மதுரை சினிமா பைத்தியங்களின் முக்கிய நகரமாக இருந்தது என்று நான் சொன்னால் நிச்சயமாக உங்களுக்கு கோபம் வரும். இல்லையா.. . Cinema Fans சினிமா விசிறி என்று சொல்லுகிறார்களே அதன் அர்த்தம் என்ன தெரியுமா? Cinema Fanatics என்பதன் சுருக்கம் தான் Cinema Fans சினிமா ஃபேன்ஸ் (சினிமா விசிறி) என்று ஆனது.
சரி. அதற்கும் மதுரை சினிமா பைத்தியங்களை நகரம் என்று சொன்னதற்கு என்ன நியாயம் என்று யோசித்துப் பார்க்கலாம்.நான் எல்லா சினிமா ரசிகர்களையும் சினிமா பைத்தியம் என்று சொல்லவில்லை. சினிமா பைத்தியங்கள் நிறைந்த நகரம் என்று தான் சொல்கிறேன்.
எனது சின்ன வயதில் பரமேஸ்வரி தியேட்டருக்கு ஆங்கில படம் காண செல்வோம். அங்கு ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் சீன்காணரி ரசிகர் மன்றத்திற்கான மிகப்பெரிய புகைப்படம் கண்ணாடி பிரேமிட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்ததை பார்த்திருக்கிறேன். அதேபோல அநேகமாக எல்லா நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றம் வைத்திருந்த ஊர் மதுரையாக தான் இருக்கும். எனது நண்பர் ஒருவர் கூட மூன்று நான்கு நடிகர்களின் ரசிகர் மன்ற லெட்டர் பேடுகளை வைத்திருந்ததை நானே பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு ரசிகர் மன்றம் இருப்பதாக அந்த நடிகர் நடிகைகளுக்கு தெரியுமா என்று தெரியாது. ஒரு நண்பர் விஜயலலிதா ஜோதிலட்சுமி ஆகியோருக்கு கூட ரசிகர் மன்றம் வைத்திருந்தார். நாங்கள் குடியிருந்த வீட்டின் அருகில் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் ரசிகர் மன்றம் என்று ஒன்று இருந்தது அந்த மன்றத்தின் சார்பாக நேரடியாக ஜெய்சங்கரை போய் சென்னையில் சந்தித்து வந்ததை கதை கதையாக அவர்கள் பீற்றிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். சின்னஞ்சிறு நடிகர்களுக்கே ரசிகர் மன்றம் வைத்திருந்த காலத்தில் பிரபல நடிகர்களான எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் எப்படி எல்லாம் கூத்தடித்திருப்பார்கள்.
மதுரையில் சினிமா பட விளம்பரங்கள் மிக வேடிக்கையாக செய்து இருப்பார்கள். ஒரு திரைப்படம் வந்தால் தியேட்டரில் மிகப்பெரிய கட்டவுட் வைப்பது, தெருவெங்கும் போஸ்டர் ஓட்டுவது என்பது சகஜமான ஒன்று. ஆனால் அதைத்தாண்டி மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டிகளிலும் திரைப்படத்திற்கான விளம்பர தட்டி வைத்து, இரவு நேரங்களில் பெட்ரோமாக்ஸ் லைட்டை தலையில் வைத்துக் கொண்டு முன்னால் பேண்ட் வாத்தியம் அல்லது ஏதாவது வாத்தியம் வாசித்துக் கொண்டு தெருவெங்கும் ஊர்வலமாக போய் நோட்டீஸ்கள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
1929 மதுரை இம்பீரியல் தியேட்டர் திரைப்பட விளம்பர வண்டி.சில நேரங்களில், குறிப்பாக படம் வெளியிடும் காலங்கள் அல்லது வெள்ளி விழா காலங்களில் கரகாட்டம் போன்று ஏதாவது ஆட்டம்பாட்டங்களுடன் விளம்பரங்கள் நடைபெறும். ரசிகர் மன்றங்கள் சேர்ந்து விட்டால் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது. சில நேரங்களில் எதிர் ரசிகர் மன்றங்களோடு மோதல் கூத்துக்களும் நடைபெறும். ஆதி காலத்தில் மதுரை சினிமா தியேட்டர் விளம்பரத்தை, தட்டி விளம்பரமாக கழுத்தில் மாட்டிக் கொண்டு நகரெங்கும் சுற்றி வந்த ஒரு பழைய வீடியோ தொகுப்பு ஒன்றை பார்த்திருக்கிறேன்.
அதே போல சினிமா தியேட்டரில் ரசிகர்கள் அடிக்கும் கூத்துக்கு எல்லையே இருக்காது.தாங்கள் விரும்பும் நடிகரின் திரைப்படம் வெளியாகும் நாள் அன்று அந்த படத்தின் ரீல் பெட்டிகளை ஆட்ட பாட்டத்துடன் எடுத்து ஊர்வலமாகவருவார்கள்.வெடி வெடித்து கொண்டாடுவார்கள்.அந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.படம் தியேட்டரில்திரையிடும் போது தங்கள் நாயகரின்பெயரினை போடும்போது விசில் சுத்தம் காதைப்பிளக்கும்.ஜிகினா பேப்பர் துகள்களை விசிறியடிப்பர்.வெளிச்சத்தில் ஜெகஜோதியாய் இருக்கும்.எப்பொழுதாவது ரீல் அறுந்து விட்டாலோ ,கார்பன் விலகி வெளிச்சம் வராமல் திரை இருண்டாலோ,வசவுகள் விசில் சத்தங்கள் கதை பிளக்கும்.டிஜிட்டல் திரைப்படங்கள் வந்தபின் ரீல் அறுந்து போவதற்கு வாய்ப்பு இல்லை. .மேலே சொல்லப்பட்ட பல காட்சிகள் நான் கண்ணாற கண்டு ரசித்தது தான். கப்சா இல்லை...
மதுரையில் திரையரங்குகளில் முன்னோடியாக இருந்தவை இம்பீரியல் டாக்கிஸ், சிட்டி சினிமா. இரண்டுமே மிகப் பழமையானவை.
இம்பீரியல் டாக்கிஸ் முக்கிய பிரமுகர்கள் கண்டு ரசித்த திரையரங்கம். ஆனால் எங்கள் காலத்திலோ ஊரில் உள்ள மிகவும் குப்பையான தியேட்டராக இருந்தது.
எங்கள் சிறுவயதில் இம்பீரியல் தியேட்டரில் டிக்கெட் 25 பைசா தான். ஆனால் ஒரு வினோதமான காட்சியை இங்கே காணலாம். மாடி முழுக்க பெண்களுக்கு ஒதுக்கி இருப்பார்கள். கீழேதான் ஆண்களுக்கு இடம். ஆனாலும் மாடி டிக்கெட் கட்டணமும் 25 பைசா தான். பெண்கள் பெரும்பகுதி வரமாட்டார்கள்.
சிட்டி சினிமா
மதுரை சிட்டி சினிமா புகழ் பெற்ற தியேட்டராக இருந்திருக்கிறது.எம் கே டி தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படம் சக்கை போடு போட்டியிருக்கிறது .அந்த லாபத்தில் தான் சிந்தாமணி தியேட்டர் கட்டப்பட்டதாக பெரியவர்கள் சொல்லுவார்கள்.ஆதிகாலத்தில் புதிய திரைப்படங்கள் போடப்பட்டாலும் பிற்காலத்தில் பழைய படங்கள் மட்டுமே போடப்பட்டு ,பின் நடத்தமுடியாமல் மூடிவிட்டனர்.தங்கம் தியேட்டர்
மதுரையில் ஒரு சுவாரசியமான திரையரங்கு ஒன்று உண்டென்றால் அது ரீகல் தான்,பகலிலே விக்டோரியா ஹால் ஆக நூலகமாகவும் ,மாலையில் ரீகல் திரையரங்காகவும் செயல்படுகிறது. ரீகல் தியேட்டர்
அப்போதெல்லாம் ஹிந்தி பாட்டுக்கள் அநேகமாக எல்லா டீக்கடைகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதேபோல இசை கச்சேரிகளும் ஹிந்தி பாடல்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் தற்பொழுது அந்த நிலைமையில்லை.