சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 5 November 2024

இந்தி படிக்கப் போனேன்

 எனக்கு 12 வயது இருக்கும்போது, அதாவது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என் தூரத்து உறவினர் அண்ணன் முரளிதரன் என்னுடன் தியாகராஜர்  நன்முறை உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். என் அப்பாவும் அவரது அப்பாவும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்காலத்தில் இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் அதனால் என் மகன் முரளிதரன் இந்தி படித்துக் கொண்டிருக்கிறான். நீங்களும் உங்கள் பையனை படிக்கச் சொல்லுங்களேன் என்று சொல்லி இருக்கிறார். அதனால் என் அப்பாவும் என்னையும் இந்தி படிக்கச் சொன்னார்.

எனக்கு ஹிந்தி என்றாலே ஒரு பயம். எனக்கு 6, 7 வயது இருக்கும் போது போது  மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தது. என் வீட்டின் அருகே சிவாஜிகணேசன் ரசிகர் மன்ற படிப்பகம் இருந்தது. அவர் காங்கிரஸ்காரர். எனவே ஒரு காங்கிரஸ் கொடிக்கம்பமும் நடப்பட்டு காங்கிரஸ் கொடியேற்றப்பட்டிருந்தது. அப்பொழுதெல்லாம் மதுரையில் நிறைய படிப்பகங்கள் இருந்தன. கட்சி சார்புள்ளதாகவும் கட்சி சார்பற்றும் படிப்பகங்கள் நடைபெற்று வந்தன. அதில் தினசரி பத்திரிகைகள் போடப்பட்டிருக்கும். கூடவே குமுதம் கல்கி ராணி போன்ற வார பத்திரிகைகள், பேசும் படம் பொம்மை போன்ற சினிமா பத்திரிகைகள் எல்லாம் போடப்பட்டிருக்கும். பத்திரிகைகள் படிக்க எல்லோரும் வந்து போவார்கள். நாங்கள் சிறுவர்களும் சினிமா பத்திரிகைகளையும், வார பத்திரிகைகளையும் படிக்க அல்லது  படிப்பது போல படம் பார்ப்பதற்கு  செல்வோம்.புத்தகத்தை கிழித்து விடுவோம் என்று  பெரியவர்கள் எங்களை துரத்தி விடுவார்கள். இருந்தாலும் ஓரளவுக்கு எழுத்துக்கூட்டி படிப்பதற்கு இந்த படிப்பகங்கள் உதவியாக இருந்தன 

அந்த நேரத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது  போலீஸ் தடியடி காரணமாக மாணவர்கள் பலர் காயம் பட்டதாலும் துப்பாக்கி சூட்டில் இறந்ததாலும் மாணவர்கள் கொந்தளித்து கலவரங்களில் இறங்கினர். ஆங்காங்கே  மாணவர்களும் இந்தி எதிர்ப்பாளர்களும் திரண்டு அலுவலகங்களையும் சிவாஜி ரசிகர் மன்ற படிப்பகங்களையும் சூறையாடி கொடி மரங்களை பிடுங்கி எறிந்து தங்கள் எதிர்ப்பினை  காட்டிக்கொண்டிருந்தனர் . 

ஒரு நாள் மாலை ஏராளமான எங்கள் வீட்டில் அருகில் இருந்த சிவாஜி ரசிகர் மன்றமும் சூறையாடப்பட்டு கொடிக்கம்பம் பிடுங்கி எறியப்பட்டது. எங்கள் வீட்டில் இருந்த பெரியவர்கள் எங்களை வெளியே வராமல் வீட்டுக்குள் அடைத்தனர்.  ஜன்னல் வழியாக இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். 

பிறகு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காட்சிகள் மாறின. இந்தி கட்டாயம் படிக்க வேண்டியதில்லை என்று நிலை வந்து. ஆனால் இந்தி படிப்பதற்கு தடை ஏதும் ஏற்படவில்லை. விருப்பமுள்ளவர்கள் படித்துக் கொள்ளும் சூழல் இருந்தது. இருந்தாலும் எனக்கு ஹிந்தி படிக்க பெரிய அளவுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. 

முரளி அண்ணன் ராமநாதபுரம் சாலையில் அமைந்துள்ள சௌராஷ்டிரா உயர்நிலைப் பள்ளிக்கு எதிர் சந்தில் இருந்த தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபா நடத்தக்கூடிய ஒரு ஹிந்தி பள்ளிக்கு காலை ஒரு மணி நேரம் படித்துவிட்டு பள்ளிக்குச் சென்றார் என்னையும் அங்கு பிரார்த்தனை படிக்க பிராத்மிக் படிக்க சேர்த்து விட்டார்.

எங்கள் தியாகராஜர் நன்முறை உயர்நிலைப்பள்ளி பத்து மணிக்கு ஆரம்பித்தாலும் ஒரு மணி நேரம் முன்னதாக ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதால் ஒன்பது மணிக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும். நான் முனிச்சாலையிலிருந்து தெப்பக்குளத்திற்கு நடந்தே தான் பள்ளிக்கு வர வேண்டும். 9 மணி பள்ளிக்கு 8 மணிக்கு கிளம்பினால் தான் தாமதம் இல்லாமல் போய் சேர முடியும். இதில் இந்தி படிப்பதற்கு ஒரு மணி நேரம் என்றால் 7:00 மணிக்கே கிளம்ப வேண்டும். ஒரே வெறுப்பு. வேறு வழி இல்லாமல் கிளம்பி சென்றேன். 

அங்கு பெரும்பாலும் சௌராஷ்டிர இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தான் அதிகம் இந்தி படிக்க வருவார்கள் மற்றவர்கள் மிக மிக குறைவு.இயற்கையாகவே சவுராஷ்டிரா மக்களுக்கு இந்தி கற்றுக்கொள்வதில் அதிக சிரமம் இருக்காது.அவர்களது தாய்மொழி ஓரளவிற்கு இந்தியோடு ஒத்துப்போவதால் அந்த சிறுவர்கள் வேகமாகவும் நன்றாகவும் கற்று தெரிவார்கள்.நமக்கு கொஞ்சம் பொறாமையாகவும்,எரிச்சலாகவும் இருக்கும்.அவர்கள் புத்தகத்தின் பாதிப்பகுதிக்கு செல்லும்போது என்னால் ஓரிரண்டு பாடங்கள் கூட முடிக்க முடியவில்லை. காலையிலேயே வேகமாக சென்று இந்தி படித்துவிட்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை.அடிக்கடி இந்தி வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு பள்ளிக்கு எதிரில் உள்ள தெப்பக்குளம் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பொழுதை ஒப்பேற்றிவிட்டு பள்ளிக்கு செல்வது வழக்கமாகி விட்டது.

இடை இடையே இந்தி வகுப்புக்கும் சென்று வருவேன். மட்டம் போடுவது முரளி அண்ணன் மூலமாக வீட்டிற்கு தெரிந்து விட்டால் சிக்கல் ஆகிவிடும் என்று அவ்வப்போது போய் வருவேன். எப்படியோ பிராத்மிக் படிப்பு முடிந்து பரீட்சை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறு வழி இல்லாமல் பணம் கட்டி பரீட்சை எழுத சென்றேன் சேதுபதி பள்ளிக்குச் சென்றேன். விடைத்தாளில் எனது பெயரை தவிர வேறு எதுவும் உருப்படியாக எழுத தெரியவில்லை. பக்கத்தில் இருப்பவர்களை எட்டிப் பார்த்து சில பதில்களை எழுதினேன். அப்புறம் கேள்விகளை எழுதி பக்கத்தை நிரப்பி கொடுத்து வந்தேன். தேர்வு முடிவு வந்த பிறகு தான் நான் இந்தி படித்த லட்சணம் அப்பாவுக்கு தெரிந்தது 200க்கு 5 மதிப்பெண்கள் எப்படியோ பெற்றுவிட்டேன். அத்தோடு இந்தி படிப்புக்கு மூட்டை கட்டி ஆகிவிட்டது...

அப்பாவுக்கு வருத்தம் தான், இருந்தாலும் திட்டவில்லை. ஆனால் பிற்காலத்தில் நான் எப்பொழுதாவது தொலைதூரக் கல்வியில் படிக்கலாம் என்று அப்பாவிடம் கூறும் போது இந்தி படித்தது மாதிரி ஆகிவிடாதே என்று கிண்டல் அடிப்பார் அவ்வளவுதான்.

நாம் தான் ஒழுங்காக இந்தி படிக்கவில்லையே என்று வருத்தப்பட்டு என் மகனை இந்தி படிக்க சேர்த்து விட்டேன்.அவனும் என்னுடைய கட்டாயத்தால் ராஷ்ட்ர பாஷா வரை படித்தான்.அவனது படிப்பிற்கு இடைஞ்சல் என்று அதோடு நிறுத்திவிட்டான்.ஒரு அல்ப சந்தோசம் கிடைத்தது.

பிற்காலத்தில் எனது நாற்பதாம் வயதில் டெல்லியில்  பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது..எல்லோரும் பயமுறுத்தினார்கள் இந்தி தெரியாமல் என்ன செய்யப் போகிறாய் என்று. சரி பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டேன்.நண்பர் சுதந்திரராஜன் சார் தான் சொன்னார், அது பெரிய விஷயமில்லை.தேவை ஏற்படும்போது எளிதில் கற்றுவிடுவோம் என்றார் . 

ரயிலில் ஆந்திராவை கடக்கும்போது சாதாரண கடலை மிட்டாய் இருப்பவனிலிருந்து தேநீர் சிற்றுண்டி விற்பவன்  வரை எல்லோரும்  நன்றாய் இந்தியில் பேசினார்கள்.நான் அங்கு சென்ற பிறகு என்னுடன் பணிபுரியும் தங்கப்பன் பிள்ளையோடு தேநீர் சாப்பிட கடைக்கு சென்ற போது,கடையிலிருந்து இந்தி பத்திரிக்கையை எடுத்து கடகடவென்று எழுத்து கூட்டி படித்தேன்.ஆனால் எனக்கு அர்த்தம் தெரியாது.எழுத்து கூட்டி படிக்க மட்டுமே தெரியும்.படித்தபின் அர்த்தம் தெரியாமல் அவரிடம் கேட்டேன்.அவர் சிரித்தவாறே பேசுகிற நடைவேறு .எழுத்து நடைவேறு .சுத்தமான இந்தியில் பேசினால் பைத்தியக்காரப்பட்டம் தான் கிடைக்கும் என்றார்.

என்னுடைய நண்பர் ராஜேந்திர சிங் தான் அடிக்கடி கூறுவார். லண்டனில் போய் சுத்தமான இலக்கிய ஆங்கிலத்தில்  பேசினால் கையில் சில்லறையை வைத்துவிட்டு செல்வார்கள்.அதாவது பிச்சைக்காரன் பாவம் என்பது போல .

எங்கள் ஆசிரியர் பொன்பாண்டியன் தான் அடிக்கடி சொல்லுவார்.மொழி என்பது கருத்துக்களை,எண்ணங்களை  வெளிப்படுத்தும் சாதனம் மட்டுமே .தேவை இல்லாமல் பயப்படக்கூடாது.நடைமுறை வாழ்க்கையில் உள்ள மொழி முக்கியம்.ரயிலுக்கு  டிக்கெட் முன்பதிவு செய்ய கவுண்டரில் போய் நின்று  "அய்யா சென்னைக்கு அதிவிரைவு புகையிரதத்தில் குளிர்பதன முதல் வகுப்பில் படுத்து செல்வதற்கான  பயணம் செல்வதற்கு முன்பதிவு செய்ய உதவுங்கள்"என்று சுத்தமான ,பிழையில்லாத மொழியில் கேட்டால் என்ன கிடைக்கும்.  என்று நினைத்துப்பாருங்கள் என்பார்.

தங்கப்பன் பிள்ளையும் அதையே தான் சொன்னார்.அய்யா நன்றாய் இலக்கணத்தோடு படியுங்கள் தப்பில்லை,ஆனால் மொழியை முறையாய் படித்து வந்தால் தான் வெளியூருக்கு வேலைக்கு போக்கமுடியும் என்றால் அது பைத்தியக்காரத்தனம் என்றார்.எல்லா ஊரிலும் வேலைக்கு போனபின்னர் தேவையின் காரணமாகவே கற்றுக்கொண்டவர்கள் தான் மொத்தபேரும் என்றார் .


ஆனால் இன்னமும் நிறைய பைத்தியங்கள் இந்தி படித்தால் தான் வேலைக்குப் போக முடியும்  என்கின்றனவே ..என்ன செய்ய.


3 comments:

  1. மிக அருமையான கதை, பெரும்பாலானோர் தங்கள் குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற ஹிந்தி வகுப்பை அனுபவித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...