத  சாமியார்களும் ,இதைவைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள் வேண்டுமானால் நரகாசுரன் வதம் அது இதென்று கதை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.ஜைன மத துறவிகள் மகாவீரர் அமரத்துவம் அடைந்த தினம் என்பார்கள். சீக்கியர்கள் குரு கோவிந்த் குவாலியர் சிறையிலிருந்து விடுதலை பெற்ற தினம் என்பார்கள் அதன் தாத்பரியமெல்லாம் தெரியாது எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.நாங்களும் கொண்டாடுகிறோம் என்று கொண்டாடுபவர்கள் தான் இங்குண்டு.

சின்ன வயதில் தீபாவளி வருவதற்கு வெகு நாட்கள் முன்னமே நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுவோம்.தீபாவளி என்றால் புது ஆடை கிடைக்கும்.தீபாவளிக்கு மட்டும் தான் கிடைக்கும் ,அதுவும் பள்ளி சீருடை தான் கிடைக்கும் என்பது வேறு விஷயம் .சில நேரங்களில் அப்பாவிற்கு பணம் கிடைத்தால் கூடுதலாக வேறு கலர் ட்ரெஸ்ஸும் கிடைக்கலாம்.ஆனால் நிச்சயமாக புத்தாடை கிடைக்கும்.

வழக்கமாக பள்ளி சீருடையான காக்கி டவுசருக்கு தேவையான துணி அப்பா கடையில் அவர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் காக்கி துணியில் எங்களுக்கு தேவையான பகுதி கிடைத்துவிடும்.கூட வேலைபார்க்கும் ஒருவர்  டெரிகாட்டன்  தான் உடுத்துவார் .எனவே கடையில் கொடுக்கும் காட்டன் துணியை எங்களுக்கு கொடுத்து விடுவார்,மேல்சட்டைக்கு மட்டும் வெள்ளை துணி எடுத்து தருவார்கள்.வசதி ஏற்பட்டால் கூடுதலாக ஒரு செட் கலர் துணி கிடக்கும்.

நாங்க குடியிருந்த வீட்டுக்கு அடுத்து ஒரு பாய் தையல்கடை வைத்திருந்தார்.அந்த காலத்தில் பண்டிகை காலங்களில் தையல்கடைக்கு அதிக மவுசு இருந்தது.அதிகமாக ரெடிமேட் ஆடைகள் கிடையாது தீபாவளி ,பொங்கல் சீசன்களில் தையல் கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் .துணியை கொடுத்துவிட்டு பசங்க விடாமல் படையெடுப்போம்.அவர்களும் நேரம் காலம் பார்க்காமல் தையல் வேலை பார்ப்பார்கள் என்றாலும் மிகவும் சிரமப்படத்தான் செய்வார்கள்.தீபாவளிக்கு தானே போடப்போகிறீர்கள்,ஏன்டா பறக்கிறீர்கள் என்று பாய் விரட்டுவார் .இருந்தாலும் விடமாட்டோம். வேடிக்கையாய் இருக்கும்.

 எனது பதினைந்தாம்வயதில் தீபாவளிக்கு முதன்முதலாய் வேட்டி கட்டினேன். வேறொரு  காரணமும் இல்லை.அந்த வருடம் நாட்டில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு அரசியல் தொழிற்சங்க போராட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தன.அதனால் முதலாளிகள் வசதியாக போனஸ் போன்ற சலுகைகள் அவர்கள் மனதுவைத்தால்  மட்டுமே கொடுக்கலாம் என்று நிறுத்தி விட்டனர்.என் அப்பாவிற்கு வழக்கமாய் கிடைக்கும் ஒருமாத ஊதியம் போனஸுக்கு பதிலாய் அரைமாத ஊதியமே போனசாய் கிடைத்தது. அதுவும் மிக தாமதமாய் தீபாவளிக்கு முதல் நாள் தான்  கிடைத்தது.அதனால் முதன் முறையாக ரெடிமேட் ஆடை  வாங்க போனோம்.வேட்டி வாங்கலாம் என அடம் பிடித்து அரசிற்கு எனது மானசீக எதிர்ப்பை காட்ட எண்ணி கருப்பு கரை வைத்த வேட்டி வாங்கி காட்டினேன்.அநேகமாய் எனது முதல் அரசியல் நடவடிக்கை இதுவாய் தான் இருக்கும்.அம்மாவிற்கு முதன் முதலாய் கருப்பு கரை வேட்டி கட்டியதில் வருத்தம் தான். 

அப்புறம்முறுக்கு,அதிரசம் சீடை என்று  விதவிதமாய் தின்பண்டங்கள் பலகாரங்கள் சமைப்பார்கள்.இதெல்லாம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பே தயாராக ஆரம்பித்துவிடும்.முதல் செட் சாமிக்கு படைப்பதற்கென்று தனியாக எடுத்து வைத்து விடுவார்கள்.சாமிக்கு படைப்பது எச்சில் படக்கூடாதல்லவா.அனால் எங்களுக்கு இதெல்லாம் புரியாது.அதிரச மாவு தயார்செய்து வைத்திருப்பார்கள். திருட்டுத்தனமாய் அதிரச மாவை எடுத்து தின்று விட்டு மாட்டிக்கொள்வோம்.எவ்வளவு ஜாக்கிரதையாய் திருடி தின்றாலும் அம்மா கண்டுபிடித்து விடுவார்கள்.அடையாளம் வைத்திருப்பார்கள்.கண்டுபிடித்து செம்மையாய் அடி  கொடுப்பார்கள்.பெரும்பாலும் அப்பா சமாதானப்படுத்தி அடி விழாமல் காப்பாற்றி விடுவார். சின்ன பசங்க தானே சாமியெல்லாம்  கோபித்துக்கொள்ளாது என்பார்.ஆனாலும் அம்மா சமாதானமாக மாட்டார்கள்.    

அப்புறம் தீபாவளி என்றால் பட்டாசு,மத்தாப்பு வகையறாக்கள் தான்.அப்பா வேலை பார்க்கும் கம்பனியில் சிவகாசியிலிருந்து நிறைய பார்சல் வரும்.வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு பிரித்து கொடுப்பார்கள்.  அப்பா கம்பெனியில் வேலை செய்யும் சாமு அய்யர்,அக்கௌன்டன்ட் வீட்டில் சின்ன பிள்ளைகள்இல்லாததால் எங்களுக்கே கொடுத்து அனுப்புவார்கள் .குட்டி சாக்கு நிறைய பட்டாசுகள் கொண்டு வருவார்.ஆனாலும் திருப்தி அடையமாட்டோம்.அப்பாவுக்கு தெரிந்த நண்பர் ரெத்தினம் நாடார் தீபாவளிக்கு பட்டாசு கடை போட்டிருப்பார்.அம்மாவுக்கு தெரியாமல் நானும் தம்பியும் அவர் கடைக்கு போய் நிற்போம். கூட்டம் நிறைய இருக்கும் .நான் பொறுமையாய் அவர் பார்ப்பதற்காக காத்திருப்பேன்.ஆனால் என் தம்பி பொறுக்க மாட்டான்.மாமா ..மாமா என்று கூப்பிடுவான்.அவர் பார்த்தவுடன் வேலையாட்களிடம் சீனி பசங்க வந்திருக்காங்க கொஞ்சம் பட்டாசு கொடுத்துவிடுங்கள் என்பார்.எல்லா சின்ன ஐட்டங்களிலும் போட்டு நிறையவே கொடுத்து அனுப்புவாரக்ள்.வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் திட்டு கிடைத்தாலும் கவலைப்படுவதில்லை .

எனக்கு நினைவு தெரிந்து முதலில் போட்டு கேப் என்னும் வெடிதான் வெடித்த ஞாபகம்,சின்னதாக பொட்டு வடிவில் நடுவில் சிறிது வெடிமருந்து வைத்தபகுதி உப்பி இருக்கும் வெடியை தான் எதாவது சுத்தி அல்லது கல்லை வைத்து அடித்து வெடிப்போம்.பிறகு ஓலை வெடி என்று ஒருவெடி.பனை   ஓலையில் முக்கோண வடிவில் வெடிமருந்து வைத்து வெளியில் திரி நீட்டியபடி இருக்கும் வெடி .வௌக்குமாற்றுக்குச்சியில்  ஓலைவெடியை செருகி வைத்துக்கொண்டு வெடிப்பது.அப்புறம் சீனி வெடி என்று கொஞ்சம்வளர்ந்த பிள்ளைகள் வெடிப்பது வழக்கம்.

கொஞ்சம் வளர வளர வெடி போடும்போது சேட்டைகளும் சேர்ந்தே வளரும்.கையில் பிடித்து வெடியை பற்றவைத்து எறிவது,சரவெடியை பற்றவைத்து எறிவது ,ஏதேனும் டப்பா அல்லது தேங்காய் சிரட்டைக்கு அடியில் வெடியை வைத்து பற்றவைத்து வெடிப்பது,அடுத்த தெருவுக்கு போய் ஆள் பார்க்காத நேரத்தில் தூம்பு ஓட்டைகளில் வெடியை வைத்து பற்றவைத்து விட்டு ஓடிவிடுவது என்றெல்லாம் வானர சேட்டைகள் கூடும்.

நாள்  பூராவும் வெடி வெடித்தாலும் திருப்தி அடையாமல் பெரியவர்கள்,நிறைய வெடி வெடிப்பவர்கள் வெடி போடும்போது போய் வேடிக்கை பார்ப்பது எல்லாம் வழக்கம்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் கடைசியில் வெடிக்காத வெடிகள் புஷ்வாணங்கள் ,மத்தாதப்புகளை  பொறுக்கி,அவைகளை பிரித்து வெடிமருந்துகளை அட்டை டப்பாக்களை போட்டு சொக்கப்பனை கொளுத்தினால் தான் திருப்தி வரும்.மூஞ்சி கைகால் எல்லாம் வெடிமருந்து அப்பிக்கொண்டு வந்து அம்மாவிடம் அடிவாங்குவது பழக்கமான ஒன்று.   

  பெரியவன் ஆனதற்கு அடையாளம் வெங்காய வெடி என்னும் எறிவெடி வாங்கி வந்து தரையிலோ அல்லது யார்வீட்டு சுவற்றிலாவது எறிந்து வெடிவெடிப்போம்.அகப்பட்டால் திட்டு,வசவு தான்.

தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம்.சின்ன வயதில் ஊரும் அளவுக்கு நிறைய எண்ணெய் தேய்த்து விடுவார்கள். பின்னாளில் பெயரளவிற்கு எண்ணெய்யை தொட்டுவைத்துவிட்டு குளிப்போம்.

தீபாவளி என்றால் வடை பலகாரங்கள்.இறைச்சி என்று சாப்பாடு அமோகமாய் இருக்கும். போகும்போதும் வரும்போதுமாய் வடையை வாயிலே திணித்துக்கொண்டு வெடி வெடிக்க அல்லது பிறர் வெடிப்பதை வேடிக்கை பார்க்க பறந்து விடுவோம்.இறைச்சி என்றவுடன் ஞாபகம் வருவது ,எங்கள் வீட்டுக்கு வரும் அப்பாவுடன் வேலைபார்க்கும் அய்யர் நண்பர்கள் இறைச்சி சாப்பிடுவது தான்.என் அம்மா முதலில் இறைச்சி வைக்க யோசித்தார்,அப்பா தான் அவர்கள் நம் வீட்டில் சாப்பிடுவதே இறைச்சிக்காகத்தான் என்பார்.அவர்களும் எங்கள் வீட்டிலெல்லாம் சாப்பிட முடியாதே என்று சிரிப்பார்கள்.அப்புறம் எல்லா வகை தின்பண்டங்களையும் எடுத்துக்கொண்டு போய் உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக்கு கொண்டுபோய் கொடுப்போம்.அதே போல எல்லார் வீட்டிலிருந்தும் நம் வீட்டுக்கு தின் பண்டங்கள் வரும்.என்ன, எல்லாவற்றையும் பதம் பார்த்த பின் இரண்டு நாட்களுக்கு வயிறு நம்மை பாடாய் படுத்தும்.  . 

   அதே போல கொஞ்சம் வளர்ந்த பின் ,தீபாவளிக்கு முதல் நாள் நகர்வலம் போவோம்.என்ன நகர்வலம் ஊர் சுற்றுவது தான்.கீழவாசல் விளக்கு தூணிலிருந்து சென்ட்ரல் வரை சாலை நிறைய கடைகள் நிறைந்திருக்கும்.பயங்கர கூட்டமாய் இருக்கும் ,எந்த திட்டமுமில்லாமல் விடிய விடிய ஊரைசுற்றிவிட்டு ஏதோ வாங்கி வருவோம்,ஒருவருடம் வீதியோரம் வாங்கி வந்த மெர்குரியை கொளுத்தினால் எரியவே இல்லை.அப்பா கிண்டலாக கொஞ்சம் மண்எண்ணெய் ஊற்றி கொளுத்துங்கள் என்றார்.அப்படி ஊற்றி கொளுத்தியும் எரியவில்லை. உடைத்து பார்த்தால் வெறும் களிமண் உருண்டைகளை வெடிமருந்தில் உருட்டி ஜிகினா பேப்பர் சுத்தி விற்றிருந்தனர். அது மாதிரி டுபாக்கூர் வியாபாரங்களும் தீபாவளி கூட்டங்களில் நடக்கும்.

அது சரி இப்போது அதெல்லாம் நினைத்தால் கனவு போல் இருக்கிறது.சிரிப்பாகவும்  இருக்கிறது.


என்ன செய்வது ...பழைய நினைப்புடா பேராண்டி பழைய நினைப்புதான்னு போகவேண்டியது தான்  

Wednesday, 23 October 2024

என் கதை 3

 நான் ஒரு வழியாக ஆரம்ப கல்வி முடித்து உயர்நிலைப்பள்ளியில் சேர முடிவெடுத்தபோது அருகில் சௌராஷ்டிரா உயர்நிலைப்பள்ளி,விருதுநகர் நாடார் உயர்நிலைப்பள்ளி,செயின்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளி  என அருகில் பள்ளிகள் இருந்தாலும் அப்பாவிடம் சில நண்பர்கள்  சொன்னதன் பேரில் அப்பா தியாகராஜர் நன்முறை உயர்நிலைப்பள்ளியில்   சேர்த்துவிடமுடிவு செய்தார்.பக்கத்துக்கு வீட்டு மாரிமுத்து அண்ணன் என்னை அப்பள்ளிக்கு நுழைவு தேர்வு எழுத அழைத்து சென்றார்.பரீட்சை முடிந்தவுடன் தேர்வு முடிவினையும் ,பள்ளியில் சேரவேண்டிய தேதியையும் அறிவிப்பு பலகையில் ஒட்டினர்.ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் சேரவேண்டும் என குறிப்பிட்டதை தவறாக புரிந்துகொண்ட நான் அந்த தேதிக்கு பின்னர் சேரவேண்டும் என அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.

அந்தவருடம் முழுப்பரிட்சை விடுமுறையின் போது என் சொந்தஊரிலிருந்து அண்ணன் மகாதேவன் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போதெல்லாம் பொழுது போக்கு என்பது திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பது மட்டும் தான் அதிகம்.நானும் அவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் போதும் அப்போதைக்கு ஓடுகிற எல்லா படங்களையும் பார்த்து விட்டு தான் மறுவேலை.அவர் வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம்,அதனால் திரைப்படம் காணச்செல்லும் செலவுகளுக்கு கவலைப்படத்தேவையில்லை .அந்தவருடம் விடுமுறையின்போது இருபது படங்கள் பார்த்ததாக ஞாபகம்.அவரும் ஊருக்கு திரும்புகின்றவேளை.அப்பா மத்திய உணவிற்காக வந்தபோது பரபரப்பாக என்னை தேடினார்.காரணம் பள்ளியில் சேர அன்று தான் கடைசி தினம் என்று அறிவித்திருந்தனர்.ஆனால் நான் கவனக்குறைவாக அந்த தேதிக்கு பின் சேரவேண்டும் என என் தந்தையிடம் சொல்லியிருந்தேன்.அப்பா தற்செயலாக அவர்வேலை பார்க்கும் கடையிலிருந்து பள்ளிக்கு தொலைபேசியில் விசாரித்தபோது அன்று தான் கடைசி தினம் எனவே உடனடியாக பள்ளியில் அழைத்துவந்து சேர்க்க சொல்லிவிட்டனர்.

நல்லவேளையாக சினிமாவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தோம்.அப்பா என்னை பிடித்துவிட்டார்,இல்லையென்றால் சிட்டாக பறந்திருப்போம்.வேகமாக வீட்டுக்கு வந்து ரெக்கார்ட் சீட் அதாங்க டீ சி  தேடினால் காணவில்லை.ஆரம்ப பள்ளியிலிருந்து வாங்கி வந்த ரெகார்ட் சீட்டை என்னுடைய புத்தகம் ஒன்றில் வைத்து பையில் தொங்க விட்டிருந்தேன்.என் இரண்டுவயது  தங்கை விளையாடுவதற்கு பையை இழுத்துப்போட்டு எல்லாவற்றையும் பரப்பி போட்டிருந்தது.என்னுடைய ரெக்கார்ட் சீட் கசங்கி குப்பையாய் சுருண்டு கிடந்தது.சாணித்தாள் காகிதம் பார்க்க சான்றிதழ் போல தெரியாது.என்னுடைய நல்ல நேரம் கிழித்து போடாமல் சுருட்டி போட்டிருந்தது.ஒருவழியாய் எடுத்துக்கொண்டு சைக்கிளில் பரந்து சென்று பள்ளியில் சேர்த்தார்கள்.அப்போதெல்லாம் சைக்கிளில் டபுள்ஸ் போவது குற்றம் .போலீஸ் பிடித்து அபராதம் போடுவார்கள். 

 எங்கள் பள்ளி தியாகராஜர் நன்முறைப்பள்ளி தெப்பக்குளத்தின்தென்கரையில் இருந்தது.வடகரையில் தியாகராஜர் கலைக்கல்லூரி இருந்தது.மேற்கு கரையில் தியாகராஜர் கல்வியியல் கல்லூரி இருந்தது.கிழக்கு கரைப்பக்கம் கருமுத்து தியாகராஜர் அய்யா அவர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது.கிடைத்திருந்தால் அந்த கரைப்பக்கமும் ஏதாவது கல்விநிலையம் ஆரம்பித்திருப்பார்.துரதிஷ்டவசமாக அந்தப்பக்கம் இடம் கிடைக்கவில்லை. 

Thiagarajar Model High School என்பது எங்கள் பள்ளியின் ஆங்கில பெயர்.பொதுவாக model school என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாக முன்மாதிரி பள்ளி  என்று தான் எல்லா இடங்களிலும் பள்ளிகளின் பெயர் இருக்கும். ஆனால் எங்கள் பள்ளிக்கு முன்மாதிரி என்பதற்கு பதிலாக நன்முறை உயர்நிலைப்பள்ளி என்று அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் பெயரிட்டிருந்தனர்.பொதுவாக படிக்கும்போது பெரும்பாலானோருக்கு தாங்கள் படிக்கும் பள்ளியை விரும்புவதில்லை.ஆனால் படித்துமுடித்துவிட்டு பின்னாளில் அதே பள்ளியையும் பள்ளிக்காலத்தையும் பெருமையாகவும்,மகிழ்வாகவும் நினைவு கூறுவது வழக்கம்.எத்தனையோ வருடங்கள் கழித்துகூட என்னுடைய பள்ளித்தோழர்கள் இன்றும் கூட சந்தித்து பேசி நண்பர்களது வீட்டு நல்லது கெட்டது என சுக துக்கங்களில் பங்கெடுக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் ,அது பற்றி பின்னர் விரிவாக பேசலாம். 

அப்போதே எங்கள் பள்ளி மதுரையில் இரண்டாவது பெரிய பள்ளியாக இருந்தது.அரசு உதவிபெறும் பள்ளியாகவும் இருந்ததால் கட்டணங்கள் அதிகம் இல்லை.A பிரிவு மட்டும் ஆங்கில முறை கல்வியாகவும் ,மற்ற வகுப்புகள் தமிழ்முறை கல்வியாகவும் இருந்தன, எல்லா மாணவர்களுக்கும் ஒரே யூனிபார்ம் தான்.காக்கி டவுசர்,வெள்ளை சட்டை.எங்களது இளமைக்காலத்தில் நாடு முழுக்க ஒரே பிரச்னை தான்.உணவு,உடை,இருப்பிடம் .மற்ற விஷயங்களை பிறகு பேசுவோம்.உடை மிகவும் வேதனைக்குரிய விஷயம் ,ஏழை மாணவர்களைப்பொறுத்தவரை பள்ளி சீருடை தான் எப்போதுமே .தீபாவளியோ பொங்கலோ ஏதாவது பண்டிகைக்கு வீட்டில் எடுத்து தருவது சீருடையாக தான் இருக்கும் .  நான் ஆறாம்வகுப்பு பி செக்சனில் சேர்ந்தேன்,கனகாம்புஜம் டீச்சர் தான் வகுப்பு ஆசிரியை.மிகவும் நல்லவர் .


இன்னும்  சொல்வேன்   

Tuesday, 15 October 2024

என் கதை 2

 என் ஆரம்ப பள்ளிக்காலத்து நினைவுகளைப்பற்றி இன்னும் சொல்ல ஆசை தான் ,ஆனாலும் சுருக்கமாய் சொன்னால் தானே நன்றாய் இருக்கும் .எனக்கு பள்ளியில் பிடிக்காத வகுப்பு எனது மூன்றாம் வகுப்பு தான்,காரணம் எனது வாத்தியார்.அவரது பெயரெல்லாம் ஞாபகம் இல்லை.நாங்கள் வாய்த்த பட்டப்பெயர் மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது.தூங்கு மூஞ்சி வாத்தியார் என்பது தான் அவருக்கு நாங்கள் வைத்த செல்ல பெயர்.காரணம் அவர் எப்போதும் வகுப்பில் தூங்கிக்கொண்டே இருப்பார்.பசங்களெல்லாம் கூச்சலிடும்போதுஅவர்  விழித்துக்கொண்டு  பிரம்பை எடுத்து மேஜையில் அடித்து சைலன்ஸ் என்று சப்தமிடுவார்.  பிறகு இரண்டு பையன்களை  கடையில் வடை டீ வாங்கி வர அனுப்பி வைப்பார். போட்டி போட்டுக்கொண்டு செல்வோம்.

அந்த நேரத்தில் எனக்கு ஒரு பையன் நட்பு கிடைத்தது.அவன் என்னைவிட பெரிய பையன்.பள்ளிக்கூடத்திற்கு கட்டடித்துவிட்டு இம்பிரியல் சினிமா தியேட்டருக்கு கூட்டி சென்றான்.இடைவேளையில் பீடி பிடித்தான், வீட்டுக்கு திரும்பிவரும்போது என்னுடைய நல்ல நேரம் தெரிந்தவர்கள் கண்ணில் பட்டு அம்மாவிடம் சொல்லி விட்டார்கள்.நல்ல அடி கிடைத்தது.அதோடு அந்த பையன் சகவாசம் முடிந்தது.இல்லாவிட்டால் உருப்படாமல் போயிருக்க வாய்ப்பு அதிகம்,தூங்கு மூஞ்சி வாத்தியார் இல்லாமல் நல்ல வாத்தியார் இருந்திருந்தால் இது நடக்காமல் போயிருக்கும்.

முதலில் ஜோதி டீச்சர் வீட்டுக்கு டியூஷன் போனேன் என்று சொன்னேனல்லவா .அவர்கள் எங்கள் தெருவிலிருந்து மூன்று தெரு தள்ளி இருந்தது.சின்ன குறுக்கு சந்தில் அவர்கள் வீடு.சந்து ஆரம்பத்தில்  ஒரு பனைமரமும் கீழே ஒரு சின்ன கோவிலும் இருந்தது.ஒருமுறை டீச்சர் வீட்டுக்கு டியுசன் முடித்து   திரும்பும்போது கோவில் எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது,சின்ன கல்லைத்தான் சாமியாக கும்பிட்டு கொண்டிருந்தனர்.சிலை உருவமெல்லாம் கிடையாது.சாமி மேலே வெள்ளையாய் பூசியிருந்தனர்.நிறைய மாலையெல்லாம் போட்டிருந்தனர்.கரண்டும் இல்லை ஆட்களும் இல்லை.அந்த கோவிலை கடக்க பயமாய் இருந்தது.பயத்தில் கால் நடுங்க நின்றுகொண்டே இருந்தவன் அந்தப்பக்கம் ஆள் நடமாட்டத்தை பார்த்தவுடன் ஒரே ஓட்டமாய் கோவிலை கடந்து ஓடியவன் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். மண்டை உடைந்து ஒரே ரத்தம்.  

அந்தப்பக்கம் வந்தவர்கள் தூக்கி விட்டு கழுவிப்பார்த்ததில் நெற்றியில் காயம் சுத்தம் செய்து விட்டு முதல் உதவி செய்தனர்.ரத்த போக்கை நிறுத்த காப்பி பொடியை அழுத்தி வைத்து கட்டு போட்டு வீட்டுக்கு கொண்டு போய் விட்டனர்.மறுநாள் நெற்றி வீங்கி ஆஸ்பத்திரிக்கு அம்மா என்னை அழைத்து போய் வைத்தியம் பார்த்தார்கள் .காபித்தூள் வைத்து காட்டியதற்கு ஆஸ்பத்திரியில் நிறைய திட்டு கிடைத்தது.அம்மா என்ன செய்வார்கள் பாவம்.காயம் குணமாகி பெரிய தழும்பாய் இருந்தது.இன்னமும் சிறியதாய் தழும்பு இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதன் பிறகு டியூசன் போக மறுத்துவிட்டேன்.

நான்காம் வகுப்பிற்கு வந்த பின் வகுப்பு ஆசிரியை வசந்தா டீச்சர் வீட்டிற்கு டியூசன் போக   ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை வசந்தா டீச்சர் வீட்டிற்கு படிக்க சென்றேன்,அந்த ஆரம்ப கல்விக்கு நல்ல அடித்தளம் போட்டவர்கள் வசந்தா டீச்சர்அவர்களும் அவரது கணவரும் தான்.என்றென்றும் நன்றிக்குரியவர்கள்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது வாரா வாரம் ஒரு நாள் சனிக்கிழமை என்று நினைக்கிறேன்,பெரியவகுப்பு,அதுதாங்க ஐந்தாம் வகுப்பு மாணவர்களை நீச்சல் பழக தெற்கு வெளிவீதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியிலிருந்து நீச்சல் குளத்திற்கு அழைத்து செல்வார்கள்.    முன்னால் ஒரு டீச்சர்,வரிசையாய் மாணவர்கள்,கடைசியில் ஒரு டீச்சர் என்று பாதுகாப்பை ஊர்வலம் போவது போல அழைத்து செல்வார்கள்.நீச்சல் குளத்தில் ஆழமில்லாத பகுதில் நீச்சல் பழக விடுவார்கள்.நீச்சலெல்லாம் பெரிதாய் பழகவில்லை.போய் சப்தமிட்டுக்கொண்டே தொபுக்கடீரென்று  என்று மொத்தமாய் குதித்து விளையாடுவோம்.இலவச பள்ளி காலத்திலேயே எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இருந்தது.இப்போதெல்லாம் தனியார் பள்ளிகளில் அதற்கும் கட்டணம் தான்.நான் இதை சொன்னால் இப்போது கதை விடுகிறேன் என்று தான் சொல்லுவார்கள்.ஆனால் நடந்தது நிஜம்.ஒரு வழியாக ஆரம்ப கல்வி முடிந்து உயர்கல்விக்கு சென்றேன்.



இன்னும் சொல்வேன்...

Friday, 11 October 2024

என் கதை

 நான் பள்ளிக்கு சென்றதே வேடிக்கை தான். ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ,மதுரை கான்பாளையம் குறுக்குத்தெருவில் இருந்த நகராட்சி தொடக்க பள்ளிக்கு நான்கு வயதாக இருக்கும்போதே அம்மா பள்ளிக்கு அழைத்து சென்றார்கள்.அப்போதெல்லாம் நர்சரி பள்ளியெல்லாம் கிடையாது.அரசு பள்ளிகள் ,அரசு உதவி பெறும்பள்ளிகள் மட்டுமே.பிள்ளைகளை படிக்க வைக்க டொனேஷன் ,நிறைய பணச்செலவுகள் கிடையாது.அந்தவகையில் பெற்றோர்கள் அதிருஷ்ட சாலிகள்.குறிப்பாக ஏழைகள்... அப்போதெல்லாம் குழந்தை பிறந்தால் பதிவு செய்வதென்பதெல்லாம் கிடையாது.அதனால் பள்ளியில்  சேர்க்கும்போது சான்றிதழ் ஏதும் கேட்க மாட்டார்கள்.கையை மேலேதூக்கி தலைக்கு மேலாக காதை தொட்டால் போதும் .பள்ளியில் சேர்க்க அனுமதி கிடைத்துவிடும் .

அந்த பள்ளியை சுற்றியே நான்கு பள்ளிகள் இருந்தன என்றாலும் ,நாங்கள் குடியிருந்த ருக்மணிப்பாளையத்துக்கு  இது இன்னும் அருகில் இருந்தது. அந்தப்பள்ளியின் வாசலருகேயே ஒரு கடை இருந்தது.தாடி வாலா கடையென்று எல்லோரும் அழைப்பர்.அந்த கடையை வைத்திருந்தவர் சவுராஷ்டிரா .தாடி வைத்திருப்பார்.முடியை நன்றாக கொண்டாய் போட்டு ,பஞ்சகச்சம் கட்டியிருப்பார்.சட்டையெல்லாம் போட்டிருக்க மாட்டார்.செக்க செவேலென்றிருப்பார்.நரைத்த முடி ,தாடி.நெற்றியில் நீண்ட ஒற்றைக்கோடு செந்தூர ராமம் தீட்டியிருப்பார்.மரத்தாலான பாத குறடு அணிந்து கைதடியூன்றி நடந்து வருவார். பழைய காலத்து முனிவர்களை திரைப்படங்களில் பார்த்த மாதிரியே இருப்பார்.

கடையில் மிட்டாய்கள் ,நோட்டு புத்தகங்கள் ,ஸ்டேஷனரி, அலங்கார பொருட்கள் நிறைந்திருக்கும்.கடையில் சேமிப்பு சீட்டு பிடிப்பார்கள்.குறைந்தது நாலணா அதாவது இருபத்தைந்து பைசாவிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி வரலாம்.ஒரு சிறிய பற்று நோட்டில் வரவு வைத்து கொடுப்பார்கள்.அந்த நோட் பக்கம் முடியும்போது அல்லது தீபாவளி மாதிரி பண்டிகை முடியும்போது கணக்கு பார்த்து கொஞ்சம் பணம் வட்டிக்காக போட்டு கொடுப்பார்கள்.வரவு வைத்துக்கொள்வதற்கு சித்திரகுப்தன் நோட் போல பெரியதான நோட்டில் ஆளுக்கொரு பக்கம் வரவு வைப்பார்கள்.நம்முடைய நோட்டில் நுணுக்கி பொடி எழுத்தில் வரவு வைப்பார்கள்.அதாவது அதிகபட்சம் வரவுகள் வைக்கும் வகையில்  வரவு கணக்கு எழுதுவார்கள்.ஏமாற்றமாட்டார்கள்.என் அம்மா அங்கு என்னை அழைத்து செல்லும்போது தாடி தாத்தா கண்ணாடி ஜாடியிலிருந்து மிட்டாய் எடுத்துக்கொடுத்து சிரிப்பார்.அதற்காகவே அங்கு அழைத்து செல்ல அம்மாவிடம் அடம் பிடிப்பேன்.ஐம்பது வருடங்கள் கழித்து மீண்டும் மதுரையில் வாழும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அங்கு சென்று பார்த்தேன்.அந்த கடை இன்னும் இருக்கிறது.தாடிவாலா கடை என்ற பெயர்பலகையுடன் இருந்தது.நான் படித்த பள்ளி மட்டும் இல்லை.

அதனாலேயே என்னமோ என் அம்மா அந்த பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் சேர்த்தார்.என்னை பள்ளியில் சேர்த்துவிட்டு அம்மா காய்கறிவாங்க கடைக்கு போனார்கள்.என்னை பள்ளியில் விட்டு விட்டு அம்மா சென்றவுடன் பயந்து போய் வீட்டிற்கு ஒரே ஓட்டமாய் போய் கதவின் பின்புறம் ஒளிந்துகொண்டேன்.அம்மா கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தவர்கள் சமையல் செய்ய ஆரம்பித்து விட்டார். கதவு அசைவதை பார்த்தவர் பின்புறம் நான் ஒளிந்திருந்ததை பார்த்து என்னை சமாதானப்படுத்தி,கொஞ்ச மீண்டும் பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.அந்த நிகழ்ச்சி நன்றாய் ஞாபகம் இருக்கிறது.  

பள்ளிக்கு செல்லும்போது பையில் ஒரு சிலேட்டு எழுத சிலேட்டு குச்சி ,ஒரு அட்டை (அதாவது ஒருபக்கம் உயிர் ,மெய்,உயிர்மெய் எழுத்துக்களும்,மரு பக்கம் வாய்ப்பாடும் உள்ளது ),கூடவே ஒரு தட்டு இருக்கும்.அப்போது பள்ளியில் மதிய உணவு போடுவார்கள். பொதுவாகவே உணவுக்கு பற்றாக்குறை இருந்த காலம்.இலவச படிப்பும்,மதிய உணவும் இல்லைஎன்றால் ஏழைகளுக்கு கல்வி என்பது எளிதில் கிடைத்திருக்காது.

நன்கு துறுதுறுப்பாக இருந்ததால் என்னை அம்மா டியூஷனில் சேர்த்து விட்டார்கள்.பெரிய தொகையெல்லாம் கிடையாது.டியூசனுக்கு நாங்கள் கொடுத்ததைவிட ஜோதி டீச்சர் எனக்கு கொடுத்த சாப்பாடு தின்பண்டங்கள் அதிகம்.அவர்களுக்கு செல்ல பிள்ளையாக இருந்தேன்.

அடுத்து வசந்தா டீச்சர் வீட்டிலும் செல்ல பிள்ளையாக இருந்தேன்.ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்து விட்டேன்.வசந்தா டீச்சரின் கணவரும் ஆசிரியர் தான்.சின்ன சந்தேகம் வந்து விட்டாலும் டிக்சனரியை எடுத்து விளக்கம் சொல்லுவார்.அங்கிள் உச்சரிப்பை நன்கு சொல்லி தருவார்.

அவர்கள் எனக்கு அமைத்துக்கொடுத்த அடித்தளம் தான் பின்னாளில் நன்கு படிக்க எனக்கு உதவியது என்பதை எப்போதும் நன்றியோடும்,பெருமையோடும் சொல்வேன்.    



இன்னும் தொடர்வேன்.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்

 சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் என் அப்பாவின் அனுபவ கதை.

அவர் மதுரையில் ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்தார்.அப்போது அந்த வாகனம் மிகவும் பிரபலமானது.ஏனென்றால் ஒரே 350 சி சி நான்கு சிலிண்டர் மோட்டார்வாகனம் நாட்டிலேயே அது ஒன்று தான் .அந்த வாகனத்தின் உற்பத்தி செய்யும் நிறுவனமே மதுரையில் மட்டும் வியாபாரம் செய்யும் உரிமையை தங்கள் வசம் இருக்கட்டும் என்று வைத்திருந்தது. காரணம் வேறொன்றும் இல்லை.அவர்கள் ஆதியில் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனங்களை சில நகரங்களில் வைத்திருந்தனர்.பின்னர் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி கண்ட  பின்னர் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனங்களை மூடிவிட்டனர்.ராசிக்காகவோ எதுக்கோ மதுரை நிறுவனத்தை மட்டும் மூடிவிடாமல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனமாக தொடர்ந்தனர். 

வேறு யாருக்கும் விநியோக உரிமை வழங்காததால் இந்த நிறுவனம் மட்டுமே மதுரையில் ஏகபோக விற்பனை நிலையமாக இருந்தது.மோட்டார் சைக்கிள் அதிகம் இல்லாத காலம் அது.எனவே விற்பனை நிலையத்துடன் ஒரு ஒர்க் ஷாப்பும் இருந்தது.இரண்டிலும் சேர்த்து சுமார் இருபது பேர் வேலை பார்த்தனர் . 

அங்கு வேலை பார்த்தவர்களுக்கு குறைந்தது பத்து ஆண்டுகளிலிருந்து இருபது ஆண்டுகளாவது அனுபவம் இருக்கும்.  வருடாவருடம் ஊதிய உயர்வு ,போனஸ் என்றபோதிலும் ஊதியம் அதிகம் இல்லை .இருந்தாலும் அதைப்பற்றி கேட்க அவர்களுக்கென்று சங்கம் இல்லை. அவர்களுக்கும் அது பற்றிய விழிப்புணர்வும் இல்லை.அதனால் அதைப்பற்றி யாரும் பேசிக்கொள்வதில்லை.

அப்போது தான் தேசமெங்கும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.அரசியல் நடவடிக்கைகள் ,தொழிற்சங்கங்கள் முடக்கப்பட்டன.அது வரை ஒருமாத ஊதியம் போனசாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த வருடமும் அடுத்த வருடமும் போனஸ் அரை மாதமாக குறைக்கப்பட்டது.நாடே மூச்சு விடாத நிலையில் இவர்கள் எங்கே முணுமுணுப்பது.ஒருவழியாக அவசரநிலை நீக்கப்பட்டு தேர்தல்நடத்தப்பட்டு ஆட்சி மாறிய பின் நாடே காட்சி மாறியது.மெல்ல மெல்ல தொழிற்சங்க நடவடிக்கைகள் மீண்டு வர ஆரம்பித்தன.    

அவர்களுக்குள்ளே ஊதிய உயர்வு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்தன .மிக குறைத்த ஆட்களே உள்ளதால் தனியாக சங்கம் ஆரம்பிக்க பயமா அல்லது தயக்கமா தெரியவில்லை.ஏதேனும் ஒரு பொது சங்கத்தில் சேரலாம் என முடிவெடுத்தனர்.எந்த பொது அமைப்பில் சேருவதென்று விவாதிக்கையில் செங்கொடி இயக்கமே சிறந்ததென்று முடிவெடுத்தனர்.அவர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஒன்றிரண்டு பேர் காங்கிரஸ் ஆதரவாளர்கள்.அப்பா ஒருவர் மட்டுமே இடதுசாரி அனுதாபி.ஆனாலும் அனைவருமே செங்கொடி இயக்கத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அவர்களுக்கு திடீரென்று இடது சார்பு சிந்தனை வந்து அல்ல.அவர்களை பொறுத்தவரை செங்கொடி இயக்கம் ஒன்று மட்டுமே விலைபோகாமல் இறுதிவரை வாதாடி கோரிக்கைகளை பெற்று தருவார்கள் என்ற திடமான நம்பிக்கையே. 

அப்பா மட்டுமே தயக்கம் காட்டினார் .அவருக்கு மட்டுமே நம்பிக்கை குறைவு ,சங்கத்து மீது அல்ல ,தன் சக தொழிலாளிகள் மீதே.

எல்லோரும் உற்சாகமாக சி ஐ டி யு அலுவலகம் சென்று உறுப்பினராக சேர்ந்தனர்.ஆளாளுக்கு கோரிக்கைகளை பற்றி சங்க நிர்வாகியிடம் பேசினர்.கோரிக்கைகளுக்காக என்னவெல்லாம் செய்யவேண்டும் என ஆலோசனைகள் கூறினர்.என்னமோ வாழ்நாளெல்லாம் போராட்ட களங்களில் நின்ற மாதிரியாக பேசினர்.அப்பா மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.சங்க நிர்வாகி பொறுமையாகவும் நிதானமாகவும் பேசினார்.அவசரப்பட்டு போராட்டங்கள் செய்ய கூடாது.அமைப்பு ரீதியாக சேர்ந்து செயல்படுவதன் அவசியத்தையும் முதலில்  நியாயத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை வரையறுத்து நிர்வாகத்திடம் கொடுத்து குறிப்பிட்ட கால அவகாசத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும் எடுத்து கூறி அனுப்பி வைத்தார்.

அதன்அடிப்படையில் கோரிக்கைகளை வரையறுத்து நிர்வாகத்திற்கு சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.கடிதத்தை கண்டவுடன் நிர்வாகத்திற்கு கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.அவர்களால் தங்கள் தொழிலாளர்கள் செங்கொடி இயக்கம் மூலம் கடிதம் அனுப்பியதை ஜீரணிக்க முடியவில்லை.தனித்தனியாக கூப்பிட்டு விசாரித்தனர்.செல்லமாக மிரட்டவும் செய்தனர்.உடனடியாக தொழிலாளர்கள் அடுத்த நிலைக்கு அதாவது சங்கமாக சேர்கிற நிலைக்கு செல்லாமல் தடுக்க முடிவு செய்தனர்,சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலேயே ஊதிய உயர்வும் சில கோரிக்கைகளை நிறைவேற்றியும் அறிவித்தனர்.நிர்வாகத்துக்கு மிகவும் நம்பிக்கையான விசுவாசியுமான தொழிலாளியிடம் விசாரித்து களையெடுக்க முடிவு செய்தனர்.மிகவும் வீராவேசமாக பேசியவர் யார் யார் என்ற விபரத்தை நிர்வாகத்திடம் போட்டு கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டார்.

சலுகைகளை பெற்றபின்னர் சங்கத்து நிறைய செய்யவேண்டுமென  ஆரம்பத்தில் ஆளாளுக்கு பேசியிருந்தனர்.ஆனால்சம்பள உயர்வு சலுகைகள் பெற்றபின்னர் யாரும் மூச்சு கூட விடவில்லை.சங்க கட்டிடம் பக்கம் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை.அப்பா கூப்பிட்டு பார்த்தார் .யாரும் வருவதாக தெரியவில்லை.

அவர் மட்டும் தனியாக சென்று அவரால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்துவந்தார்.தனது வருத்தத்தை சங்க நிர்வாகியிடம் தெரிவித்த போது அவர் மென்மையாக சிரித்தவாறே இதல்லாம்  சகஜம்  தான் தோழரே என்று அனுப்பி வைத்தார் .

Tuesday, 8 October 2024

   இது என்னுடைய சுய அறிமுகம்.அரசு பணியில் நாற்பதாண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் .என்னுடைய அனுபவங்களையும்,எண்ணங்களையும் பரிமாறிக்கொள்வதற்கான தளமாக இதனை துவங்குகிறேன்.நான் ஒன்றும் பெரிய எழுத்தாளரோ,படைப்பாளியோ ,தலைவனோ இல்லை .  அவ்வளவு தான்.அதனால் என் சொந்த கதைகளை ,அனுபவங்களை எழுதுகிறேன்.

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...