சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 30 December 2024

வருது பார் புத்தாண்டு

 அடக்கியாண்ட ஆங்கிலேயன்

அரசாள வைத்தது ஆங்கில ஆண்டு...


அவனே வரவுசெலவுக்கென 

அமைத்தது வருமான ஆண்டு.....


பிள்ளைகள் படிப்புக்கென 

படைத்தான் கல்வியாண்டு.....


முப்பால் படைத்த 

முத்தான குறள்

தந்த வள்ளுவராண்டு


முத்தமிழ் கண்ட 

தமிழனுக்குண்டு

தைப்புத்தாண்டு,,,,   


உலகுக்கெல்லாம் 

அகம் புறமென 

இலக்கியம் கண்டு


வாழ்ந்து காட்டிய 

தமிழனுக்கெதுக்குஆடம்பரமாய்

ஆங்கில புத்தாண்டு?!  


அருமையாய் தான் 

கொண்டாடிவோமே

நமக்கான தமிழராண்டை........ 

 


Saturday, 28 December 2024

வள்ளலார்

 


சனாதனமும், 

சாதி மத பேதமும் 

மனிதனை பிடித்த நோக்காடு

அதனால் புவி ஆகுமே

சாக்காடு எனவுரைத்தார்..... 


வாடிய பயிரையும் 

பசித்த வயிரையும்

கண்டு நொந்தார்

பசிப்பிணி நீங்க

 மருந்து கண்டார்... 


நந்தனார் வரிசையில் 

தீக்கிரையாக்கி

சோதியில் ஐக்கியமாக்கி

அவரையும் கடவுளாக்கி

பொய்யளந்து விட்டாரே..... 

@@@@@########@@@##


வள்ளலார் அருள்மொழிகள்


"சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

 சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

 அபிமானித்  தலைகின்ற உலகீர்!" (அருட்பா 5566)


 " மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது

வருணாச் சிரமமெனு மயக்கமும் சாய்ந்தது

 (அருட்பா 4513)


"சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்" (அருட்பா 4075)


."சாதிமதந் தவிர்த்தவரே அணையா வாரீர் " (அருட்பா 4476)


"வேதாக மங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்னபயனோ இவை. (திருவருட்பா 5516)

Friday, 27 December 2024

கற்றது தமிழ் எனது பள்ளி அனுபவங்கள்

கற்றது தமிழ் 

எங்கள் பள்ளியில் தமிழுக்கு ஒரு சிறப்பு உண்டு. மாணவர்கள் மத்தியில் யாராவது சிறப்பு பேச்சாளர்களை அழைத்து வந்து தலைப்புகளிலே யாராவது பேச வைப்பார்கள். தமிழ் மன்றங்கள் போன்ற அமைப்புகளை எல்லாம் வைத்து மாணவர்களை பங்கேற்க செய்து தமிழை பரப்பும் வேலையை செய்வார்கள். 

நான் படிக்கின்ற காலத்தில் எனக்கு தமிழில் அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. புலவர்கள் தங்களுடைய சொந்த வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காக, மன்னர்களையும், வசதி படைத்தவர்களும், புகழ்ந்து, பாராட்டி, பரிசுகள் பெற்று வயிறு வளர்த்துக் கொள்வதற்காக பாடல்கள் எழுதுவார்கள் என்று ஒரு முட்டாள்தனமான நம்பிக்கைகளை கொண்டிருந்தேன். அந்த முட்டாள்தனமான நம்பிக்கையை உடைத்து எறிந்தது என்னுடைய நண்பர் வேலாயுதம். அதெல்லாம் பிற்காலத்து கதை. ஆனால் நான்  பள்ளியில் தமிழ் படித்த கதையை தான் இப்போது கூறுகிறேன்.. 

எங்கள் பள்ளியில் எல்லா தமிழ் ஆசிரியர்களும் சிறப்பாகவே பாடம் நடத்தினார்கள். தமிழை வாசிக்க, நேசிக்க கற்றுக் கொடுத்தார் கள், என்றாலும் சிந்தனையை தூண்டினார்களா, என்று நான் நினைத்துப் பார்க்கும்போது எனக்கு மிகவும் சிறப்பானவராக தோன்றுபவர் ராமலிங்கம் ஐயா தான்.  

ஏனென்றால் பெரும்பாலான தமிழ் வகுப்புகளிலே புராணங்களை பற்றி ஏராளமான செய்யுள்கள் இருக்கும். எனக்கு பல விஷயங்கள் அதீதகமாக சொல்லப்பட்டதாக நான் உணர்ந்து , அவற்றை தமிழ் ஆசிரியரிடம் ஐயம் தெளிவு பெற விளக்கம் கேட்டால், பெரும்பகுதி வசவு கிடைக்கும் அல்லது, அடி தான் கிடைக்கும். அப்படியே பொட்டை மனப்பாடம் செய்து ஒப்புவித்தால், அல்லது எழுதினால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

அரக்கர்கள் உலகத்தை பாயாக சுருட்டிக் கொண்டு கடலிலே ஒளிந்து கொண்ட போது, கடலை குடித்து உலகத்தை அகத்தியர் மீட்டதாகவும், சிவபெருமான் திருமணம் நடைபெற்றபோது தேவர்கள், பூதகணங்களனைவரும் குவிந்ததால், பாரம் தாங்காமல் வடக்கே இமயமலை தாழ்வு பெற தெற்கு நோக்கி வரும் போது, இமயமலையை விட விந்திய மலை உயர்ந்த போது, அம்மலையின் ஆனவத்தை அடக்கி, வளர்ச்சியை நிறுத்தி, பொதிகை மலைஅடைந்து உலகம் சமநிலை அடைய செய்ததாக கம்பராமாயணம் பாடல்களை தமிழாசிரியர் பாடமாக நடத்தினார். நான் எந்த இடத்தில் நின்று கொண்டு கடலை குடித்து எந்த உலகத்தினை மீட்டார் என்று சிறு பிள்ளைத்தனமாக கேட்டு, நல்ல அடிகிடைத்தது. 

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது பாமா என்று தமிழாசிரியை ஒருவர் விடுப்பு ஆசிரியராக லீவு வேகன்சியில் பணியில் சேர்ந்திருந்தால். அவர் மாணவர்களை உற்சாகப்படுத்தி தமிழ் மன்றங்களில் பங்கேற்க செய்வார். என்னை முதன் முதலில் வகுப்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பேச வைத்தார். எனக்கோ டங்க் டை tongue tie என்ற ஒரு பிரச்சனை. நாக்கு சரியாக பிறளாததால் ழகரம் போன்ற உச்சரிப்புகள் சரியாக வராது. அதனால் சற்று திக்கி தடுமாறி தான் பேசுவேன். இருந்தாலும் என்னையும் ஊக்குவித்து என்னை பேச வைத்தார். கல்வியின் சிறப்பு பற்றி

 "வெள்ளத்தால் போகாது

வெந்தழலால் வேகாது 

கள்வரால் கொள்ளை போகாது" என்றெல்லாம் கல்வியை பற்றி பேசினேன். அது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. 

லீவ் வேக்கன்சி இல்லாததால் பாமா தமிழாசிரியை பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அந்த நேரத்தில் எனது தாத்தா பாட்டி இருவரும் காலமானதால் நான் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆகவே அவர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்டு செல்லும்போது சந்திக்கவே இல்லை. இதுவரை இன்னும் சந்திக்க வில்லை என்று வருத்தமும், ஏக்கமும் இருக்கிறது. ஏனென்றால் என்னை முதன் முதலில் பேச வைத்து அழகு பார்த்தவர் அவர்தான். 

சீனிவாசன் என்று ஒரு தமிழ் ஐயா இருந்தார். அவர் மிகவும் அமைதியானவர். எப்பொழுதும் வெள்ளை வேட்டி, முழுக்கை சட்டை, புன் சிரிப்போடு காணப்படுவார். அவருக்கு மாணவர்கள் என்றால் மிகவும் பிரியம். அவரிடம் தினசரி போய் திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்கள் உண்டு. எனது நண்பர்கள் இளங்கோ அப்துல் ரசாக் போன்றோர் தினசரி அவரை சந்தித்து திருக்குறள் ஒப்பிப்பார்கள். நானும் சில தடவை போய் திருக்குறள் ஒப்பித்தது உண்டு. 

அவர் ஒருமுறை வகுப்பில் தமிழ் மன்றத்திற்கான கூட்டத்திற்கு பழனியப்பன் ஐயா அவர்கள் தலைமையேற்று நடத்திட வேண்டும் என்று கூறினார். பழனியப்பன் ஐயா மிகவும் சிறப்பான தமிழ் ஆசிரியர். அவர் மிகவும் குண்டாக இருப்பார். என்னுடைய வகுப்பில் மிகவும் துடிப்பான மாணவன் குமரேசன் தான். நன்றாக கூட்டங்களில் எல்லாம் பேசுவான். அவன் விளையாட்டாக பழனியப்பன் ஐயா வர வேண்டும் என்றால் இரண்டு இருக்கைகளை சேர்த்து போட வேண்டும் என்று கூறிவிட்டான் உடனே சீனிவாசன் ஐயா ரௌத்திரமாக மாறி அவனது இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்து விட்டார் சீனிவாசன் ஐயா பார்ப்பதற்கு புத்தரைப் போலவே காட்சியளிப்பார். அவ்வளவு அமைதியானவர். அவர் அவ்வளவு கோபப்பட்டு நாங்கள் யாரும் பார்த்ததில்லை. அப்படியே முகம் சிவந்து உக்கிரமாக மாறிப்போனார். தனது சக ஆசிரியரை மாணவன் கேலி செய்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ஆனால் எங்களுக்கோ அவர் இவ்வளவு கோபப்படுவார் என்று தெரியவில்லை. மாணவர்கள் சிறு பிள்ளைத்தனமாக பேசுவதை அவர் பொருட்படுத்தியிருக்க    வேண்டியதில்லை . என்னவோ அத்தோடு அவரிடம் திருக்குறள் ஒப்பிக்கும் ஆசையும் எனக்குப் போய்விட்டது. 

தி. கி. சுந்தரமூர்த்தி ஐயா என்று ஒரு தமிழாசிரியராக இருந்தார். அவர் வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசினால் வார்த்தைக்கு ஐந்து பைசா என்று அபராதம் விதிக்க சல்வார். அதற்கு ஒரு மாணவனை நியமித்து குறித்து வைக்க சல்வார். ஐயா இந்த பையன் ஆங்கிலத்தில் பேசினான். அவனுக்கு பைன் போட வேண்டுமென்றான். உடனே ஃபைன் என்ற வார்த்தைக்கு அபராதம் விதிப்பார். ஒரே வேடிக்கையாக இருக்கும். அவர் பாடம் நடத்தினால் ராகம் போடுவது போல இருக்கும். எனக்கு அபராதம் கட்டும் அளவுக்கு பைசா இல்லாத வகுப்பில் பேசுவதை தவிர்த்து விடுவேன். 

கோவிந்தன் ஐயா என்றால் வகுப்பு கலகலப்பாக தான் இருக்கும். நான் ஒரு முறை அரிச்சந்திரன் ஒரு மகா பொய்யன் என்றேன். உடனே அவர் யோக்கியன் வந்துட்டான் பாரு. உட்காருடா என்றார். 

"ஐயா முப்பத்து முக்கோடி தேவர் சாட்சியாக, அக்னி தேவன் சாட்சியாக கைவிட மாட்டேன் என்று திருமணம் செய்த தனது மனைவி சந்திரமதியை எவனோ விசுவாமித்திரன் என்ற சாமியாரிடம் கொடுத்த வாக்குக்காக ஏலம் கூறி விற்றானே அவன் எப்படி சத்தியவந்தனாக இருக்க முடியும்" என்று கேட்டேன். 

படிக்கிறத தவிர வெட்டியா ஏதாவது கேள்வி கேளு என்று குச்சி எடுத்து அடிக்க வந்தார். 

உடனே என் நண்பன் குமரேசன் "ஐயா ஒரு மாணவன் ஐயம் தெளிவுறுங்கால் வினா எழுப்பினால், ஐயம் தீர்த்து வைத்தலே முறை. அதை விடுத்து அடிப்பதும் மிரட்டுவதும் எவ்வகையில் நியாயம் ஐயா" என்றான். உடனே கோவிந்தன் அய்யா என்னை விட்டு விட்டு குமரேசனை அடிக்க பாய்ந்தார். "

" ஐயா என்னுடைய சந்தேகத்தை எடுத்து வையுங்கள் எதற்கு அவனை அடிக்கப் போகிறீர்கள்" என்று நான் கேட்க, அவர் கடுப்பாகி இரண்டு பேரும் வெளியே போங்கடா நாய்களா என்று திட்டிவிட்டார் . நான் தமிழ் கற்றுக் கொண்ட லட்சணம் அவ்வளவுதான். எப்படியோ தமிழில் தேர்ச்சி பெறும் அளவிற்கு எழுதி அறுபது மதிப்பெண் பெற்றுவிட்டேன். ஆனால் இலக்கணம் சுட்டுப்போட்டாலும் வராது.

சபாபதி என்று ஒரு பழைய தமிழ் படம் உண்டு. அதிலே கதாநாயகன் சபாபதி ரயிலை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருப்பார். அதில் கிளம்புகிற ஸ்டேஷன் என்று ஆரம்பித்து அந்த ரயில் போகின்ற பாதையை சொல்லிவிட்டு குப் குப் குப் சிக்கு புக்கு சிக்கு புக்கு சிக்கு புக்கு சிக்கு புக்கு என்று எல்லா பக்கமும் எழுதி நிரப்பிவிட்டு கடைசி இப்படியாக தானே அந்த ரயில் வந்து சேர்ந்தது என்று முடித்து இருப்பார். 

அதுபோல தென்னை மரத்தை பற்றி கட்டுரை கேட்டிருந்தால் படித்திருந்த பசு மாடு பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு கடைசியில் இப்பேற்பட்ட பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டி இருப்பார்கள் என்று எழுதி, எப்படியோ பக்கத்தை நிரப்பி மார்க் வாங்கியிருக்கிறேன். 

அதேபோல திருக்குறள் மனப்பாடப் பாடல்கள் எழுதும் போது 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்.                           தொழுதுண்டு பின் செல்வார். 

 என்று எழுதும் போது தொழுதுண்டு பின் செல்வார் என்பதை மறந்து விட்டு

 டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வார் 

என்று கிண்டலாக சொல்வது ஞாபகம் வர 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் கைகட்டி பின் செல்வார் என்று எதையாவது எழுதி சமாளிக்க முயற்சி செய்திருக்கிறேன். மாட்டிக் கொண்டு திட்டும் வாங்கியிருக்கிறேன். 

 எல்லா தமிழாசிரியர்களும் சிறப்பாக தான் படிக்க வைத்தார்கள். ஆனால் ராமலிங்கம் ஐயா சற்று வித்தியாசமானவர். 

அவரிடம் நந்தனாரை பற்றி ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார் என்று கூறுகிறார்களே என்று கேட்டபோது, அவர் மிகவும் கோபமாக அயோக்கியர்கள் சாதி வெறி பிடித்தவர்கள் அவரை உயிரோடு கொளுத்தி விட்டார்கள் என்று சொன்னார். அதேபோல ராமலிங்க அடிகளாரையும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் என்று கூறி நெருப்பில் தள்ளி கொன்று விட்டார்கள் என்று கூறினார். நந்தனார் சாதிவெறிக்கு பலியானார். ராமலிங்க அடிகளார் சனாதனத்தை எதிர்த்ததால் பலியானார் என்று விளக்கி பிற்போக்குசிந்தனைகளுக்கு எதிராக பாடம் நடத்துவார். 

நான் படிக்கும்போது பிற்காலத்தில் நன்பர்கள் சுபமுருகானந்தம், ஆசை தம்பி ஆகிய நண்பர்கள் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக மலர்வார்கள் என்றெல்லாம் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் நிச்சயமாக ராமலிங்க ஐயா போன்றவர்களுடைய கருத்துக்கள் அவர்களை உருவாக்க பயன்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன். நானும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்கு அவரும் ஒரு காரணம் ஆக இருந்தார் என்று நம்புகிறேன். 

நான் படிப்பு முடிந்த பின்னர் தான் தமிழ் மீது பற்று அதிகம் உண்டானது. எனது நன்பர் திரு வேலாயுதம் அவர்களிடம் ஒருமுறை கவிதைகளைப்பற்றி பேச்சுவந்தபோது எனக்கு தமிழ் இலக்கியங்களை பற்றி ஒன்றுமே தெரியாது ,எனக்கு தமிழில் அதிக ஆர்வமில்லையென்று பட்டென்று சொல்லிவிட்டேன்.உடனே அவருக்கு கோவம் வந்து விட்டது,இப்படி சொல்ல உனக்கு வெட்கமாய் இல்லையா என்று கடிந்துகொண்டார்.பொதுவாக அவர் கடிந்து பேசி நான் பார்த்ததில்லை.அவரை சமாதான படுத்த நினைத்து பதில் கூற ஆரம்பித்தேன். 

நான் மிகவும் மனம் சோர்வடைந்து போய் விட்டேன். அப்போது அவர் பாரதியினுடைய மிகச் சிறந்த கவிதை ஒன்று கூறினார்... 

"ஐந்து புலனை அடக்கி அரசு 

ஆண்டு மதியை பழகி தெளிந்து 

நொந்து சலிக்கும் மனதை - மதி நோக்கத்திற் செல்ல விடும்வகை கண்டோம்.... 

உண்மையின் பேர் தெய்வம் என்போம்- அன்றி 

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்:

 உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது 

உள்ள மறைகள் கதைகளென கண்டோம் கடலினை தாவும் குரங்கும்- வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும் 

வடமலை தாழ்ந்ததினாலே - தெற்கில் வந்து சமன் செய்யும் குட்டை முனியும், நதியினிலே முழுகி போய் - அந்த 

நாகர் மகளை விதியுறவே மனம் செய்த- திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம். 

....... 

புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை- போதிக்கும் கட்டுக்கதைகளை அவைதாம்... 


என்று பாரதியின் கவிதையை முழுமையாக உணர்ச்சி பொங்கி கூறுவார். 

ஒரு இனம் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அதன் மொழி சிறக்க வேண்டும். அந்த இனம் தன் மொழியை சிறப்புற காக்கவேண்டும் என்பார். மழைக்கு கூட பள்ளிக்கு ஒழுங்காக நான் இந்த அளவுக்கு தமிழை நேசிக்கிறேன் என்றால் படித்து பணியில் இருக்கும் நீங்கள் எந்த அளவுக்கு மொழியை நேசிக்க முடியும் என்று கேட்டார். 


ஒவ்வொரு தமிழாசிரியரும் இதே வேகத்தில் பணியாற்றினால் தமிழகம் இன்னும் முன்னேற்றம் அடைவது நிச்சயம்..... 


Wednesday, 25 December 2024


சில வருடங்களுக்கு முன் மதுரை திருமலை நாயக்கர் மகால்  சென்றபோது எடுக்கப்பட்ட படங்கள் 






















 

Sunday, 22 December 2024

படித்ததில் பிடித்தது...*🔴

 


இழந்தப் பின்னரே அருமை தெரிகிறது மனிதப் பிறவிகளுக்கு.


சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் அருகில் அமர்ந்திருந்தப் பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது 'அப்பா' என்று திரையில் வர அந்தப் போனை கட் செய்து கொண்டே இருந்தார்.


"ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுறார் பேசலாமே" என்று சொன்னேன்.


"சும்மா எங்கிருக்க எங்கிருக்கன்னு கேட்பாருங்க" என பதில் சொன்னார்.


அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஒன்றே ஒன்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தது.


"அப்பாவெல்லாம் பேசும் போதே பேசிடனும் பின்னால பேசாமல் விட்டுவிட்டோம்னு வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை" என சொல்ல நினைத்தேன்.


ஆனால் சொல்லவில்லை. காரணம் சிலவற்றின் அருமையை இழந்து தான் புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கும். சொன்னால் யாருக்கும் புரியாது.


சென்னையிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் குறைந்தது ஐந்தாறு முறையாவது அப்பாவின் போனிலிருந்து அழைப்பு வந்து விடும்.


"பஸ் ஏறிட்டியா?"


" சாப்டியா?"


"மேல்மருவத்தூர் தாண்டிட்டியா?"


"சிதம்பரம் வந்துட்டியா?"


என ஏதாவது ஒன்றைக் கேட்டு அழைத்துக் கொண்டே இருப்பார்.


"சரிப்பா..வந்துடறேன்ப்பா" என்ற பதிலை ஒவ்வொரு அழைப்பிலும் சொல்லிக் கொண்டிருப்பேன்.


இரவுப் பயணம் செய்தால் பேருந்து விடியற்காலையில் நான்கு மணிக்கு ஊரை நெருங்கும். அந்நேரத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பேன். அதனாலேயே மயிலாடுதுறை வரைக்கும் சென்று டீ குடித்து விட்டு விடிந்ததும் ஊருக்கு பஸ் ஏறுவேன்.


ஆனால் மிகச்சரியாக வைத்தீஸ்வரன் கோயிலைத் தாண்டியதுமே அப்பாவிடம் இருந்து அழைப்பு வரும்.


"எறங்கப் போறியா தம்பிய வரச் சொல்லட்டுமா?" என்று அரைத்தூக்கத்தில் தம்பியை எழுப்பி வண்டியைக் கொடுத்தனுப்புவார்.


எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் பேருந்து ஏறியதுமே அவரும் மனதளவில் என்னோடு பயணம் செய்து கொண்டிருந்தாரோ என்று தோன்றும்.


பகல் நேரப் பயணம் என்றால் இரவு எத்தனை மணியானாலும் நான் வீட்டிற்கு வரும் வரை விழித்திருப்பார்.


பேக்கை கழற்றி வைக்கும் போது துவைத்த லுங்கியைக் கையில் தருவார்.


"சாப்ட்டு படு" என்ற ஒரு ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டுத் தான் படுக்கச் செல்வார்.


மறுநாள் காலை எழுந்து தான் எல்லாவற்றையும் விசாரிப்பார்.


ஆனால் வீட்டிற்கு வந்து அரை நாளிலேயே எங்களுக்குள் ஏதோ ஒரு வாக்குவாதம் தொடங்கி விடும்.


"வரணும் வரணும்னு கூப்பிட்டது இப்படி சண்டை போடுறதுக்குத் தானா?" என்று கேட்பேன்.


"நான் எது சொன்னாலும் நீ மறுத்துப் பேசறியே" என்பார் அப்பா.


அடுத்த சில நிமிடங்களில் எதையாவது பற்றி நானே பேச்சுக் கொடுப்பேன்.


அல்லது அவரே ஏதாவது பேசுவார்.


எந்த சண்டையையும் இருவருமே நீடிக்க விட்டதே கிடையாது.


வாக்குவாதங்கள், சண்டைகள் வெறும் நீர்க்குமிழிகளாகவே எங்களுக்குள் இருந்திருக்கின்றன.


இந்த முறை மயிலாடுதுறையை நெருங்க நெருங்க அப்பாவிடமிருந்து அழைப்பு வருகிறதா என அனிச்சையாக போனை எடுத்துப் பார்த்துக் கொண்டேன். என்னையறியாமல் அப்பா என டயலில் டைப் செய்து பின் டெலிட் செய்தேன்.


வீட்டு வாசலில் நின்று "வாப்பா நல்லாருக்கியா?" என்று கேட்கும் அப்பாவின் குரலைக் கேட்க முடியவில்லை.


பூச்சரம் போடப்பட்ட அப்பாவின் போட்டோவை பார்த்துக் கொண்டு வீட்டிற்குள் வருவது சொல்ல முடியாத பெருந்துயரம்.


மகன், பெண் பிள்ளைகள் அனைவர்க்கும் இந்தப் பதிவு படித்து உணருங்கள்.....


அப்பாவைத் தவற விடாதீர்கள்...


உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*


*படித்ததில் பிடித்தது...*🔴



நன்றி.... முகநூல்.. படித்ததில் பிடித்தது.. 

தொண்டே நல்ல அறமாகும்

 தொண்டே நல்ல அறமாகும்


பல்லுயிர் காக்கும்

 பூவுலகை காப்பதும் தொண்டே...... 

 தன்னுயிர் போல் 

அனைத்துயிர் நேசிப்பதும் தொண்டே.... 

 பக்கத்திருப்பவன் துன்பம் காணச்சகியாமல் உழைப்பதும்

 தொண்டே..... 

 மானுடம் செழிக்க 

மனிதம் தழைத்திட உழைத்தலும 

தொண்டே... 

அன்னை தமிழ் அகிலமெங்கும் பரப்பிடுதலும் தொண்டே.... 

அனைத்தும் பொதுவாக்கி

அகிலம் காத்திடுதலும் தொண்டே.... 

அகிலத்திற்கான தொண்டே அறமாகும்.... 

அதுவே என்றும் நலமாகும்.

Thursday, 19 December 2024

 சில வருடங்களுக்கு முன் தனுஷ்கோடி சென்றபோது எடுக்கப்பட்ட படங்கள் 

































ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...